அடக்கஸ்தளங்கள் வணக்கஸ்தளங்களாக ஓர் இஸ்லாமியக் கண்னோட்டம்
மௌலவி சிபான், பலாஹி
இந்த உலகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்ற அனைத்து விதமான கோபுரங்கள், கட்டங்கள் என பல்வேறுபட்ட படைப்புக்களிலெல்லாம் இறைவன் தனக்கென்று உரிமை கொண்டாடுகின்ற ஒரு வஸ்து இருக்குமாக இருந்தால் அது இறை இல்லங்களாகத்தான் இருக்க முடியும். இக்கருத்தைத்தான் புனிதமிக்க அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்குர்ஆன் 72:18)
இறை இல்லங்கள் எந்த அளவு புனிதமானவை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுதான் இருக்க முடியும்? இஸ்லாமிய மார்க்கத்தில் ஷஹாதா கலிமாவை மொழிந்தவுடன் ஒரு முஸ்லிமுக்கு முதன்மையான கடமை தொழுகை என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். இஸ்லாத்தின் ஏனைய பல வணக்கங்களுக்கு இடங்கள் முக்கியத்துவப்படுத்தப்படா விட்டாலும் குறித்த ஐவேளைத் தொழுகைகளுக்கு இடங்கள் முக்கியம் வாய்ந்தவை என இஸ்லாம் கருதுகிறது. அத்தகைய இடங்களைத்தான் இறைவன் தனக்குறிய ஆலயங்களாக பிரகடனப்படுத்துகின்றான்.
தௌஹீதுக்கு எதிர்ப்பதம் ஷிர்க்காகும், ஸுன்னாவுக்கு எதிர்ப்பதம் பித்ஆவாகும், இவ்வாறாக இஸ்லாத்தின் அடிப்படையான விடயங்களுக்கு எதிர்ப்பதங்கள் இருப்பதைப் போன்று அல்லாஹ் தனது ஆலயங்கள் என்று பிரகடனப்படுத்துகின்ற மஸ்ஜித் என்பதற்கும் பல எதிர்ப்பதங்களை வைத்திருக்கின்றான். அவற்றில் பிரதானமானதுதான் மக்பரா என்றழைக்கப்படக் கூடிய அடக்கஸ்தளம் என்பதாகும். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் ஆதார பூர்வமான செய்தியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.
“அடக்கஸ்தளம் மற்றும் குழியழறை ஆகிய இரண்டையும் தவிர உள்ள பூமியிலுள்ள அனைத்து இடங்களும் மஸ்ஜிதாகும்’” (இப்னு மாஜா-745) இச்செய்தியில் இறை இல்லங்களுக்கு எதிரானவைகளாக இரண்டு இடங்களை இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். அவற்றில் முதன்மையானது அடக்கஸ்தளமாகும் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.இன்றைக்கு அதிகமான முஸ்லிம்கள் இவை பற்றி பெரிதாக அளட்டிக் கொள்வதில்லை.
அடக்கஸ்தளங்கள் ஒரு காலமும் வணக்கஸ் தளங்களாக்கப்படக் கூடாது என்பதில் உத்தமர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகக் கடுமையான கட்டளைகளைப் பிரப்பித்திருந்தும் இன்றைக்கு சூபியாக்கள் என்றழைக்கப்படக் கூடிய தரீகா வாதிகளோ, அதில் ஒரு அங்கமான தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்களோ இவ்விடயத்தில் மாரக்கத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் நடந்து வருகின்றனர் என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.
தப்லீக் ஜமாஅத்தின் பிரதான கேந்திரஸ்தளங்களாக திகழுகின்ற மர்கஸ்களில் கூட புனிதஸ்தளங்கள் அடக்கஸ்தளங்களின் மூலம் மாசுபடுத்தப்பட்டு காணப்படுகின்ற ஒரு அவல நிலையை கண்கூடாக காண்கிறோம். தஃவாவின் மிக முக்கிய இக்கடமையை இவர்கள் ஏரெடுத்தும் பார்க்காமல் தங்களை தஃவா இயக்கம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன உண்மை, நியாயம் இருக்கிறது?
இதற்கப்பால், வழிகேடுகளின் பால் மக்களை அழைக்கின்ற பல சூபித் தரீக்கா மார்க்க அறிஞர்கள் ‘நபிகளாரின் கப்ரே புனிதம் வாய்ந்த பள்ளிவாயலுக்குள்தானே இருக்கிறது’ என்பது போன்ற இன்னும் பல தவறான வாதங்களைக் கிழப்பி தங்களது பிழையான, வழிகேடான காரியங்களை நியாயப்படுத்தவும் துனிந்துவிட்டனர். எனவேதான், நாம் நாளாந்தம் தொழுகின்ற தொழுகைகளுக்கு வேட்டு வைக்கக் கூடிய ஒரு அம்சமாக இது இருப்பதால் இது பற்றிய பூரண தெளிவைப்பெருவது அவசியம் என்ற ரீதியில்தான் இக்கட்டுரையை வரைய ஆரம்பிக்கின்றேன்.
முதலில், அடக்கஸ்தளங்கள் வணக்கஸ்தளங்களாக ஆக்கப்படுவதை இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டணம் செய்த ஆதாரபூர்வமான சில நபிமொழிகளைப் பார்ப்போம்.
01 நபியவர்கள் மரண நோயின் போது ‘அல்லாஹ் யூதர்களையும் நஸாராக்களையும் சபிப்பானாக, அவர்கள் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிட்டார்கள்’ இந்த ஹதீதை அறிவிப்புச்செய்யும் ஆயிஷா நாயகி ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ‘நபிகளார் இவ்வாறு சபித்திருக்காவிட்டால் இப்பிழையான நடைமுறை அரங்கேறியே இருக்கும். எனினும் நான் அவரது கப்ரு மஸ்ஜிதாக்கப்படுவதைப் பயப்படுகின்றேன்.’ என்று கூறினார்கள். (புஹாரி : 1265)
02 அல்லாஹ் யஹுதிகளை சபிப்பானாக, அவர்கள் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிட்டார்கள்’ (புஹாரி : 426)
03 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரது மணைவியர்களில் சிலர் அபீ சீனியாவில் உள்ள மாரியா என்றழைக்கப்படக் கூடிய ஒரு ஆலயத்ததைப் பற்றி நினைவு கூறினார்கள். அதாவது, உம்மு ஸலமா, உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரும் அபீ ஸீனியாவிலிருந்து வந்ததும் அந்த ஆலயத்தின் அழகைப் பற்றியும், அவற்றில் உள்ள உருவங்கள் பற்றியும் பேசிக்கொண்டனர்.
உடனே, நபியவர்கள் தனது தலையை உயரத்தி ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்தால் (அவர் மரனித்தவுடன்) அவரது அடக்கஸ்தளத்தின் மீது வணக்கஸ்தளத்தை கட்டி விடுவார்கள். பின்னர், அந்த உருவங்களையும் வரைந்துவிடுவர். அவர்கள்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகக் கெட்டவர்கள்’ என்றார்கள். (புஹாரி: 1276, முஸ்லிம்: 528)
04 மனிதர்களில் மிக மிகக் கெட்டவர்கள் கியாமத் நாளை எவர்கள் உயிரோடு இருக்கும் நிலையில் அடைகிறார்களோ அவர்களும், மன்னரைகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டோரும் (ஆகிய இரு சாராரும்) என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்: 3844)
மேற்குறித்த ஆதாரபூர்வமான நபிமொழிகள் அல்லாஹ்வின் இறை இல்லங்களின் புனிதத்துவத்தையும் அவை மாசுபடுத்தப்படக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு இறுக்கமான வேலிகளைப் போட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக உணர முடிகின்றதல்லவா?
அடக்கஸ்தளத்தை வணக்கஸ்தளமாக மாற்றக்கூடாது என்று வருகின்ற ஹதீத்களிலிருந்து 3 அம்சங்கள் தடை செய்யப்படுகின்றன. அம் மூன்று அம்சங்களையும் அவற்றிகான ஆதாரங்களையும் சுருக்கமாக நோக்குவோம்.
01. கப்ருகளின் மேல் தொழுவது கூடாது. இக் கருத்தை பின்வரும் ஹதீத் உணர்த்துகின்றது.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளின் மீது கட்டடம் கட்டப்படுவதையோ, அவற்றின் மீது உட்காரப்படுவதையோ, தொழுவிக்கப்படுவதையோ தடை செய்தார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்னத் அபீ யஃலா: 02,309)
02. கப்ருகளை நோக்கி சிரம் பணிவதோ, அவற்றை நோக்கி துஆச் செய்வதோ கூடாது. இக் கருத்தை பின்வரும் ஹதீத் உணர்த்துகின்றது.
“‘கப்ருகளின் மீது உட்காரவும் வேண்டாம், அவற்றை நோக்கி தொழவும் வேண்டாம் என நபியவர்கள் சொன்னார்கள்.” (முஸ்லிம்: 972)
03. இறை இல்லங்களை கப்ருகளின் மீது கட்டுவதோ, அவற்றில் தொழுவதை நோக்காக கொள்வதோ கூடாது. இக் கருத்தை பின்வரும் ஹதீத் உணர்த்துகின்றது.நபியவர்கள் மரண நோயின் போது ‘அல்லாஹ் யூதர்களையும் நஸாராக்களையும் சபிப்பானாக, அவர்கள் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிட்டார்கள்’ . இந்த ஹதீதை அறிவிப்புச்செய்யும் ஆயிஷா நாயகி ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ‘ நபிகளார் இவ்வாறு எச்சரிக்கை செய்திராவிட்டால் அவர் எச்சரிக்கை செய்தது நடைபெற்றே இருக்கும். எனினும் நான் அவரது கப்ரு மஸ்ஜிதாக்கப்படுவதைப் பயப்படுகின்றேன்.’ என்று கூறினார்கள். (புஹாரி: 1265)
மேற்கூறப்பட்ட ஹதீகளை கவனத்திற் கொள்ளும் போது கப்ருகள் இருக்கின்ற இடங்களில் தொழுவதானது பெரும் பாவங்களில் ஒன்று என்பதனை தெளிவாக விளங்க முடிகின்றதல்லவா? இன்னும் சொல்லப்போனால் மேலோட்டமாக கப்ருகளின் மீது பள்ளிவாயல்களை கட்டக்கூடாது என்ற தடையிலிருந்தே இக்கருத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
ஏனெனில், மதுபானம் விற்பனை செய்வதை மார்க்கம் தடைசெய்திருக்கும் போது அவற்றை குடிப்பது ஆகும் என்று வாதிடுவது எவ்வளவுக்கு அறிவீனமான வாதமோ அந்தளவுக்கு அறிவீனமான வாதம்தான் கப்ருகள் உள்ள இறை இல்லங்களில் தொழலாம் என்பதும். இன்னும் இதைவிட ஒரு படி தாண்டிச் சென்றால், இஸ்லாம் இறை இல்லங்களை கட்டுமாறு ஆர்வமூட்டியிருக்கிறது. ஒரு மனிதர், மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் எந்த ஒரு மனிதனும் தொழ முடியாத அளவுக்கு பள்ளியைக் கட்டி வைத்தால் அவருக்கு கூலி இருக்கின்றதா? கிடையவே கிடையாது. மாறாக பொருளாதாரத்தை வீணடித்ததற்காக தண்டனைதான் வழங்கப்படும்.
எனவே, பள்ளியைக் கட்டுமாறு இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றதென்றால் தொழுகையை நிலை நாட்டுவதற்கென்றே எல்லோரும் புரிந்து கொள்ளவர். அதே போன்றுதான் கப்ருகளின் மீது இறை இல்லங்களைக் கட்டக்கூடாது என்றால் தொழுவதும் கூடாது என்றேதான் பகுத்தறிவுள்ள எவரும் புரிந்து கொள்வர்.
ஆனால், இவ்வளவு தெளிவான, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் விரோதமான இத்தடையை சூஃபித்தரீக்கா சகோதரர்களும், தப்லீக் இயக்க சகோதரர்களும் ஏன்தான் புரியாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.
அடுத்ததாக, கப்ருகள் உள்ள இறை இல்லங்களில் தொழ முடியும் என்று வாதிடக்கூடிய சகோதரர்கள் சில சந்தேகங்களை கிளப்பிவிட்டு தங்களது மோசமான செயலை நியாயப்படுத்திக் கொண்டு வருவதனை நாம் பரவலாக பார்த்து வருகின்றோம். அதுவும் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை இலகுவில் நம்ப வைக்கும்படியான வாதங்களை அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே, அவர்களது சந்தேகங்களுக்கான தெளிவுகளைப்
பாரத்துவிட்டு இறுதியில் கண்ணியத்திற்குறிய அறிஞர்களின் இது தொடர்பான கருத்துளையும் நோட்டமிடுவோம்.
by darulathar
இன்ஷா அல்லாஹ் வளரும்