தாயார் நேர்வழி பெறுவதற்காக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிரார்த்திக்கச்சொன்ன ஸஹாபி:
நபித்தோழர்களில் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அறியாத முஸ்லிம்கள் இருப்பது அரிது.
அதுமட்டுமன்றி, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரை கேட்டாலோ, அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி படித்தாலோ அவர்கள் மீது நமக்கு இனம் புரியாத பாசம் வெளிப்படுவதை நாம் உணரமுடியும்.
அதற்கு காரணம் அவர்களின் தியாக வாழ்க்கை என்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறம் இவ்வாறு அவர்கள் மீது நமக்கு பாசம் ஏற்படுவதற்கு காரணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனை என்பதுதான் பிரதானமான உண்மையாகும். அதுபற்றிய பொன்மொழி இதோ;
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன் என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என் தாயார் மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன்.
நபியவர்கள், இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை. (நூல்: முஸ்லிம்)
அன்பானவர்களே! அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது நமக்கு ஏற்படும் இனம் புரியா நேசம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனையால் இறைவன் உருவாக்கியதாகும் என்பதை பொன்மொழி வாயிலாக அறியமுடிகிறது.
அதோடு இந்த பொன்மொழியில் மற்றொரு படிப்பினை என்னவெனில், இணைவைப்பு கொள்கையில் இருக்கும் தன்னுடைய தாய் நேர்வழி பெறவேண்டும் என்ற அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆவல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.
ஏனெனில், நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ தர்காக்களில் விழுந்து கிடப்பவர்களாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு தினமும் நாம் சத்தியத்தின் பால் அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கோடு இறைவனிடமும் இறைஞ்சினால், இறைவன் நாடினால் அவர்கள் நேர்வழி பெறக்கூடும்.
அதைவிடுத்து அறியாமையில் தர்காக்களுக்கு செல்பவர்களுக்கு ‘முஷ்ரிக்கீன்கள்‘ என ஃபத்வா வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்போல் உண்மையான நோக்கோடு அழைப்புப் பணியாற்றுபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!
جَزَاكَ اللَّهُ خَيْرًا
முகவை எஸ்.அப்பாஸ்