பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.
ஆகவே, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டார்.
உடனே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம். அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே, எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்’ இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.
என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம்’ உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.
ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்’ எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ்ழாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.
அதன் பிறகு, ஒரு நாள் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும், மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்). பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இஸ்மாயீலே! அழ்ழாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா? என்று கேட்க இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அழ்ழாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள்.
”இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-3364)
சத்தியப் பிரச்சாரத்தில் இம்மியளவும் வளைந்து கொடுக்காத இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரட்சகன் அல்லாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கின்றார்கள்.
“எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!” (அல்குர்ஆன் 14:37)
விளைவு, மனித சஞ்சாரமில்லாத பாலைநிலமாக காட்சியளித்த இடத்தின் வரலாறே மாறுகின்றது.
இப்படியாக இருக்கையில் தொடர்கின்றது அடுத்த கட்டச்சோதனை.
பல்லாண்டு காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து, ஓரிறையிடம் பன்முறை வேண்டி ஈன்றெடுத்த அருமைச் செல்வனை அறுத்துப் பலியிடுமாறு, அகிலத்தின் இரட்சகனிடமிருந்து கனவின் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகின்றது.
அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை அருமைத் தூதரவர்கள். நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதற்கிணங்க, தனக்கு கனவு மூலம் பிறப்பிக்கப்பட்ட இறைகட்டளையை தனது அருமைச் செல்வன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறுகின்றார்கள். அதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ அழகுற பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்.
“அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.” அல்குர்ஆன் 37:102
பின்னர் தந்தையும், தனையனும் இறை கட்டளையை சிரமேற் கொண்டு செய்ய முனைகையில் மீண்டும் வஹி வருகின்றது.
“இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.” (அல்குர்ஆன் 37:103-107)
தன்னந்தனி மனிதராய் நின்று பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யாது வாழ்ந்து இறைதிருப்தியைப் பெற்றதன் விளைவு அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் அருமைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, தனிப்பெருந்தலைவர் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுவதோடு, இமாம் அவர்களை தனது உற்ற நண்பராக்கி கொண்டதாகவும், முழுமனித குலத்திற்கும் அவர்களே தலைவர் என்றும் குறிப்பிடுகின்றான்.
சிலைகளை நிறுத்தி வைத்தும், சமாதியை படுக்கையில் வைத்தும் வணங்கி வழிபடுவதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்காளிகளாக ஆக்குவோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதில் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழகிய முன்மாதி உள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.” அல்குர்ஆன் 60:04
எனவே, ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் ‘ஷிர்க்’ எனும் இணைவைத்தலின் சாயல் கூட படாத, தூய ஈமானிய உறுதியுடையவர்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு அருளாளன் அல்லாஹ் நமக்கு அருள்பாலிப்பானாக!
source: http://dharulathar.com/