கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும்
டாக்டர். S.ஆபிதீன்
[ கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம்.]
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர்களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.
அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.
இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …
கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே… ! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர்.
மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !
இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.
இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும்.
மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : 99658 92706
E-mail : abideen222270@yahoo.com
source: http://www.mudukulathur.com/educationdetails.asp?id=326