“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை,
1. (அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்த போது), நான் நோயுற்றியிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்,
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள், இப்படிச் செய்தது யார் என்று கேட்ட போது), ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும்
3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள் அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது.
உடனே, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அந்த மன்னன் சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்… சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர் அலைஹிஸ்ஸலாம்) தான் உங்கள் தாயார்– (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-3358)
தனிப்பெருந்தலைவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேற்கொண்ட தவ்ஹீத் பிரச்சாரம் தொடர்பாகவும் அதனால் அன்னாரும், அன்னாரின் குடும்பத்தினரும் அடைந்த சோதனைகள் குறித்து நோக்கினோம். அத்தோடு முடிந்து விடவில்லை சோதனைகள்.மீண்டும் தொடர் கதையாய் தொடர்கின்றது சோதனைகள் ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி. மருந்துக்கு கூட மனிதர்கள் இல்லாத பாலைநிலத்தில் அன்பு மனைவியையும் அருமைப் பாலகனையும் விட்டு விடுமாறு இறை கட்டளை வருகின்றது. தளர்ந்து விடவில்லை தனிப்பெருந்தலைவர் அவர்கள்.
அருமை மகனின் பசிக்கொடுமை தாங்காது, தண்ணீருக்காக அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தப் பாலைநிலத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள். அப்போது அருளாளன் அழ்ழாஹ்வின் உதவியை அருகாமையிலேயே காண்கின்றார்கள்.
“பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்து கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ‘ஸம்ஸம்’ கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள்.
அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப்பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்தொடர்ந்து வந்து, இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள்.
ஆகவே, அவர்களிடம் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
அவர்களின் வழியில் ‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37)
இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவளும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தில்) புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை.
ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத் தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள்.
பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, (அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ஸஅல்லது தமது இறக்கையினால் தோண்டினார்; என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்ஸ அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது.
உடனே ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையால்) அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்ஸ அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால், ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.
பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஅபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார், அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு, இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள்.
உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று, நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க, அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்) ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தங்கிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்ஸ என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும்; குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார்.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.