21. இறைமறுப்புக்குப் பிரதான காரணம் என்ன?
இனி, நாஸ்திகர்கள் இறைவனையும், மறுயையையும் மறுத்துக் கூற பிரதான காரணங்கள் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம்.
ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் (ஆதத்துக்கும் ஹவ்வாவுக்கும்) பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், ஜாதிகளையும், பிரிவுகளையும், எற்றத் தாழ்வுகளையும், விரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்கள் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர்.
சமத்துவ, சகோதரத்துவம் உள்ள சீரான வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை. மனித சமுதாயத்தின் பெரும் தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன.
நாய்க்கிருக்கும் அந்தஸ்த்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையையும் பார்க்கிறோம். (உயர் ஜாதியினர் நாயை தொடுவது தீட்டு என்று கூறுவதில்லை.) ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும், இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது.
இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களைச் சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகத்தானே பெரும்பான்யையினர் சிறுபான்மையினருக்கு கட்டுப்படுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்று விடுகின்றது என்று நிலைநாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்துவிடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது நம் ஊர் நாஸ்திகர்களின் எண்ணமாகும்.
நாஸ்திகர்கள் கூறக் கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அவை அனைத்தையும் அகற்றி, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்க அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் வரவேற்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை அமைக்க அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான ஒரு திட்டமாகும்.
அவர்களின் திட்டம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மர்க்கத்தை–நேர்வழியை–மதங்களாக்கி–மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நாஸ்திகர்கள் உணர வேண்டும்.
22. கள்ளை ஒழிக்க தென்னையை ஒழிப்பதா?
கள் குடிப்பது கூடாது. குடி குடியைக் கெடுக்கும், இது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் நல்ல முயற்சி. தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று அறிவாளிகள் சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும்.
குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லை என்பதற்காகக் குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படி எல்லாம் பெற்றுக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை ஒரு போதும் விடமாட்டான். இதேபோல் மூட்டைப் பூச்சி தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான் அறிவுள்ள மனிதன். வீட்டிலிருந்து கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்.
இப்படிப்பட்ட அறிவற்ற ஒரு முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக, இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்குப் பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னையிலிருந்து பெறப்படும் பல பலன்களை மனிதன் இழப்பது போல், சமூகத்தில்; ஒரு சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது, சமுதாயத்தில் பெரும்பான்iயினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச்செய்வதாகும்.
நாஸ்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைபடும் காரியங்களிலேயே, அவற்றைப் பெற்றுக் தருவதாகச் சொல்லிக் கொண்டு, ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர். அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்தும் பெறுகின்றனர். அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன. இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசியமானவற்றை அவசியமில்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாஸ்திகர்கள் சொன்னால், அதை எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றறைச் சொல்கிறோம்.
23. உணவின் அவசியத்தை வைத்து நடைபெறும் அக்கிரமங்கள்:
மனிதனுடைய வாழக்கைக்கு உணவு பிரதானமானதாக இருக்கிறது. உணவில் பிரதானமாக நாம் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே அரிசி நமக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. இந்த அரிசியை மக்களுக்கு கிடைக்கச்செய்ய அரிசி வியாபாரிகள் என்ற இடைத்தரகர்கள் உண்டாகி விடுகிறார்கள். இந்தத் தரகர்களின் எண்ணிக்கை அரிசியை இவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடும் மக்கள் தொகையைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. இவர்கள் முறையாக அரிசியைப் பெற்று ஒரு நியாயமான ஆதாயத்தோடு கலப்படம் எதுவும் செய்யாமல் மக்களுக்குக் கொடுத்தால், இது உண்மையில் ஒரு சேவையாகும்.
ஆனால் இந்த நாட்டில் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? மக்களுக்கு அரிசியின் அத்தியாவசியத் தேவையை அறிந்து கொண்ட அந்தத் தரகர்கள் அந்த அரிசியில் மண்ணையும், கல்லையும் கலந்து அரிசி என்று விற்கிறார்கள். அதாவது மக்களின் அவசியத் தேவையைப் பலகீனமாகக் கருதி கல்லையும், மண்ணiயும் அரிசியாக்கிக் காசாக்குகிறார்கள். இந்த ஈனச் செயலை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் செய்யமாட்டான். இந்த ஈனச் செயலுக்குரிய கொடிய தண்டனையை மறுமையில், தான் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான இறை நம்பிக்கையுள்ள எவனும் செய்ய மாட்டான். மனித உருவத்தில் வாழும் மிருகங்கள் மட்டுமே இந்தச் செயலைச் செய்யமுடியும்.
இங்கு நாஸ்திகர்கள், நமக்கு அரிசி தேவையிருப்தால்தானே இந்த ஈனர்களுக்கு கல்லையும், மண்ணையும் அரிசியாக்கி காசாக்கும் சந்தர்ப்பம் எற்படுகிறது. எனவே மக்களே யாரும் அரிசி வாங்காதீர்கள். அரிசியை சமைத்து சாப்பிடாதீர்கள் என்று போதிக்க முன்வருவார்களா?, அப்படி அவர்கள் வந்தால் அவர்களை யாரும் அறிவாளிகளாக ஏற்றுக் கொள்வார்களா? இப்போது மனிதன் உபயோகிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் பெருத்து விட்டதை அறிகிறோம். கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள்கள் மட்டுமே தப்பியுள்ளன.
அதிலும் நாஸ்திகர்கள் மக்களிடையே இருந்த இறைநம்பிக்கையை போக்கிய பின் இந்த உணவுப் பொருட்களில் கலப்படங்கள் மிக அதிகமாகி விட்டன என்பதை அனுபவ வாயிலாகவே அறிகிறோம். இந்த அளவு உணவுப்பொருள் கலப்படங்கள் மலிந்த மனித சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைப்பதைப் பார்க்கும் நாஸ்திகர்கள், மக்களே! உணவு சாப்பிடாதீர்கள், பட்டினியாக இருங்கள் என்று சொல்வதில்லை.
24. கல்வியின் பெயரால் நடக்கும் அநியாயங்கள்!
அடுத்து, மனிதன் கல்வியறிவை அடைய விரும்புகிறான். மக்களுக்கு கல்வியைப் போதிக்கிறோம் என்று ஒரு சாரார் கிளம்புகிறார்கள். உண்மையில் இதனை ஒரு சேவையாகக் கருதி அவர்கள் செய்வார்களானால், அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் நாட்டில் இன்று என்ன நடந்து கொண்டிருகிறது?
சாதாரணமாக, எல்.கே.ஜி யிலிருந்து கல்வியின் பெயரால் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் அநியாயங்கள். லஞ்ச லாவண்யங்கள், தில்லுமுல்லுகள், மோசடிகள் சொல்லித்தீராது, எழுதித்தீராது. நாஸ்திகர்களுக்கும் இவை அனைத்தும் நன்றாகவே தெரியும். கல்வியின் பெயரால் ஒரு சிறுவர்க்கம் சமுதாயத்தையே ஏய்த்துப் பிழைக்கின்றது. எனவே இந்த சமுதாயத்திற்குக் கல்வியே தேவையில்லை. கல்வி அறிவற்ற ஆதிகால வேடுவர்கள் போல் வாழ்க்கையை நடத்துவோம் என்று நாஸ்திகர்கள் சொல்ல மாட்டார்கள்.
இப்படி மனித சமுதாயத்திற்கு, மனித வாழ்விற்கு அத்யாவசியமான அனைத்துத் துறைகளிலும் இடைத்தரகர்களாக ஒரு சிறு வர்க்கம் புகுந்து கொண்டு, முழுச் சமுதாயத்தையும் ஏமாற்றி வருகின்றனர். மனிதனுக்குத் தேவை என்று வந்துவிட்டால் அந்த தேவையின் அளவை அனுசரித்து ஒரு சிறுவர்க்கம், அதை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாததாகவே மனித வாழ்க்கையில் அமைந்துவிடுகிறது.
மனிதன் இவ்வுலகில் வாழ்வதாக இருந்தால் அவனது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டே ஆக வேண்டும். தேவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைத் துறந்து வாழ் என்று மனிதனுக்கு உபதேசம் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏமாற்றுகள் நடந்தும், அந்தத்துறைகள், மனித வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று கூறதுணியாத நாஸ்திகர்கள், மனித சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையான இறை நம்பிக்கை மட்டும் அவசியமில்லை என்று கூறத்துணிவதேன்?
மனித வாழ்க்கையின் வெற்றியே அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் சீர்கேடுகள் சீராக, இறைநம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் மிகமிக அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் அத்தியாவசியத்;திற்கு ஏற்றாற் போல், அந்தத் துறையில் ஒரு சாரார் புகுந்து. தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக அரிசியின் பெயரால், அரிசியில் கல்லையும், மண்ணiயும் கலப்பதுபோல், சத்திய மார்க்கத்தில், சத்திய மார்க்கத்தின் பெயரால் அசத்திய மதங்களைக் கலக்கத்தான் செய்வார்கள்.
அரிசியில் கல்லிருந்தால், அதிலுள்ள கல்லை அகற்ற முயற்சிக்க வேண்டுமே அல்லாமல், அரிசியைச் சாக்கடையில் கொட்டத்துணியக் கூடாது. அதேபோல் சத்தியமார்க்கத்தில், கலக்கப்படுள்ள அசத்திய மதங்களை அகற்றப் பாடுபட வேண்டுமேயல்லாது, சத்திய மார்க்கத்தையும் அழித்துவிட முற்படக் கூடாது. இது மனித சமுதாயத்திற்கு பயங்கர நஷ்டத்தையும், அழிவையும், வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதை நாஸ்திகர்கள் நிதானமாக சிந்தித்து விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்