17. உண்மையில் பகுத்தறிவு என்றால் என்ன?
இந்தப் பகுத்தறிவு ஏன் மனித சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்போம்.
நடுநிலையோடு சிந்திப்பவர்கள் மனித சமுதாயத்தற்கு மறுமை வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டே பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். உலகில் படைக்கப்பட்டுள்ள மனிதனல்லாத இதர எல்லாப் படைப்புகளும் இவ்வுலகில் மனிதனுக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ உதவிவருகின்றன.
எல்லா படைப்புகளைக் கொண்டும் மனிதன் பயன் அடைகின்றான். ஆனால் மனிதனைக் கொண்டு எந்தப் படைப்புக்கும் பிரயோஜனம் இல்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம். மனிதன் ஒரு படைப்பின் மீது அக்கறை எடுத்து பாடுபடுகிறான் என்றால், அதுவும் தனது சுயநலம் கருதியே. தனது நலனைக் கருதியே அதைச் செய்கிறான்.
உதாரணமாக, அவன் ஆடு, மாடுகளை வளர்ப்பது அவற்றிலிருந்து தனக்கு கிடைக்கும் பால், இறைச்சி, தோல்கள் இவற்றின் பலனைக் கருதியே. அதிலும் மனிதன் இடைத்தரகனாக இருந்து பூமியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களைக் கொடுக்கிறானே அல்லாமல் மனிதன் தன்னிலிருந்து எதனையும் கொடுப்பதில்லை.
யானை போன்ற படைப்பினங்கள் உயிரோடிருக்ககும் போதும் மனிதனுக்கு உதவுகின்றன. செத்த பின்பும் மனிதன் அவற்றைக் கொண்டு பயன் அடைகிறான். ஆனால் உயிரோடிருக்கும் மனிதனைக் கொண்டும் இதர படைப்பினங்களுக்கு உபபோயம் இல்லை. செத்த மனிதனைக் கொண்டும் உபயோகமில்லை. எனவே, எதற்கும் உபயோகமற்ற இந்த மனித இனம் உலகில் ஏன் வாழ வேண்டும்? அதற்காக விஷேசமாக மனித இனத்திற்கு மட்டும் பகுத்தறிவு ஏன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? என்று சற்று நிதானமாக சிந்தித்துப்பாருங்கள்.
18. இவ்வுலகில் பயன்படா மனிதன் ஏன் படைக்கபட்டுள்ளான்?
பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதனும் இவ்வுலகிற்கு அவசியமற்றவனாக இருக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் இவ்வுலக வாழ்விற்கு அவசியமற்றதாக இருக்கிறது. அப்படியானால் மனிதன் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? அவனுக்கு விஷேசமாக ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது? இதை முறையாக ஒரு மனிதன் சிந்தித்தால், மனிதன் மறுமைக்காப் படைக்கப்பட்டுள்னான்,
அந்த மறுமை வாழ்க்கையை, உணர்ந்து விளங்கி, இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குமுறையுடன் நடத்த அவனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். மனிதனல்லாத பிராணிகளுக்கு பகுத்திறவும் இல்லை, அவற்றிற்கு மறுமை வாழ்க்கையும் இல்லை. அவற்றிற்கு மறுமை வாழ்க்கை இல்லை என்றாலும் மனிதனது இவ்வுலக வாழ்க்கைத் தேவைக்காக அவை படைக்கபட்டுள்ளன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மறுமைக்காகப் படைக்கப்பட்ட மனிதன், அந்த மறுமை வாழ்க்கையை உணர்ந்து வாழ பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதன், அந்த மறுமையை மறந்து வாழ்கிறான் என்றால், அல்லது மறந்து வாழ்கிறான் என்றால், அவன் மனிதன் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறான். நான்கு கால் பிராணிகள் போல், இவன் இரண்டு கால் பிராணியாக இவ்வுலகில் வாழ்கிறான். ஆனால், நான்கு கால் பிராணிக்கோ நாளை மறுமையில் நரக வேதனை இல்லை. இந்த இரண்டு கால் பிராணிக்கோ நிச்சயமாக நாளை மறுமையில் நரக வேதனை உண்டு. அந்த நரக வேதனையைக் கண்கூடாகப் பார்க்கும்போது, ”நாங்களும் மண்ணோடு மண்ணாய்ப் போன இந்த மிருகங்களைப்போல், மண்ணோடு மண்ணாய் போயிருக்ககூடாதா?” என்று கதறுவார்கள். ஆனால் அவர்களது கதறல் எவ்வித பலனையும் தராது. இந்த உலகிலேயே சிந்தித்து விளங்கி உணர்ந்து வாழ்ந்தால்தான் தப்பினார்கள், இல்லையோல் அதோகதிதான்.
பகுத்தறிவு என்றால் ”பிரித்து அறிதல்” என்று தமிழ் அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தமான உண்மையான நிலையைப் பிரித்து அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவாகும். உண்மையான நிலையைப் பிரித்தறியத் தவறும்போது அது பகுத்தறிவாக ஆக முடியாது. உதாரணமாக குற்றம் சுமத்தப்படுபவர்களில் உண்மையான குற்றவாளியைப் பிரித்தறிந்து தண்டிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதியை எடுத்துக்கொள்வோம். அவர் மிகவும் நீதியாக நடக்கக்கூடிய நீதிபதிதான். லஞ்சம் வாங்கிக்கொண்டு தன்மனசாட்சிக்கு விரோதமான உண்மைக்குப் புறம்பாகத் தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதி அல்ல. குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் மிகமிக எச்சரிக்கையான நடந்து கொள்கிறார்.
இந்த நிலையில் அவர் தீர்ப்பளிக்கும் எல்லாத் தீர்ப்புக்களிலும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தீர்ப்பளித்து வருகிறார் என்று சொல்ல முடியாது. சில தீர்ப்புகளில் குற்றமற்றவரைத் தண்டிக்கும் நிலையும், சில தீர்ப்புக்களினால் உண்மைக் குற்றவாளியையை விடுதலை செய்து விடும் நிலையும் ஏற்படத்தான் செய்கிறது. இது மனித வாழ்க்கஇயில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த இடங்களில் அந்த நீதிபதி உண்மைக்கு மாற்றமான முடிவுக்கு வந்தமையினால், அவரின் பிரித்தறியும் பகுத்தறிவில் கோளாறு ஏற்றபட்டுவிட்டது என்பதை மறுக்க முடியாது. இதற்கு என்ன காரணம்? சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் மூலம் சரியான தகவலைப் பெறத் தவறிவிட்டார் அந்த நீதிபதி என்று தான் சொல்லவேண்டும்.
சம்பவத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள், அல்லது நேரடியாகக் கண்டவர்கள் தரும் வாக்க மூலத்தை வைத்துத்தான் அவர் தீர்ப்பு செய்ய வேண்டியுள்ளது. அவரது புலன்கள் இந்தத் தீர்ப்பு செய்யும் விஷயத்தில் அவருக்குத் துணை செய்ய முடியுமே அல்லாமல், அவரது புலன்களைக் கொண்டு மட்டும் தீர்ப்பு செய்து விடமுடியாது. நாஸ்திகர்கள் செய்யும் பெருந்தவறு நீதிபதியின் தீர்ப்புக்கு புலன்கள் மட்டும் போதும். சம்பவத்தோடு தொடர்புடையவர் அல்லது சம்பவத்தை நேரில் கண்டவரின் வாக்கு மூலம் தேவையில்லை என்று கருதுவதுதான். சம்பவத்தோடு தொடர்புடையவர் அல்லது நேரில் கண்டவரை இவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்ய முற்பட்டு விடுகிறார்கள். அவர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பதற்கும், அவர்களது பகுத்தறிவு முழுமை பெறாததற்கும் இதுவே பிரதான காரணமாகும்.
19. சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலம்:
அதாவது இறைவைனைப்பற்றி, மறுமையைப்பற்றி மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்யும்போது அவனது பகுத்தறிவு முழுமைப் பெறாமல், புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்த ஒரு குறைவான அறிவோடு நின்றுவிடுகின்றது. எப்போது அவர்கள் இறைவனோடு தொடர்புடைய, இறைவனால் அனுப்பட்ட இறைத்தூதர்களின் வாக்கு மூலத்தை, தங்களின் புலன்களின் துணையோடு முறையாக அணுகுகிறார்களோ அப்போதே அவர்களின் பகுத்தறிவு முழுமை பெறுகிறது. உண்மை நிலைகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதேசமயம் அந்த நீதிபதி, சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாகப் பார்த்த சரியான நபர் மூலம் தகவல் பெறத் தவறிவிடுவதன் காரணமாகத் தவறான தீர்ப்பு அளிக்க நேரிடுகிறதோ, அதேபோல் உண்இமான மாற்றப்படாத சட்டங்களையுடைய, அதிகாரத்தில் இருக்கிற உண்மைத் தூதரை விட்டு, பொய்த் தூதர்களையோ, அல்லது சட்டங்கள் மாற்றப்பட்ட அதிகாரத்தில் இல்லாத தூதர்களின் வாக்கு மூலங்களையோ, அல்லது அந்தத் தூதர்களின் பெயரால் நடைமுறையில் இருக்கும் மனித யூகங்கள் கலக்கப்பட்ட வாக்கு மூலங்களையோ தங்களின் புலன்களைக் கொண்டு விளங்கிச் செயல்பட்டாலும் பகுத்தறிவில் கோளாறு ஏற்படவே செய்யும்!.
20 .மனிதப் புனிதர்கள்:
உலகில் தோன்றிய இறைத்தூதர்களைப்பற்றி நாஸ்திகளும் நன்கு அறிவார்கள். அவர்களின் நல்லொழுக்கம், மனித சமுதாயத்தின்பால் அவர்களுக்கிருந்த அன்பு, மனித மேம்பாட்டுக்காக அவர்கள் செய்த கடும் உழைப்பு, அதனால் அவர்கள் மக்களிடம் பெற்ற துன்பங்கள், அளவற்ற துன்பங்களை மக்கள் அளித்தும் அதற்கு மாறாக அந்த மக்கள் மீது அந்த இறைத்தூதர்கள் காட்டிய பரிவு அனைத்தையும் நாஸ்திகர்களும் அறிவார்கள். குறிப்பாக அவர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் இறைவனைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் அவர்கள் ஏன் பொய் பகர வேண்டும்? அதானல் அவர்கள் அடைந்த லாபம் என்ன? என்பதை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும். நாஸ்திகர்கள் சொல்வது போல் இறைவனோ, மறுமையோ இல்லை என்றால், அந்த சான்றோர்கள் அதையே மக்களிடம் சொல்லி மனித சமுதாயத்திற்கு அவர்கள் அரசர்களாக ஆகி இருக்கலாம். எண்ணற்ற உலக சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம். தங்களையே இறைவனாக மக்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம்.
குறிப்பாக இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமதிகம் இருந்தன. நாஸ்திகர்களால் அறிஞர்களாப் போற்றப்படுகிறவர்கள் கொடுத்த திட்டங்களைவிட, மிக உன்னதமான திட்டங்களை அந்த மேன்மக்கள் சுயமாக கொடுத்திருக்க முடியும். ஆனால் இதற்கு மாற்றமாக அந்த மனிதப் புனிதர்கள் தாங்கள் இறைவனின் அடிமை என்றும், இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் என்றும், இறைவன் கட்டளைகளுக்கு தாங்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? தங்களையே மிக வன்மையானக் கண்டித்துச் சொல்லும் வசனங்களைக்கூட இறைவனிடமிருந்து வந்த வசனங்கள் என்று மக்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? (இறுதிமறை அல்குர்ஆனில் இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்டுள்ள பல வசனங்களைப் பார்க்கிறறோம்.)
இறைவன் ஒருவன் இல்லை என்றால், மறுமை என்ற ஒன்று இல்லை என்றால், அந்தப் புனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் செயல்பட்டிருக்க வேண்டும்? என்று நாஸ்திகர்கள் நிதானமாகச் சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த மனிதப் புனிதர்களான தூதர்களைத் தன்னுடைய அறிவிப்புகள் மூலம் இறைவனே செயல்பட வைத்துள்ளான்.
இறைவனோடு அந்தத் தூதர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததால், அந்த இறைவனை அத்தூதர்களை ஐயமின்றி விளங்கிகொண்டார்கள். இறைவனால் அறிவிக்கப்பட்ட மறுமை வாழ்க்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அந்த மறுக்கமுடியாத உண்மைகளையே மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கமுடியாது.
”மக்களிடம் அப்படி இறைவன் இருக்கிறான் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடிந்தது. அதன் மூலம் சீர்திருத்தங்களைச் செய்ய முடிந்தது. எனவே உண்மைக்குப் புறம்பாக அந்தத்தூதர்கள் கூறினார்கள்” என்று நாஸ்திகர்கள் வாதிடலாம். இதுவும் தவறாகும். இறைவன் இல்லை என்று சொல்லி மக்களிடம் செல்வாக்குப் பெறுவதாக இருந்தால், இந்த நாஸ்திகர்கள் இன்று மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதைவிட மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றிருக்க முடியும். ஆனால், இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக இறைத்தூதர்கள் நடக்க முடியாது. இறைவன் இல்லை என்ற பொய்க் கொள்கையை மக்கள் முன்வைத்தால்தான், தாங்கள் செல்வாக்குப்பெற முடியும், தங்களால் சில சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்பியே நாஸ்திகர்கள் பொய்க் கொள்கையைக் கடைப்பிடிப்பதால், இறைத்தூதர்களும் அவ்வாறு உண்மைக்குப்புறம்பாக நடந்திருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தில் நாஸ்திகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எனவே மனிதன் தனது புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்து கொள்வது நிறைவான பகுத்தறிவல்ல. இறைவனையும், மறுமையையும் தெளிவாக அறிந்த, இறைவனோடு நேரடித் தொடர்பில் இருந்த இறுதித்தூதரின் வாக்கு மூலங்களின் அடைப்படையில் புலன்களைப் பயன்படுத்தி அறியும் அறிவே முழுமையான பகுத்தறிவாகும். இந்தப் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் எந்த மனிதனும் இறைவனையோ, மறுமையையோ இறுதித்தூதரையோ மறுக்க ஒரு போதும் முற்படமாட்டான்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்