அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல்
[ ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே! ]
மனிதனை குழப்பத்தில் ஆக்குவதிலும் ஹராமில் விழச்செய்வதிலும் ஷைத்தான் மிக ஆர்வமாக உள்ளான். இதனால் தான் அல்லாஹ் நம்மை இவ்வாறு எச்சரிக்கின்றான்.
விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான்…. (அல்குர்ஆன் 24:21)
ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச் செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று. இதனால்தான் மார்க்கம் இப்பாதையை அடைக்கிறது.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான்.(அறிவிப்பவர்: உமர்ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத்)
இன்றைய தினத்திற்கு பிறகு தனித்திருக்கும் பெண்ணிடம் தன்னுடன் ஒருவரோ இருவரோ இல்லாது -தனிமையாக- செல்லக்கூடாது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
சகோதரனின் மனைவி, வேலைக்காரப் பெண் மற்றும் இவர்கள் போன்ற எந்த அன்னியப்பெண்ணுடனும் வீட்டிலோ, அறையிலோ, வாகனத்திலோ தனித்திருத்தல் கூடாது. நோயாளியான பெண் மருத்துவருடனோ, அல்லது அந்நிய ஆணுடனோ தனித்திருப்பது கூடாது.
அதிகமானோர் தனது மனக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்தோ, அல்லது பிறர் மீது நம்பிக்கை வைத்தோ இதில் அலட்சியமாக உள்ளனர். மார்க்கத்திற்கு புறம்பான இந்த நம்பிக்கையே மானக்கேடான பல செயல்களுக்கு காரணமாக அமைகிறது. மேலும் வாரிசில் கலப்படம் ஏற்படுவதற்றும் விபச்சாரக் குழந்தை பிறப்பதற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்
இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்… என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.
சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி… போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)
நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத்)
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)
நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)
ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)
நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்!
ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே!
source: http://www.nouralislam.org/tamil/islamkalvi/indextamil.html