10. மறுக்க முடியாத உண்மைகள்:
நாஸ்திகர்கள் மிகவும் பெரிதாக எண்ணியிருக்கும் இந்த உலகம் (பூமி), சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகச்சிறிய ஒன்றாகும். அண்ட வெளியில் காணப்படும் பெரும், பெரும் கோள்களுக்கு முன்னால் இந்த பூமி எம்மாத்திரம்? பூமி தன்னைத்தானே சுற்றிவர ஒருநாள் ஆகிறது.
ஏனைய சில கிரகங்களோ தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்துக் கூறுகிறார்கள். விஞ்ஞான உலகம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணற்ற பெரிய கோளங்கள் இருந்தாலும், அவைகளுள்ள இந்த பூமியைத்தவிர வேறு எந்த கோளத்திலும் மனித சஞ்சாரம் இருப்பதாக இதுகாரும் எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை.
அப்படியென்றால், மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரும்கோள்கள் இயங்கவேண்டியதன் அவசியம் என்ன? இதை நாஸ்திக நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நடுநிலையோடு சிந்திக்கிறவர்களுக்கு. மனித வாழ்வு மரணத்தோடு முற்றுப் பெறுவதில்லை. உலகில் தோன்றி, நெறிமிக்க நிறைவாழ்வு வாழ்ந்த இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றதுபோல், மரணத்திற்குப் பின்னால்தான் மனிதனுடைய உண்மையான வாழ்வே ஆரம்பமாகிறது என்பது எளிதில் புரியும். அப்போதுதான் இன்று உலகில், நியாயமானது, நியாயமற்றது என்று சொல்லப்படுபவற்றை நடுநிலையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
காரணம்: நியாயமானவை என்று சொல்லப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள், இவ்வுலக வாழ்வில் பெரும்பாலும் வறுமை, கஷ்டம், துன்பம் ஆகியவற்றை அனுபவிப்பதையே பார்க்கிறோம். இதற்கு நேர்மாற்றமாக நியாயமற்றவை என்று கருதப்படுவற்றை எடுத்து நடப்பவர்கள், பெரும்பாலும் செல்வச் செழிப்பிலும், சந்தோசத்திலும் மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம்.
நாஸ்திகர்கள் சொல்வதுபோல் மரணத்தோடு வாழ்வு முடிவு பெறுகிறதென்றால், இவ்வுலகில் செழிப்பையும், சந்தோஷத்தையும் தரும் காரியங்கள் நியாமானவையாகவும், வறுமை, கஷ்டம், துன்பம் தரும் காரியங்கள் நியாயமற்றவையாகவும் மக்களால் கருதப்படவேண்டும். நிலைமை அவ்வாறில்லை என்பதை நாஸ்திகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனித செயல்களின் விளைவுகள் இவ்வுலகோடு முற்று பெறுவதில்லை. அவை மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிய முடிகிறது.
நற்செயல் புரிபவன், இவ்வுலகில், வறுமை, கஷ்டம், துன்பம் இவற்றில் கிடந்து உழன்றபோதிலும், மறுமை வாழ்வில் அவன் புரிந்த நற்செயல்-நியானமான செயல்களுக்குரிய நல்ல பலனை காண்பது உறுதி. அதேபோல், நியாயமற்ற செயல்கனைப் புரிபவன் இவ்வுலகில், செல்வச் செழிப்புக் கொழிக்க இன்பம் அனுபவித்து வாழ்ந்த போதிலும், மறுமை வாழ்வில், அவன் புரிந்த நியாமற்ற செயல்களுக்குரிய தண்டனையைப் பெற்றே தீர்வான். இந்த நிலை இருக்குமானால் தான் இன்று உலகில் நியாயமான செயல்கள், நியாயமற்ற செயல்கள் என்று தரம் பிரித்து வைத்திருப்பதில்; நியாயம் இருக்க முடியும். மனிதனுடைய செயல்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென்று ஒரு நானை இறைவன் ஏற்படுத்தியிருகிறான், அதானல்தான் பரீட்சா வாழ்வு நடத்தும் மனிதன், உடனுக்குடன் உரிய விசாரணை, தீர்ப்பு, தண்டனை வழங்கப்படாது விடப்பப்டிருக்கிறான்.
11. பரிட்சை வாழ்க்கை:
மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். பல மாணவர்கள் தவறான விடை எழுதவே செய்வார்கள். பரீட்சை எழுதும் மண்டப மேலதிகாரிக்கு விடை தவறு என்று தெரிந்தாலும், தவறாக எழுதும் அந்த மாணவனை உடனே கூப்பிட்டு, தவறை திருத்தவோ அல்லது தண்டிக்கவோ முற்பட்டால், அந்த பரீட்சையே அர்த்தமற்றதாகவும் அனாவசியமாகவும் ஆகிவிடுகிறதல்லவா? எனவேதான், தவறாக விடை எழுதுவது தெரிந்தாலுங்கூட, தெரிந்த மாத்திரத்தில் திருத்தாது-தண்டிக்காது விட்டு, விடைத் தாளை திருத்துவதற்கென்றே குறிக்கப்பட்ட நேரத்தில்-நாளில், திருத்தி, வெற்றிபெற்றவர்கள், பெறாதவர்கள் என்று தரம்பிரிக்கப்படுகிறார்கள்.
இதில் இன்னொரு உண்மையும் அடங்கியிருக்கிறது. வெற்றிபெற்ற மாணவன், பரீட்சையை எண்ணி, தனது ஆசை, அபிலாஷைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, பரீட்சைக்கானவற்றைச் சேகரிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்திருக்கிறான். வேறு விதமாகச் சொன்னால், அவன் கஷ்ட-துன்ப வாழ்வை அனுபவித்திருக்கிறான். தோல்விகண்ட மாணவன் கதையோ நேர்மாறானது.. அவன் பரீட்சையை அலட்சியம் செய்து, பரீட்சைக்கானவற்றை சேகரிக்காது அதாவது கஷ்டம், துன்பம் அனுபவிக்காது, சிரமம் இல்லாத சந்தோஷ வாழ்வு வாழ்ந்தான். வெற்றிபெற்றவன் இப்போது பேரானந்தத்தை-பெருவாழ்வை அடையவும், அனுபவிக்வும் அவனின் வெற்றி காரணமாகிறது. தோல்வி கண்டவன் கஷ்டம், துன்பம், வறுமைப்பட்டு வாடும் நிலைக்கு, அவனின் நியாமற்ற செயல் காரணமாகிறது.
இதுபோன்று மனித வாழ்வு பரீட்சா வாழ்வாக அமைந்திருக்கிறது. மனிதர்கள் செய்யும் அடாத, கொடும் செயல்களை எல்லாம் இறைவன் கண்டும், உடன் தண்டனையை வழங்காது, தீர்ப்பு நாள் வரும் வரை அவர்களை விட்டுவைத்திருக்கிறான். தவறு கண்ட மாத்திரத்தில் உடனுக்குடன் தண்டனை வழங்குவதாக இருந்தால், பரீட்சா வாழ்வான இவ்வுலக வாழ்வு அர்த்தமற்றதாக, அனாவசியமாக ஆகிவிடும். இப்போது நாஸ்திக நண்பர்கள், உலகில் நடக்கின்ற அக்கிரமங்களை எல்லாம்-பஞ்சமா பாதகங்களை எல்லாம், இறைவன் ஏன் பார்த்துக் கொண்டு, உடனடியாக தண்டனையை வழங்காது விட்டு வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறோம்.
நாஸ்திகர்களின் பெரியதொரு சந்தேகமான, உலகில் மனிதர்கள் செய்யும் பெரும் தவறுகளை எல்லாம் இறைவன் எப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறான். உடனுக்குடன் ஏன் தண்டிப்பதில்லை என்பதற்குரிய விளக்கங்களைப் பார்த்தோம்.
இனி சிந்தனையாளர்களையும் திணறச் செய்யும், நாஸ்திகர்களின் ஒரு கேள்வியைப் பார்ப்போம்.
12. மூலத்திற்கு மூலம் வேண்டுமல்லவா?
ஒவ்வொரு பொருளின் தோற்றத்திற்கும் மூலம் இருக்கிறது, அடிப்படை இல்லாத பொருளே இல்லை, படைத்தவன் இல்லாமல் படைப்பினங்கள் ஏற்பட்டிருக்க முடியாது, படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று இதிலிருந்து நிரூபணமாகின்றது என்று ஆஸ்திகர்கள் சொன்ன மாத்திரத்தில், அப்படியானால் அதே அடிப்படையில், இறைவனையும் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டுமல்லவா? அவன் யார்? யாருமே படைக்காமல் அவன் இருப்பது உண்மையானால், அதே போல் யாருமே படைக்காமல் எல்லா மூலப்பொருட்களும் ஏன் உண்டாகி இருக்க முடியாது? என்ற கேள்வியேயாகும் அது.
இந்தக் கேள்வியைக் கேட்டமாத்திரத்தில், அறிவாளிகளும் சற்று தடுமாறத்தான் செய்வார்கள், ஆனால் சிந்திப்பவர்கள் இதிலுள்ள போலித் தனத்தை அறிந்துகொள்ள முடியும். ஆழ்ந்து நோக்கும் போது, மனிதன் பார்க்கும் அனைத்திலும் அடிப்படை உண்மைகளுக்கும், அந்த அடிப்படை உண்மைகளை வைத்து முடிவு செய்யக்கூடிய உண்மைகளுக்கும் வித்தயாசம் இருக்கிறது என்பதை விளங்கமுடியும்.
ஒரு தமிழ் பேசும் குழந்தை பள்ளிக்குச் சென்றவுடன், அங்கே ‘அ’ என்ற எழுத்தை எழுதி, ஆசிரியர் ‘ஆனா’ என்று சொன்னவுடன் அக்குழந்தை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கிறது. அப்படி எல்லா எழுத்துக்களையும் எவ்வித ஆராய்ச்சியும், சிந்தனையுமில்லாத நிலையில் எற்றுக்கொண்ட அக்குழந்தை, அதன் பின் அ..ப்..பா.. என்ற எழுத்துக்களை அம்மா என்று சொல்லிக் கொடுத்தால் இப்பொழுது ஆட்சேபணையைக் கிளப்புகிறது அக்குழந்தை. அடிப்படை உண்மைகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டதையும் அந்த அடிப்படை உண்மைகளை அஸ்திவாரமாக வைத்து அமைக்கப்படும் விஷயங்களில் பார்த்து பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வதையும் காண்கிறோம்.
கணக்கிலும் இதே நிலைதான். எல்லாத்துறைகளிலும் இதே நிலைதான் அடிப்படை உண்மைகள் (Axioms, Fundamental Truths, Assumptions) என்று கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு துறையே இல்லை என்று சொல்லாம். அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உலகில் எதையுமே செய்ய முடியாது. நாஸ்திக நண்பர்கள் இந்தத்துறைகளிலெல்லாம் தங்கள் விதண்டா வாதங்களளைச் செய்யாமல், அவற்றை கண்ணை மூடிக்கொண்டு, ஒப்புக்கொண்டு செயல்படத்தான் செய்கிறார்கள்.
அடிப்படை உண்மைகள் என்று ஆரம்பத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால், பின்னால் உள்ளவற்றையும் அடிப்படை உண்மைகளாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்றோ, அல்லது பின்னால் உள்ளவற்றை பார்த்து பரிசீலினை செய்து ஏற்றுக்கொள்வது போல், ஆரம்பத்தையும் பார்த்து பரிசீலனை செய்தே எற்றுக்கொள்ளவேண்டும் என்றோ முரட்டு வாதம் செய்வதில்லை. இதிலிருந்தே இறைவனை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் அறிவை யாருக்கோ கடன் கொடுத்துத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் எளிதாக உணரமுடிகின்றது. ஆம் சாத்தானின் மாயவலையில் அவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள். அவனுடைய தூண்டுதலின் காரணமாக இந்த பொருத்தமற்ற விதண்டா வாதங்கனை எடுத்து முன் வைத்கின்றனர்.
நாம் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இறைவன் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட சந்தேகங்களையும், ஐயங்களையும் கிளப்புகின்றீர்களோ, அதே போன்ற சந்தேகங்களையும், ஐயங்களையும் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பல விஷயங்களில் மட்டும் ஏன் கிளப்ப மாட்டேங்கிறீர்கள்? 2+2=4 என்ற சாதாரணண கணக்கு தெரியாத நிலையில் 2/100 என்ற பெரிய கணக்கைப்பற்றி ஏன் சிந்திக்கிறீர்கள்? என்பதுதான் நமது கேள்வி. 2+2=4 என்ற கணக்கைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை 2/100 என்ற கணக்கைப் பற்றித்தான் எனக்கு அக்கறை என்று சொல்லும் எந்த மனிதனையும் புத்திசாலி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
இந்த கண்ணோட்டத்தில் தான் குர்ஆனோ குர்ஆன் என்று நாஸ்திகரான புவணன் புலம்பி இருக்கிறார். அவருடைய ஆதங்கமெல்லாம், இறைவனை மறுத்துப் பேசும், இறைவனை திட்டும் நபர்களையெல்லாம் அந்த இறைவன் எப்படி நீண்டகாலம் விட்டு வைத்திருக்கிறான்? என்பது தான். இதைப்பற்றி முன்னரே தெளிவாகப் பார்த்து விட்டோம்.
அரசாங்கம் போடும் சட்டங்களை விமர்சித்துக் கொண்டும், எதிர்த்து பேசிக் கொண்டும், திட்டிக்கொண்டும் திரியும் பலரை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது வீராப்பு பேசிய இவர்களும் அந்த நடவடிக்கைககளுக்கு அடங்கித்தான் போக நேரிடுகின்றது.
சாதாரண ஒரு அரசாங்கத்தை-மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை மீற முடியாத இவர்களா, இறையாட்சியை மீறி சாதித்து விடப் போகிறார்கள்? உண்மையான சிந்தனைத்திறனோ, ஆற்றலோ அற்றவர்கள்தான், இப்படிப்பட்ட வீண் வாதங்களை பிதற்றித் திரிவார்கள் இவர்கள் எதைப் பகுத்தறிவு என்று சொல்கிறார்களோ, அதுதான் உண்மையில் பகுத்தறிவா என்று அடுத்துப்பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்