1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன் வசமுள்ள ஏட்டில், ‘என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான்’. நூல்:புகாரி,முஸ்லிம்,நஸயீ,இப்னுமாஜா.
2. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆதமுடைய மகன் என்னைப் பொய்ப்பிக்கின்றான். ஆனால் என்னை பொய்ப்பிப்பதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. அவன் என்னை(தீய சொற்கள் கொண்டு) ஏசுகிறான். ஆனால் என்னை அவ்வாறு ஏசுவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை.
முதலில் உருவாக்கியது போல் மீண்டும் அல்லாஹ்வால் என்னை கன்டிப்பாக உருவாக்க முடியாது. (அதாவது நான் இறந்தப் பிறகு அல்லாஹ்வால் என்னை உயிர்ப்பிக்க முடியாது.) என்று சொல்லி என்னை பொய்ப்பிக்கின்றான். (ஆனால் அல்லாஹ்வாகிய) எனக்கு அவனை மீண்டும் உருவாக்குவது முதலில் அவனை உருவாக்கியதை விட எளிதானதே.
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை வைத்துள்ளான், என்று சொல்லி என்னை அவன் நிந்திக்கிறான். ஆனால் (அல்லாஹ்வாகிய) நான் தனித்தவன். யாருடைய தேவையுமற்றவன். நான்(யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப் படவுமில்லை. மேலும் என்னுடன் (இனையாக) ஒப்பிடப்படக்கூடியவர் யாருமில்லை.’ (நூல்: புகாரி, நஸயீ)
3. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹுதைபிய்யாவில் மழை பெய்திருந்த ஒரு இரவைத் தொடர்ந்து காலை சுபுஹு தொழுகையைத் தலைமையேற்று நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்தவுடன் மக்களை நோக்கி உங்களுடைய ரப்பு என்ன கூறியுள்ளான் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று வினவினார்கள்.
அதற்கு மக்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மட்டுமே அதனை நன்கு அறிவார்கள் என்று பதிலுரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் கூறியதாக சொன்னார்கள். ‘இன்று காலை என்னுடைய அடியார்களில் ஒருவர் என் மீது நம்பிக்கை கொண்ட முஃமினாகவும், மற்றொருவர் என் மீPது நம்பிக்கை கொள்ளாத காஃபிராகவும் மாறியுள்ளார்கள்.
எவர், அல்லாஹ்வின் பொருட்டாலும் அவனது கருணையாலும் தமக்கு மழை இறக்கப்பட்டது என்று கூறினாரோ, அவர் (என் மீது நம்பிக்கையுள்ள)முஃமினாகவும், (குறிப்பிட்ட) நட்சத்திரத்தால் மழை பெய்தது என்பதை நிராகரித்தவராகவும் விளங்குகிறார். எவர் மழை பொழிவதற்கு இன்னின்ன நட்சத்திரங்களே காரணம் என்று கூறுகிறாரோ (அவர் என் மீது நம்பிக்கையற்ற) காஃபிராகவும், நட்சத்திரங்கள் மீது நம்பிக்கையுள்ளவராகவும் விளங்குகிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், முஅத்தா, நஸயீ)
4. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சொன்னான்: ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.
5. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன். (நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா)
6. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதன் முதலில் இறைவழியில் உயிர் துறந்த ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்;கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்;?’ என்று கேட்பான்.
அதற்கு அந்த மனிதர், ‘நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரையில் போராடினேன்.’ என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய் சொல்கிறாய், வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். அவ்வாறே மக்களாலும் பேசப்பட்டு விட்டது.’ என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்து, குர்ஆனை ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு தான் அளித்த அருட்கொடைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், ‘நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?’ என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், ‘நான் உனக்காக(இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை(மற்றவர்களுக்கும்)கற்றுக்கொடுத்து, குர்ஆனையும் உனக்காக ஓதிவந்தேன்.’ என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் ‘நீ பொய்சொல்கிறாய். அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய அறிவை கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களர்லம்) பேசப்பட்டு விட்டது.’ என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி கட்டளையிடப்படும்.
அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவரிடம் அல்லாஹ் தான் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் ‘நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?’. என்று கேட்பான்.
அதற்கு அந்த மனிதர் ‘நீ எந்த வழிகளில் எல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் உனக்காக செலவு செய்யாமல் நான் விட்டதில்லை.’ என்று பதில் கூறுவார்.
அதற்கு அல்லாஹ் ‘நீ பொய் சொல்கிறாய். (வள்ளல் தனத்துடன்) வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும். என்பதற்குhகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது.’ எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுங்கள் என்று கட்டளையிடப்படும். (நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ)
7. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
‘மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.’ அப்போது அல்லாஹ் கூறுகிறான்: ‘என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.’ (நூல்: நஸயீ, அஹ்மத், அபூதாவுத்)
8. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
திருக்குர்ஆனின் தாய் சூரா பாத்திஹாவை ஓதாமல் ஒருவன் நிறைவேற்றும் தொழுகையானது குறையுள்ளதாகும். (அத்தொழுகை) முழுமை பெறாது. இவ்வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை திரும்பத்திரும்ப சொன்னார்கள்.
ஒருவர் அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘நாங்கள் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதால் கூடவா?.’ என்று வினவினார்.
அதற்கு அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: ‘நீங்கள் உங்கள் மனதிற்குள் அதை ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் சொல்லியதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன். ‘நான் எனக்கும் என்னுடைய அடியானுக்கும் மத்தியில் தொழுகையை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு.
அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். என்று ஓதியவுடன், அல்லாஹ், ‘என் அடியான் என்னைப் புகழ்ந்துள்ளான்.’ என்று சொல்கிறான்.
அடியான், அர்ரஹ்மானிர்ரஹீம்; என்று ஓதியதும், அல்லாஹ், ‘என் அடியான் கண்ணியத்தை எடுத்துரைத்துள்ளான்.’ என்று கூறுவான்.
அடியான், மாலிகி யவிமித்தீன் என்று ஓதியதும், அல்லாஹ், என் அடியான் என் மேன்மையை எடுத்துரைத்துள்ளான்.’ என்று கூறுவான்.
அடியான், இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன். என்று ஓதியதும், அல்லாஹ், ‘இது எனக்கும், எனது அடியானுக்கும் இடையேயுள்ளதாகும். எனது அடியான் கேட்பதை நான் அவனுக்கு கொடுப்பேன்.’ என்று கூறுவான்.
அடியான், இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம். கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன். என்று ஓதியதும், அல்லாஹ், ‘இது என்னுடைய அடியானுக்கே (உரித்தானது) என்னுடைய அடியான் எதனைக் கேட்கிறானோ, அதனை அவன் பெறுவான்.’ என்று பதிலுரைத்து முடிக்கிறான். (நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா)
9. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும். (நூல்: திர்மிதி)
10. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்;;. நோன்பு நோற்பவன் இரண்டுவித மகிழ்ச்சிக்குள்ளாகிறான். நோன்பைத் துறக்கும் வேளையில் ஒரு மகிழ்ச்சி. தனது ரப்பான அல்லாஹ்வைச் சந்திக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம். அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் மணத்தைவிடச் சிறந்ததாகும். (நூல்: முஸ்லிம், திர்மிதி)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.