அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம்
அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்பட வேண்டும்.
( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا )
நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ2838, அபூதாவூத், அஹ்மத்)
( الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ )
அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுபவர் தூய்மையான, கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1329)
புகாரீயின் அறிவிப்பில், பொருளுணர்ந்து ஓதுபவர் என்ற வாசகத்திற்கு பதிலாக மனனமாக ஓதுபவர் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
( يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً )
(அல்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டவருக்கு பரிந்துரை செய்வதற்காக) மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 2839)
( القرآن مشفَّع وماحِلٌ مصدَّق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار)
அல்குர்ஆன் செய்யும் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் -அல்குர்ஆனின் கட்டளைப்படி செயல்படாதவர்களுக்கு எதிராக அது கூறும்- வாதங்களும் உண்மை என நம்பப்படும். எனவே அதன் வழிகாட்டுதலுக்கிணங்க செயல்படுவர்களை அது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதனைப் -புறக்கணித்து- முதுகுக்குப் பின் தள்ளியவரை நரகத்தில் இழுத்து விட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான்)
அ) ஆயத்துல் குர்ஸிய்யீ (சூரத்துல் பகராவின் 255-வது வசனம்)
(من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت)
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுபவர் சொர்க்கம் செல்ல அவரின் மரணம்தான் தடையாக உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ -அமலுல் யவ்மி வல்லைலா)
ஆ) சூரத்துல் முல்க் (தபாரக்) (67-வது அத்தியாயம்)
(سورة من القرآن ما هي إلا ثلاثون آية خاصمت عن صاحبها حتى أدخلته الجنة وهى تبارك)
அல்குர்ஆனில் 30 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதனை ஓதியவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் வரை அது -அல்லாஹ்விடம்- மன்றாடும். அதுதான் தபாரக் அத்தியாயம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தபரானீ)
( إِنَّ سُورَةً مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ وَهِيَ سُورَةُ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ )
அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் ஒருவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 2816)
இ) குல் ஹுவல்லாஹு அஹத் (112-வது அத்தியாயம்)
(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَقْبَلْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ قُلْتُ وَمَا وَجَبَتْ قَالَ الْجَنَّةُ )
அபூஹுரைரா -ரலி அவர்கள் கூறுகின்றார்கள் :
குல் ஹுவல்லாஹு அஹத் எனும் அத்தியாயத்தை ஒருவர் ஓதியதை செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். அப்போது நான், என்ன கடமையாகிவிட்டது? என்று கேட்டேன். அதற்கவர்கள், அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். (நூல் : முஅத்தா, திர்மிதீ 2822)
(. . . . وَمَا يَحْمِلُكَ أَنْ تَقْرَأَ هَذِهِ السُّورَةَ فِي كُلِّ رَكْعَةٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ حُبَّهَا أَدْخَلَكَ الْجَنَّةَ )
குபா மஸ்ஜிதில் அன்ஸாரிகளுக்கு தொழுவைத்துக் கொண்டிருந்த ஒருவர் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை ஓதிவிட்டு அதற்குப் பிறகு மற்ற வசனங்களை ஓதுவதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி விசாரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் ஒவ்வொரு ரகஅத்திலும் இந்த அத்தியாயத்தை ஓதக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நிச்சயமாக நான் அதனை நேசிக்கின்றேன்! என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நிச்சயமாக நீர் அதனை நேசிப்பது உன்னை சொர்க்கத்தில் நுழைவித்துவிடும் என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ 2826)
( مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ بَنَى اللَّهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ . . . )
குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்15057)