[ பூச்சூடுவது, அலங்காரம் செய்வது என்பது குறித்த கணவனுக்கு மட்டும் செய்யும் காலம் சங்ககாலம். இன்று பெண் அலங்காரம் செய்வது மொத்த ஆண் சமூகத்துக்கும் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது.
ஆண்கள் கண்குளிரப் பெண்ணை அனுபவிப்பது என்ற நிலைக்கு, உலகமயமாதலின் அழகுராணி போட்டி முதல் மாடல் வரை நீண்டு கிடக்கின்றது. இந்த வழியில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தான் அலங்கரிக்கின்றாள். நாம் ஏன் அலங்கரிக்கின்றோம் என்ற சூடுசுரணையற்ற பண்பாட்டில், பெண்ணின் அலங்காரம் ஆணாதிக்கத்தின் பாலியல் வக்கிரத்தைப் பூர்த்தி செய்கின்றது.
பெண்கள், ஆண்கள் இரசிக்கின்ற அழகியாகின்றனர். இது ஒருதார மணத்தைத் தாண்டிச் செல்லுகின்றது. அன்று பெண் கணவனுக்காக அலங்கரித்தபோது, பெண்ணின் உணர்வுகளைப் புறக்கணித்தது. இன்று பெண் தன்னை அலங்கரிக்கின்றபோது, பெண் சமுதாயத்தின் பாலியல் பண்டமாக்கப்படுகின்றாள்.
இங்கு இதைப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையாக்கியதன் மூலம், பெண்ணின் சுயஉணர்வை ஜனநாயகம்;, சுதந்திரத்தின் பின்னால் ஆணாதிக்கம் விபச்சாரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.]
ஆண், பெண் வீட்டை நோக்கிச் செல்லும்போது அன்பளிப்புகள் கொடுப்பது வழக்காக இருந்தது. இதன் மூலம்தான் பெண்ணை அடையமுடியும்;. இது இன்றைய ஆண் வழிச் சமூக நடைமுறைக்கு எதிரிடையானது. அத்துடன் பெண்ணின் குடும்பத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அகநானூறு பாடல் வரிகள் இதைத் தெளிவாக்கின்றன.
”பொன்னடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையின ளிருந்த ஆய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழப்பொருள் கலநிறை பொடுபின்னும்
பெறலருங் குரையளாயின் அறந்தெரிந்து
நாமுறை தேஎம் மரூஉப்பெயர்ந் தவனொடு
இருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணித்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்டிரன் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பாரவன் நமக்கே”42
பெண்ணின் தந்தையுடன் உப்பங் கழனியில் உழன்றாக வேண்டும்;. மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவேண்டும். அன்பைப் பலப்படுத்த வேண்டும். இந்த நிலையில் தான் பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணைத் தனக்கு தருவார்கள் என்றளவுக்கு ஆண் ஏங்குவதைப் பாடல் வரிகள் தெளிவாக்குகின்றன. அன்று, பெண் அடிமையாகி விடவில்லை. பெண் திருமணம் இன்றி கன்னியாகப் புழுங்கி சிதையவில்லை. ஆண் – பெண்ணை அடைவது என்பது, பெண்ணைத் திருப்தி செய்வதைச் சார்ந்திருந்தது. பெண்ணும் ஆணும் காதல் செய்து இருந்தாலும், அவர்கள் குழந்தையைப் பெற்று இருந்தாலும், ஆணை அந்தக் குடும்பத்தில் அங்கீகரித்து திருமணம் செய்வது என்பது பெரியவர்களின் ஆசியில் தங்கியிருந்தது. அன்று காதல் திருமணத்துக்குத் தடை விதிப்பது சமூகப் பண்பாடல்ல. குறுந்தொகை 51.4-6 இல், இதற்குச் சான்றாக உள்ளது.
”யானும் காதெலென யாவும்நனி வெய்யள்
எந்தையுமங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனோடு மொழிமே”42
ஆணும் பெண்ணும் விரும்பிக் காதல் செய்யும்போது சமூகம் அதற்குத் துணையாக, பக்கபலமாக இருந்துள்ளது. இன்றைய சமூகம்போல் காதலைக் குற்றமாகக் கருதவில்லை. கலித்தொகைப் பாடல் ஒன்றில்,
”தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லா முரத்தெழுந் தாறி
இருவர்கட் குற்றமும் இல்லையா லென்று
தெருமத்து சாய்த்தார் தலை”42
உலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை
ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை வளர்ச்சியின் விளைவால் பெண்ணின் கற்பு ஆண் சார்ந்து கோரப்படுகின்றது. தொல்காப்பியம் இதை வலியுறுத்துகின்றது.
”கற்புங் கபமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விரும்புறத் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”42
பெண் கற்பைப் பாதுகாப்பதும், அதனூடாகச் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதும் அவளின் ஒழுக்கமாக இருந்தது. ஆணின் ஒழுக்கம் கோரப்படவில்லை. ஆணின் செயல்களைப் பெண் அங்கீகரித்து இணங்கிப் போவதே பெண்ணின் ஒழுக்கமாகியது. பரிபாடல் திரட்டு 1.18-21 இல்,
”பரத்தமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியவள்.”42
ஆண், விபச்சாரியிடம் போய் வந்தாலும் பெண் அதைச் சகித்து வாழவும், கணவனுக்கு அன்பான பணிவிடை செய்யவும் ஆணாதிக்க ஒழுக்கம் பெண்ணுக்கு உபதேசிக்கின்றது. சங்கப் பாடல்கள் பெண்ணிடம் ஒழுக்கமாக ஆணாதிக்கக் கற்பைப் பலவாக, அடைமொழியூடாக முன் வைக்கிறது. ~
நாணல்லது இல்லாக் கற்பு, வடுவில் கற்பு, மாசில் கற்பு, ஆறிய கற்பு, கடவுள் சான்ற கற்பு, அறஞ்சால் கற்பு, முல்லை சான்ற கற்பு, அடங்கிய கற்பு, நன்றி சான்ற கற்பு”42 என்று கற்பு பற்றிய கூற்றுகள் பெண்ணின் மாறிவந்த ஆணாதிக்கச் சமுதாய வளர்ச்சியைக் காட்டுகின்றது. புறநானூறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, அகநானூறு, சிறுபாணாற்றுப்படை, குறுந்தொகை ஆகியவற்றை இயற்றிய வௌ;வேறு காலக்கட்டத்தில் இந்தக் கற்பு ஒழுக்கம் மாறிய வடிவில் இருந்ததை இது காட்டுகின்றது. பெண்ணுக்கு இதைத் திணித்தபோது ஒரேயடியாகத் திணித்துவிடவில்லை.
மெதுவாக, காரணக் காரியத் தொடர்பூடாக, பெண்ணைப் படிப்படியாக ஏற்க வைக்கப்பட்டது. கற்பு இன்று இருப்பது போல் அன்று இருந்ததில்லை. அன்று மாறிய பல்வேறு வடிவில் கால இடைவெளிகளில் பெண்ணிடம் படிப்படியாக ஏற்கவைத்து திணிக்கப்பட்டதையே இந்தக் கற்பு காட்டுகின்றது. குறுந்தொகை பாடல் 315 இல், பெண்ணின் கடமை ஆணின் ஒழுக்க மீறல்களைத் தாண்டி கோரப்படுவதைப் பார்ப்போம்.
”எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் றோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே”42
கணவன் விபச்சாரியிடம் செல்வதால் ஏற்படும் பெண்ணின் துன்பத்தைப் பெண்ணின் கடமை சாந்தப்படுத்துவதாக ஆணாதிக்க ஒழுக்கம் புகட்டுகின்றது. குழந்தையைப் பெறுவதன் மூலம் ஆணின் வாரிசை வளர்க்கும் பெண்ணின் இயல்பான தாய்மை உணர்ச்சியை அன்பின் இலக்கணமாக்கினர். சொத்துரிமையற்ற பெண் இயந்திரமானாள். இந்த இயந்திரத்தில் இருந்து கணவனின் வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் கடமையை ஐங்குறுநூற்றில் 405 பாடல்களும் எடுத்து இயம்புகின்றன. பெண்ணின் கற்பு வழியின் ஊடாக ஆணைப் புகழ்வது ஆணாதிக்க நரித்தனத்தில் ஒன்று. அதைப் பார்ப்போம்.
”செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ”44 (புறம் 3)
”மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவ”44 (புறம் 314)
“சேணாறு நறுநுதல் சேயிழை கணவ”44 (பதிற் 7:5)
”புரையோன் கணவ”44 (பதிற் 7.10)
கண்ணகியின் பெயரில் கற்பு எப்படி போற்றப்பட்டுப் பண்பாடாக்கப் பட்டதோ, அதுபோல்தான் சங்க இலக்கியம் சில பெண்களின் பெயரால் ஆணாதிக்கத்தை மறுதலையாக நிறுவுவது வழக்காக உள்ளது. பெண்ணின் விசேட கடமைகள் ஊடாக இவை போற்றப்பட்டது. அதேநேரம் வீரத்தாய் மகனைப் போர் முனைக்கு அனுப்புவதை வீரமாகப் போற்றும் பண்பு, உண்மையில் தாய்மை மீதான ஆணாதிக்கக் கடமையை முன்வைப்பதாகும்;.. தனிச்சொத்துரிமை யுத்தங்களில் தாய்மை காட்டும் எதிர்ப்பை, வீரத் தாயாகக் கட்டமைத்துக் காட்டும் நடத்தைகள் மூலம் யுத்தம் நியாயப்படுத்தப் படுகின்றது. தாய் மகன் இறந்த செய்தி கேட்டு போர்முனை சென்று கதறும் காட்சியைத் திசை திருப்ப, அம்பு எங்கே பட்டது என்று தேடுவதாகக் காட்டும் மரபு, உண்மையில் யுத்தக் கொடுமைக்குச் சமூக அங்கீகாரம் கோரிவிடும் விண்ணப்பமாகும்.
சொந்தக் குழந்தையை இழக்கும் எந்தத் தாய்மையும் மகிழ்வுறுவதில்லை. எவ்வளவுதான் நியாயமான போராட்டத்தில் மரணித்தாலும் தாய்மை ஜீரணிக்கமுடியாத துயரத்தைச் சந்திக்கின்றது. சுற்றத்தாரின் வாழ்வில் மாற்றத்தைச் சொந்த மகனின் இழப்பு ஏற்படுத்தும்போதே, இதனால் சுற்றத்தார் அப்பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதை அவளின் மகனையிட்டுப் பெருமைப்படவைக்கின்றது. இங்கு மரணத்தையிட்டு அல்ல அவனின் சமூக நோக்கத்தையிட்டே. இதுவே கணவனின் மரணத்திலும் பெண்ணின் நிலையாகும். ஆனால் பெண்ணியவாதிகள் மரணத்தையிட்டு ஆணாதிக்க யுத்த அமைப்பு வழங்கிய ~வீரத்தாய்| பட்டத்தை, பெண்ணின் பெருமை சேர்க்கும் பகுதியாக வருணிக்கின்றனர். இது ஆணாதிக்க யுத்தத்தை நியாயப்படுத்த, அதற்கான வீரர்களைத் திரட்ட பெண்களின் தாய்மையை அழிக்கும் மோசடியாகும். ”ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே”145 என்ற புறநானூற்றுப் பாடல் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் கடமையைப் பெண் வீரத்தினூடாகப் போற்றுவது உண்மையில் பெண்ணின் அடிமைத்தனத்தை மேலும் உறுதி செய்வதாகும்.
”பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து வதுவை அயர்த்தனை”44 என்ற அகநானூற்றுப் பாடல் 46 இல், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண்கள் வீட்டுக்குக் கூட்டிவந்து தமது மனைவியுடன் வைத்திருந்ததைக் காட்டுகின்றது. சொந்த மனைவி ஒருதாரமணத்தில் இருக்க, பலதாரமணத்தில் இன்பம் காணும் ஆண்கள், அதை வீடுவரை கொண்டு வரவும் தயங்கவில்லை. அதை நியாயப்படுத்தவும் சமுதாயம் பின்நிற்கவில்லை. ஆண்களின் பாலியல் இன்பம் வரைமுறையற்ற கோட்பாட்டால் நியாயப்படுத்தப்பட்டது. ஆண்களின் வாரிசைப் பெண் பெற்றுப் போடமுடியாதபோது, ஆண் மறுமணம் செய்யும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அதை மனைவியே முன்நின்று நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஐங்குறுநூறு பாடல் 292 இல்,
”நின்னினுஞ் சிறந்தவள் எமக்கே நீநயந்து
நன்மன அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே”44
பெண் குழந்தை பெறாவிட்டால் அவள் சமுதாய ரீதியாக இழிவாகக் கருதும் தனிச் சொத்துரிமை வாரிசு சமூக அமைப்பில், ஆணின் மலட்டுத்தனம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது இருந்தது. ஆண் ஆண்மையுள்ளவனாகக் கருதும் பொது சமூகக் கண்ணோட்டத்தில், பெண்ணின் பெண்மை வாரிசு வளங்கள் ஊடாகப் போற்றப்பட்டது. இந்த வாரிசைப் பெற்றுப் போடாவிட்டால் அவள் மலடியாகிவிடுகின்றாள்;. இந்த நிலையில் ஆணாதிக்கம் வரையறுத்த பெண்மையை ஆணாதிக்கம் கேவலப்படுத்தி சிறுமைப்படுத்துகின்றது.
இந்த இழிவில் சமூகக் கௌரவம் இழந்து வேலைக்காரியாக, கொத்தடிமையாக வாழ்வின் இழிநிலைக்குத் தள்ளிவிடும் வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்க, கணவனுக்கு அவளாகவே முன்னின்று ஒரு திருமணத்தைச் செய்வதன் மூலம் மீள முயல்கின்றாள். மாற்றான் வயிற்றில் இருந்து பெறும் வாரிசு, தனக்கு எதிரான இழிவாடலைத் தடுக்கும் என்று நம்பி, கணவனின் பாலியல் மற்றும் வாரிசுரிமையை நிறைவுச் செய்ய முனைகின்றாள். ஆனால், மலட்டுத்தனம் ஆணுக்கும் உண்டு என்பது, அவளால் புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல்பூர்வமான சமூக அமைப்பில் அவள் வாழ்ந்துவிடவில்லை. பெண் கருவளம் இழக்கின்ற போது, அவளின் சமூகத் தகுதி தாழ்த்தப்பட்டுக் கேவலமாக்கப்பட்டாள்.
பெண் ஆணுக்காக அலங்காரம் செய்யவேண்டும் என்பது மரபு. கணவன் வீடு வரமாட்டான் எனத் தெரிந்தால் அல்லது வெளியூர் சென்றால் பெண் தன்னை அலங்கரிப்பது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. அடக்க ஒடுக்கமாகக் கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது, அழகு குறித்த பார்வை ஆணுக்குச் சொந்தமானது. நற்றிணை பாடல் 42 இல்,
”… மெலென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய”44
பூச்சூடுவது, அலங்காரம் செய்வது என்பது குறித்த கணவனுக்கு மட்டும் செய்யும் காலம் சங்ககாலம். இன்று பெண் அலங்காரம் செய்வது மொத்த ஆண் சமூகத்துக்கும் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. ஆண்கள் கண்குளிரப் பெண்ணை அனுபவிப்பது என்ற நிலைக்கு, உலகமயமாதலின் அழகுராணி போட்டி முதல் மாடல் வரை நீண்டு கிடக்கின்றது.
இந்த வழியில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தான் அலங்கரிக்கின்றாள். நாம் ஏன் அலங்கரிக்கின்றோம் என்ற சூடுசுரணையற்ற பண்பாட்டில், பெண்ணின் அலங்காரம் ஆணாதிக்கத்தின் பாலியல் வக்கிரத்தைப் பூர்த்தி செய்கின்றது. பெண்கள், ஆண்கள் இரசிக்கின்ற அழகியாகின்றனர்.
இது ஒருதார மணத்தைத் தாண்டிச் செல்லுகின்றது. அன்று பெண் கணவனுக்காக அலங்கரித்தபோது, பெண்ணின் உணர்வுகளைப் புறக்கணித்தது. இன்று பெண் தன்னை அலங்கரிக்கின்றபோது, பெண் சமுதாயத்தின் பாலியல் பண்டமாக்கப்படுகின்றாள். இங்கு இதைப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையாக்கியதன் மூலம், பெண்ணின் சுயஉணர்வை ஜனநாயகம்;, சுதந்திரத்தின் பின்னால் ஆணாதிக்கம் விபச்சாரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.
நன்றி – http://mujeebu.blogspot.com/