சொர்க்கத்துக்கு வழி எது?
O ”உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும, நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா அன்ஹு ரளியல்லாஹு, நூல் : அபூதாவூத் 4167)
O அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு செய்தவர் சொர்க்கத்தில் பல வாயில்களிலிருந்தும் அழைக்கப்படுவார். அல்லாஹ்வின் அடிமையே! இது மிகச் சிறப்புமிக்கது! தொழுகையாளியாக இருந்தவர் ஸலாஹ் (தொழுகை) எனும் வாயிலில் அழைக்கப்படுவார்.
அறப்போர் புரிபவராக இருந்தவர் ஜிஹாத் (அறப்போர்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார்.
நோன்பாளியாக இருந்தவர் ரய்யான் எனும் வாயிலில் அழைக்கப்படுவார்.
தர்மம் வழங்குபவராக இருந்தவர் ஸதகா (தர்மம்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! … யாரேனும் ஒருவர் இந்த அனைத்து வாயில்களிலிருந்தும் அழைப்படுவாரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம்! நீரும் அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம் என நான் கருதுகிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா அன்ஹு ரளியல்லாஹு, நூற்கள் : புகாரீ 1764 முஸ்லிம்)
O இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் அன்ஹு ரளியல்லாஹு, நூல் : புகாரீ 5993)
O நிச்சயமாக உண்மை நல்லவைகளின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக நல்லவை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. உண்மை பேசும் மனிதன் உண்மையாளனாகிவிடுகிறான். நிச்சயமாக பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக பொய்யுரைப்பவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று எழுதப்படுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் அன்ஹு ரளியல்லாஹு, நூற்கள் : புகாரீ 5629, முஸ்லிம்)
O ஒரு மனிதருக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக அந்தஸ்துக்கள் உயர்த்தப்படும். அப்போது அவர், இது எவ்வாறு எனக்குக் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். இது உனக்காக உன்னுடைய மகன் பாவமன்னிப்புத் தேடியதனால் கிடைத்தது என்று அவருக்குக் கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹ்மத், இப்னுமாஜா 3650)
O ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா அன்ஹு ரளியல்லாஹு, நூல் : புகாரீ 168)