11. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன். (நூல்: புகாரீ, முஸ்லிம்)
12. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதர் விசாரிக்கப்பட்டார். அவர் மக்களுடன் (வணிகத்தில்) கலந்து பழகி வந்தார். அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்ததால்;, வறுமை நிலையில் உள்ளவர்களிடமிருந்து (வர வேண்டிய கடன் தொகையை) விட்டு விடுமாறு தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதை தவிர அவரிடம் நன்மை ஏதும் காணப்படவில்லை. (தாராளமாக நடந்துக் கொள்ளும்) அந்த விஷயத்தில்; உன்னை விட நான் அதிகத் தகுதியுடையவன். இவருடைய தவருகளை தள்ளுபடி செய்யுங்கள். என்று அல்லாஹ் கூறினான். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
13. அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தபோது, அவர்களிடம் இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் வறுமையைப் பற்றியும், மற்றொருவர் (வழிப்பறி) கொள்ளைகள் பற்றியும் புகார் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்:
வழிப்பறிக் கொள்ளைகளைப் பொருத்தமட்டில் அது சில நாட்கள் வரைதான் நீடிக்கும். மிக விரைவில் காவலாளியின்றி மக்காவை நோக்கி ஒட்டகக்கூட்டங்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். வறுமையை பொருத்த மட்டில் உங்களில் ஒருவர், தருடத்தை எடுத்துக்கொண்டு (ஊரெல்லாம்) சுற்றியும், அதனை பெற்றுக்கொள்வதற்கு ஒருவரும் கிடைக்காத காலத்திற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு நாள் வராது.
பின்னர். ‘உங்களில் ஒரு மனிதர் கண்டிப்பாக அல்லாஹ்வின் முன் நிற்பார். அம்மனிதருக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எவ்வித திரையும் இருக்காது. மொழி பெயர்க்கும் உதவியாளரும் இருக்க மாட்டார். பின்பு அல்லாஹ், அம்மனிதரை பார்த்து நான் உனக்கு செல்வத்தை கொடுக்க வில்லையா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதர் ஆம் கொடுத்தாய் என்பார்.
பிறகு அல்லாஹ், நான் உன்னிடம் என்னுடைய தூதரை அனுப்பவில்லையா? என்று கேட்பான். அம்மனிதர்; ஆம் அனுப்பினாய் என்று பதிலலிப்பார். அம்மனிதர் தமது வலப்புரம் பார்ப்பார். அங்கு நரக நெருப்பை தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். பின்பு இடப்புறம் திரும்பி பார்;ப்பார். அங்கும் நரக நெருப்பைத் தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார்.
எனவே, பேரிச்ச பழத்தின் ஒரு பாதியை (தருமம்) செய்தாவது, அதுவும் இல்லையெனில், ஒரு கனிவான சொல்லைப் பயன்படுத்தியாவது உங்களில் ஒவ்வொருவரும் நரகத்தின் நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். (நூல்: புகாரி)
14. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.’ அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?
வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.
அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.
வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதியம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான், அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.
அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)
15. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். (நூல்: புகாரி, முஸ்லிம்)
16. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் (மனிதன் புரியும்) நற்செயல்களையும், தீய செயல்களையும் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை விளக்கும் முகமாக (பின்வருமாறு) சொன்னார்கள். ‘எவர் நற்செயல் ஒன்று செய்ய வேண்டுமென்று நாடி அதனைச் செய்யவில்லையோ (நற்செயல் புரியவேண்டுமென்ற அம்மனிதரின் எண்ணத்தின் காரணமாக) அதை அல்லாஹ் முழு நற்செயலாக பதிவு செய்து கொள்கிறான். ஆனால் அவர் நற்செயலைச் செய்ய நாடி அதனைச் செய்தும் விட்டால், அல்லாஹ் அதனைப் பத்து நற்செயல்களிலிருந்து எழு நூறு நற்செயல்கள் வரையிலோ அல்லது அதனைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீய செயலை செய்ய நாடி, அதனைச் செய்யாவிட்டால், அல்லாஹ் அதனை ஒரு நற்செயலாகவே பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு தீய செயலை செய்ய நாடி அதனை செய்தூம் விட்டால், அல்லாஹ் அதனை ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறான். (நூல்: புகாரி, முஸ்லிம்)
17. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: ‘அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.
என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.
என் அடியார்களே! உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.
என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.
என் அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.
என் அடியார்களே! நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். (நூல்: முஸ்லிம்)
18. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில் பின்வருமாறு அல்லாஹ் கூறுவான்.
ஆதமுடைய மகனே! நான் நேயுற்று இருந்தேன், ஆனால் நீ என்னை விசாரிக்க வரவில்லை.
மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உன்னை நலம் விசாரிப்பேன்?
அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் நோயுற்று இருந்தது உனக்குத் தெரியாதா? அவனை நீ நலம் விசாரிக்க செல்லவில்லை. நீ அவனை விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைப் பெற்றிருப்பாய். ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவுக் கேட்டேன். ஆனால் எனக்கு நீ உணவளிக்கவில்;லை.
மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும்?
அல்லாஹ் : என்;னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவுகேட்டு, நீ அவனுக்கு உணவளிக்காதது உனக்குத்; தெரியாதா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நிச்சயமாக அதனை (உணவளித்தமைக்கான சன்மானத்தை) என்னிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?
அல்லாஹ் : ஆதமுடைய மகனே! நான் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டேன். ஆனால் குடிப்பதற்கு நீ ஒன்றும் எனக்குத் தரவில்லை.
மனிதன் : என் ரப்பே! நீ இப்பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாக இருக்க நான் எப்படி உனக்குக் குடிப்பதற்கு (தண்ணீர்) கொடுக்க முடியும்.
அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டான். ஆனால் நீ அவனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்திருந்தால் அதனை (சன்மானத்தை) நிச்சயமாக என்னிடம் கண்டிருப்பாய். (நூல்: முஸ்லிம்)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்