தவ்ஹீத் பிரச்சாரத்தில் தனிப்பெருந் தலைவர்
முஹம்மத் அர்ஷாத் அல்அதரி
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ் தனது அருமைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, ஏகத்துவ இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுகின்றான்.
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.” (அல்குர்ஆன் 16:123)
மேலும், அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது உற்ற தோழராக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.“தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.” (அல்குர்ஆன் 04:125)
இன்னும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முழுமனித சமுதாயத்திற்கும் தலைவர் என்று உலகப்பொதுமறை திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மிக அதிகளவில் கண்ணியப்படுத்திப் பேசுவதற்குக் காரணம்தான் என்ன? இதோ திருமறைக் குர்ஆன் பதிலளிக்கின்றது.
“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்” (அல்குர்ஆன் 02:124)
தவ்ஹீதின் தனிப்பெருந் தலைவர் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும், சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் தடம் புரண்டுவிடாது, சமரசம் செய்யாது, துவண்டு ஒதுங்கிவிடாது தவ்ஹீதுக்கு நேர் எதிரான இணை வைப்புக் கொள்கைக்கு எரிமலையாய் இருந்ததன் விளைவே இறைவன் தனது திருமறையில் மிக அதிகளவில் சிலாகித்துக் கூறுகின்றான். தியாகச் செம்மல், பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் நபியவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் இதோ!
“இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இதுவே என் இறைவன்’ எனக் கூறினார்.
அது மறைந்த போது ‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’ என்றார்.
சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்’ என்றார். அது மறைந்த போது ‘என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டாவிட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்’ என்றார்.
சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது’ என்றார். அது மறைந்த போது ‘என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்’ எனக் கூறினார்.
”வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன் (என்றும் கூறினார்). அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ‘அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) அவன் அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?”
”அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?’ (என்றும் அவர் கூறினார்.)” (அல்குர்ஆன் 06:76-81)
இணை வைப்பின் சாயல் கூடபடாத (பார்க்க அல்குர்ஆன் 16:123) ஏகத்துவப் பெருந்தகை இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உதாரணம் காட்டி எவ்வித ஆற்றலுமில்லாத கற்களை, மண்ணை, சமாதியை வணங்கி அகிலங்களின் இரட்சகனின் சாபத்திற்குரிய இணைவைப்பை, மூட நம்பிக்கையை தகர்த்தெரிகின்றர்கள்.
அல்லாஹ்வின் சாபத்திற்குரிய சமாதி வழிபாட்டில் ஈடுபடுவோர் பகுத்தறிவுப் பகலவன் இப்றாஹீம் நபியின் அறிவுப்பூர்வமான கேள்விகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
“நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?” என்று அவர் கேட்டார்.” (அல்குர்ஆன் 26:72,73)
இவ்வாறாக, இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைக் கொள்கையாம் தவ்ஹீதை வளையாது, நெளியாது எடுத்துச் சொன்னதன் விளைவு எண்ணற்ற சோதனைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
பயங்கரமான எதிர்ப்பலைகள் பலகோணங்களில் எழுந்தபோதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யவில்லை இமாமவர்கள். இதோ தொடர்கிறது தனிப்பெருந் தலைவரின் தவ்ஹீத் பிரச்சாரம்:
“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.. “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்“ என்று அவர் கூறினார். “நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்“ என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.
“ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்கமாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)” (அல்குர்ஆன் 21:52-67)
இவ்வாறாக, இமாமவர்கள் ஏகத்துவத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்தியம்பியதன் விளைவு வீட்டிலும் எழுகின்றன எதிர்ப்பலைகள்:
“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகிவிடு!” என்று (தந்தை) கூறினார்.” (அல்குர்ஆன் 19:46)
சமூகப் பகிஷ்காரத்தால் தவித்துக் கொண்டிருக்கையில் சொந்த வீட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகின்றார்கள் தனிப்பெருந்தலைவர் அவர்கள். இப்போதும் சளைத்துவிடவில்லை சன்மார்க்கப் போதகர் இப்றாஹீம் (அலை) அவர்கள். கொடுங்கோல் மன்னனிடம் சென்று தவ்ஹீதை தயவு தாட்சண்யமின்றி எடுத்தியம்புகின்றார்கள். விளைவு நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்படுகின்றார்கள்.
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.” (அல்குர்ஆன் 21:68)
சிலைகளை நிறுத்திவைத்து வழிபடுவதும், சமாதிகளை படுக்கையில் வைத்து வழிபடுவதும் பகிரங்கமான ‘ஷிர்க்’ என்கின்ற தவ்ஹீத் கொள்கையை உரக்கச் சொன்னதன் விளைவு இமாமவர்கள் தமது தாயகத்தையும் துறந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.” (அல்குர்ஆன் 29:26)
ஏகத்துவ ஏந்தல் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாத்திரமன்றி அன்னாரின் அருமைத் துணைவியரும் தியாகசீலர்களாகவே திகழ்ந்துள்ளனர்.
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர்.
அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது.
மன்னன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துவரச் செய்து, இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ”என் சகோதரி”, என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூஃமின்) யாரும் இல்லை, என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள்.
அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கைகொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களை உதைத்துக்கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா, இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு, மறுபடியும் சாராவை நெருங்கினான்.
சாரா எழுந்து அங்கசுத்தி செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ளவிடாதே! என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாராஃ, இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று பிரார்த்தித்தார்.
இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான்.
சாரா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா, என்று கேட்டார்“ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-2217)
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.