இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு
நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும். (49 :2)
என்ற வசனம் அருளப்பட்டவுடன் ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்துவிட்டார்கள். ‘நான் நரகவாதிகளில் ஒருவன்‘ என்று கூறிக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள்.
எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸாபித்) குறித்து ஸஅத்இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், அபூ அம்ர்! ஸாபித்க்கு என்ன ஆயிற்று..? அவருக்கு உடல் நலமில்லையா.? என்று கேட்டார்கள்.
அதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர் (ஸாபித்) எனது அண்டை வீட்டுக்காரர்தான். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக தெரியவில்லை என்றார்கள். பிறகு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதை பற்றி தெரிவித்தார்கள்.
அப்போது ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், (49 :2) வசனம் அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது. உங்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் நான் குரலை உயர்த்தி பேசுபவன் என்பதை நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார்கள்.
இதை ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இல்லை அவர் (ஸாபித்) சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார் என்று கூறினார்கள். (நூல்; முஸ்லிம்)
அன்பானவர்களே! இந்த பொன்மொழியில், நபியவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கிய மாத்திரமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் குரலை உயர்த்தி பேசியதால், நம்முடைய அமல்கள் அழிந்துவிட்டது; நாம் நரகவாதிதான் என்று கவலைகொண்டவர்களாக நபியவர்களை சந்திக்க வெட்கப்பட்டு ஒதுங்கியதை பார்க்கிறோம்.
அந்த அளவுக்கு தன்னுடைய தவறு குறித்து, அதுவும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கி கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னால் செய்த தவறு குறித்து கைசேதப்படுகிறார்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதுதான் இறையச்சம்! ஆனால் இன்று நாமோ அல்லாஹ்வின் கட்டளைகள் முழுமையாக அல்–குர்ஆன் வடிவில் இருக்கிறது.
அதை பார்த்த பின்னும், படித்த பின்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தவறுகளை செய்துவிட்டு, அந்த தவறு குறித்து எந்தவித சலனமுமின்றி, ‘அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன்‘ என்று சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறோம். அல்லாஹ் மன்னிக்க கூடியவன் என்று ஸாபித் இப்னு ஹைஸ் அவர்களுக்கும் தெரியும். அதையும் தாண்டி உள்ளத்தில் இறைவனின் இறையச்சம்.
அதனால்தான், ‘எங்களிடையே நடமாடும் சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் இப்னு ஹைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கருதி வந்தோம்‘ என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் அளவுக்கு சிறப்பு பெற்றார்கள். ஆனால் நாமோ பாவங்களை அற்பமாக கருதுகிறோம், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் மறுமையில் கைசேதம் அடையவேண்டிய நிலை வரும்.
எனவே இயன்றவரை பாவம் தவிர்ப்போம்; பாவமன்னிப்பு தேடுவோம்; படைத்தவனின் அருள் பெறுவோம்.
source: ஸஹாபாக்களின் வாழ்வினிலே… முகவை எஸ்.அப்பாஸ்