Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு!

Posted on July 8, 2010 by admin

கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு!

  மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி   

(ஸஅது இப்னு மாலிக் என்ற) இப்னு ஸினான் அல்குத்ரீரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது.

அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான்.

பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு “தவ்பா” (பாவமன்னிப்பு) உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், தவ்பாவுக்குமிடையே தடையாக இருப்பவர் யார்? நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார்.

அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள்.

அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

இந்த நபிமொழி, ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உட்பட பல்வேறு ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மூலம் பல நல்ல படிப்பினைகளை நாம் பெறமுடிகின்றது.

1. முதலாவதாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் விசாலமானது என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது! 100 கொலைகள் செய்தவன் கூட தனது பாவத்தை உணர்ந்து தௌபாச் செய்து பாவமன்னிப்புக் கோரினால் அந்த அளவற்ற அருளாளன் – நிகரற்ற அன்புடையவன் அதை அங்கீகரித்து கருணை காட்டக்கூடியவனாக இருக்கின்றான்.

2. தௌபாவின் சிறப்பை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

‘(நபியே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாக வேண்டுகின்றனர். குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் வேதனை அவர்களிடம் வந்திருக்கும். நிச்சயமாக அது அவர்கள் உணர்ந்துகொள்ளாத நிலையில் திடீரென அவர்களிடம் வரும்.’ (29:53)

இந்த வசனத்தில் பாவத்தில் வரம்பு மீறிச் சென்றவர்களைக் கூட, ‘என்னுடைய அடியார்களே! நீங்கள் என் ரஹ்மத்தில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நான் கொலை உட்பட அனைத்துத் தவறுகளையும் மன்னிக்கக்கூடியவன் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

ஒரு ஹதீஸுல் குத்ஸியில்,

‘எனது அடியார்களே! நீங்கள் இரவு-பகலாக பாவம் செய்பவர்கள்தான். நானோ, அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கக்கூடியவன். என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கின்றேன்’ என கூறுகின்றான்.(முஸ்லிம்)

எனவே தௌபா என்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கக்கூடியது. ஷிர்க் உட்பட அனைத்துப் தவறுகளுக்கும் தௌபாவின் மூலம் மன்னிப்புப் பெறலாம். ஷிர்க்கைப் பொறுத்தவரையில் அதே நிலையில் மரணித்து விட்டால், மன்னிப்பே இல்லை. ஏனைய தவறுகளைப் பொறுத்தவரையில் உலகத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்கும். மன்னிப்புக் கேட்காமல் மரணித்து விட்டால், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்; நடினால் தண்டிப்பான். தண்டித்த பின் ஈமான் இருப்பதால், இணை வைக்காது வாழ்ந்ததால் என்றாவது ஒரு நாள் நரகத்திலிருந்து அவரை அல்லாஹ் வெளியேற்றுவான். எனவே, எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்புண்டு. செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு அதன் பின்பு தவறு செய்யாது வாழவேண்டும்.

3. அறிவின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மார்க்க அறிவு அற்ற, வணக்க-வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரிடம் “பத்வா” கேட்ட போது, அவர் அறிவுடன் பதில் கூறாது உணர்ச்சி வசப்பட்டு ‘உனக்கு மன்னிப்பு இல்லை’ என்கிறார். இதனால், ஆத்திரமுற்ற அம்மனிதர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலைக்குள்ளானார்.

ஆனால், அறிஞரிடம் கேட்ட போது ‘மன்னிப்பு உண்டு’ என்று பதில் கூறியதுடன், நல்ல மனிதராகத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். இதன் மூலம் அறிவற்ற வணக்கவாளியை விட அறிஞனின் அந்தஸ்த்துத் தெளிவுபடுத்தப்படுகின்றது! எனவே, நாம் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்.

4. அடுத்து, இந்த ஹதீஸ் பத்வா-மார்க்கத் தீர்ப்புக் கேட்கும் போது தகுதியானவரை அறிந்து கேட்க வேண்டும் எனக் கற்றுத் தருகின்றது. இபாதத்தில் ஈடுபடும் அனைவரும் மார்க்கத் தீர்ப்புக் கூறுவதற்குத் தகுதியானவர்களல்ல. எனவே, கற்றறிந்த ஆலிம்களிடம் மார்க்க விளக்கங்களை, தீர்ப்புக்களைப் பெற முயலவேண்டும். “ஆலிம்” என்ற போர்வையில் இருக்கக்கூடிய குர்ஆன்-ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு அற்றவர்களிடமோ அல்லது போலியான உருவமைப்பையும் வெளி அடையாளங்களையும் கொண்டு திகழ்பவர்களிடமோ மார்க்க பத்வாக்களைப் பெற்று நம்மை நாமே அழித்துக்கொள்ளாது ஆலிம்களிடம் மார்க்கத் தீர்வைப் பெறவேண்டும்.

5. தமக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த, சரியான விளக்கம் தெரியாத விஷயத்தில் எவரும் தீர்ப்புக் கூற முனையக்கூடாது என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம். முதலாவதாகப் பதில் கூறியவர் உணர்ச்சி வசப்பட்டுப் பதில் கூறியதால் அநியாயமாகக் கேள்வி கேட்டவர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலை தோன்றியுள்ளது!

6. இரண்டாவதாக, “பத்வா” கூறியவர் கேள்விக்குப் பதில் மட்டும் கூறாமல் ‘நீ இந்த ஊரில் இருக்காதே! அருகில் நல்ல ஊர் இருக்கின்றது. அங்கே போய் அந்த மக்களுடன் சேர்ந்து வாழ்’ என அவர் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். மக்களுக்கு மார்க்கம் கூறுபவர்கள் வெறுமனே பதில் கூறுபவர்களாக மட்டும் இருக்காது, அந்தப் பதிலுக்கு ஏற்ப வாழ்வதற்கான வழியையும் காட்ட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

‘வட்டி எடுக்காதே’ என்று சொன்னால் மட்டும் போதாது, வட்டியை விட்டும் விலகி வாழ வழிகாட்ட வேண்டும். “பித்அத்” செய்யாதே என்று கூறினால் மட்டும் போதாது, அதற்குண்டான “ஸுன்னா”வையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை இந்த ஹதீஸ் மூலம் பெறமுடியும்.

7. அடுத்து, நல்ல சூழலில் வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது! அந்த “ஆலிம்” திருந்தி வாழ விரும்பிய மனிதனுருக்கு அவன் இருக்கும் கெட்ட ஊரை விட்டும் விலகி, நல்ல மக்கள் வாழும் இடத்திற்குப் போகுமாறு கூறுகின்றார். எனவே, சூழல் மனிதனிடம் தாக்கம் செலுத்தும். இந்த வகையில் நாம் வாழும் சூழலை நல்ல சூழலாக மாற்றுவது அல்லது நல்ல சூழலுக்கு இடம்மாறுவது அவசியமாகும்.

குறிப்பாக, அநாச்சாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்து போன இக்காலத்தில் நாமும் நமது குழந்தைகளும் கெட்டு விடாத நல்ல சூழலை நமது வாழ்விடமாக மாற்றிக்கொள்வது அவசியமாகும். நாம் “தக்வா”வுடையவர்களுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும். இந்த வகையில் நாம் வாழும் சூழல் குறித்துக் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

8. “கொலைக் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு” என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.

“கொலை” என்பது மிகக் கொடிய குற்றமாகும். அடுத்த மனிதனின் உரிமைகள் விடயத்தில் இழைக்கப்படும் கொடிய அத்துமீறலாகவும் அது திகழ்கின்றது. கொலைக்கு இஸ்லாம் மரண தண்டனையை விதித்துள்ளது. இருப்பினும் ‘கொலை செய்தவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்குமா? கிடைக்காதா?’ என்று கேட்டால், “கிடைக்கும்” என்ற கருத்தைத்தான் இஸ்லாம் கூறுகின்றது.

9. “ஒரு முஃமினை வேண்டுமென்றே கொன்றவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான்” என பின்வரும் வசனம் கூறுகின்றது.

‘நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ, அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும் விட்டான். அவனுக்கு மகத்தான வேதனையையும் அவன் தயார் செய்து வைத்துள்ளான்.’ (4:93)

இந்த வசனத்தை வைத்து கொலை செய்தவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் என இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். ஏனைய ஸஹாபாக்கள் மாற்றுக் கருத்தில் இருக்கின்றனர்.

“இபாதுர் ரஹ்மான்” எனும் அல்லாஹ்வின் அடியார்கள் பற்றி அல்குர்ஆன் கூறும் போது, ‘அவர்கள் இணை வைக்க மாட்டார்கள், கொலை செய்ய மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இவற்றைச் செய்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு’ என்று கூறுகின்றது. (பார்க்க 25:63-69)

இவற்றைச் செய்து விட்டு, முறையாக தௌபாச் செய்து நல்லவர்களாக மாறுபவர்களுக்கு மாவமன்னிப்பு மட்டுமன்றி அவர்கள் செய்த பாவங்களே நன்மைகளாக மாற்றப்படும் என அதற்கு அடுத்த வசனம் கூறுகின்றது.

‘எனினும், யார் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புரிகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.’ (25:70)

இந்த வசனம் மிகத் தெளிவாகவே “கொலைகாரன் தௌபாச் செய்தால், மன்னிப்பு உண்டு” என்று கூறுகிறது!

அடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களிடம் “பைஅத்” வாங்கும் போது, “இணை வைக்கக்கூடாது, திருடக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, கொலை செய்யக்கூடாது” என்றெல்லாம் கூறி விட்டு, “யார் இவற்றைச் செய்கிறாரோ, அவர் உலகில் தண்டிக்கப்படுவார். யார் இவற்றைச் செய்து அல்லாஹ் அதை மறைத்து விட்டானோ, அவனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்|” என்று கூறினார்கள். (உப்பாததிப்னு ஸாமித் – புகாரி)

மேற்படி ஹதீஸும் “கொலை செய்தவனை அவன் தௌபாச் செய்யாமல் மரணித்திருந்தாலும், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்” என மன்னிப்பு-தண்டிப்பு இரண்டையுமே அல்லாஹ்வின் நாட்டத்தில் விட்டுள்ளது. அல்லாஹ் யாரை மன்னிப்பான்? யாரைத் தண்டிப்பான்? என்பது அவனது அதிகாரத்திற்குட்பட்டது. அதில் யாரும் தலையிட முடியாது!

கொலைகாரனுக்கு மன்னிப்பே இல்லையென்றால் பல ஸஹாபாக்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து விடுவர். ஹம்ஸாவைக் கொன்ற வஹ்ஷி. இவ்வாறே, முஸ்லிம்களுக்கு எதிராக போர்க் களங்களில் யுத்தம் செய்து விட்டுப் பின்னர் இஸ்லாத்தில் இணைந்த இக்ரிமாரளியல்லாஹு அன்ஹு, துமாமாரளியல்லாஹு அன்ஹு, காலித் பின் வலீத்ரளியல்லாஹு அன்ஹு, போன்ற பலரும் மன்னிப்பு அற்றவர் பட்டியலில் சேர நேரிடும். எனவே, கொலை செய்தவன் மரணிப்பதற்கு முன்னரே தௌபாச் செய்தால் அவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருந்தால் இஸ்லாமிய சட்டப் பிரகாரம் அவர் குற்றவியல் சட்டப்படி கொல்லப்படுவார் அல்லது கொல்லப்பட்டவரின் குடும்பம் மன்னித்தால் மன்னிக்கப்படுவார்.

மரணித்த பின் அவர் தண்டிக்கப்பட்டால், நரகில் நீண்ட காலம் இருப்பார். ஆனால், “ஷிர்க்”குடன் மரணித்தவர் போன்று என்றென்றும் நரகிலேயே இருக்க மாட்டார். என்றாவது ஒரு நாள் அவர் நரகத்தை விட்டும் மீட்கப்பட்டுச் சுவனத்தில் நுழைவிக்கப்படுவார் என்பதே சரியான கருத்தாகும்.

“முஃதஸிலாக்கள்” எனும் வழிகெட்ட பிரிவினரும், “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை, அவன் நீடித்து நிலையாக நரகத்தில் இருப்பான்” என்ற கருத்தில் இருக்கின்றனர்.

இக்கொள்கையைச் சார்ந்த ஒருவன்,

‘கொலைகாரன் நரகத்தில் நிலையாக இருப்பான் என்று நீ ஏன் கூறினாய்?’ என அல்லாஹ் மறுமையில் என்னிடம் கேட்டால், ‘யா அல்லாஹ்! நீதான் (4:93) இப்படிக் கூறினாயே! அதனால்தான் நான் அப்படிக் கூறினேன்’ எனப் பதில் கூறுவேன்’ என தன் வாதத்தை நியாயப்படுத்தி கூறினான்.

அப்போது அச்சபையில் இருந்த ஒரு சிறுவர் ‘இணை வைத்தலைத் தவிர ஏனைய பாவங்களை நான் நாடினால் மன்னிப்பேன் என்று கூறினேனே! கொலை என் நாட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று உனக்குக் கூறியது யார்? என்று அல்லாஹ் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்ட போது, அந்த வழிகேடன் வாயடைத்துப் போனான்.

எனவே, தௌபாச் செய்தால் கொலைக்கும் மன்னிப்பு உண்டு என்பதே சரியான கருத்தாகும். இதைத்தான் குர்ஆனும் கூறுகின்றது! அந்தக் குர்ஆனின் கூற்றை உறுதி செய்வதாக இந்த ஹதீஸும் அமைந்துள்ளது.

10. அடுத்து இந்த ஹதீஸ் கொலைகாரனுக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுவதன் மூலம் கொலைக் குற்றம் பெருகுவதைத் தடுக்கின்றது! “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை” என்று கூறினால், ஒரு கொலை செய்தாலும் நரகம்-நரகம்தான். பத்துக் கொலை செய்தாலும் நரகம்தானே என்ற அடிப்படையில் செயற்பட ஆரம்பித்து விடுவான். “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை” என்று கூறுவது கொலைக் குற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. ‘மன்னிப்பு இல்லை’ என்று கூறியவனையே அவன் கொன்றுள்ளான்.

எனவே, கெட்டவனுக்கும் திருந்தி வாழ வழி விடவேண்டும். அல்லாஹ்வின் அன்பை விடக் கோபத்தை முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானாலும் கொலையை எப்படி மன்னிப்பது என்பது கேள்வியாக இருக்கலாம். ஆனால், அல்லாஹ்வின் அன்பையும், விசாலமான அவனது மன்னிப்பையும் முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு கொலைகாரனுக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான் என்பது மறுப்பதற்குரிய ஒன்றாகத் திகழாது!

எனவே இந்த ஹதீஸ் கொலைக்கு மன்னிப்பு உண்டு எனக் கூறி, இன்னும் இன்னும் கொலை செய்! என்று தூண்டவில்லை. கொலை செய்தால் மன்னிப்பு உண்டு! திருந்தி வாழ்! என வழிகாட்டுகின்றது.

11. அடுத்தது, மார்க்க விடயங்களில் கேள்வி கேட்பது இன்று அதிகரித்துள்ளது! ஆனால், சொந்த வாழ்வில் அமல் செய்வதற்காகக் கேள்வி கேட்காமல் சும்மா கேட்பதற்காக அல்லது பரீட்சித்துப் பார்ப்பதற்காக, ‘என்ன சொல்றார் என்று பார்ப்போமே!’ என்ற எண்ணத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்வி கேட்பவர் தகுந்த பதில் கிடைத்தால், அதை அமல் செய்ய வேண்டும். இந்த மனிதர் அந்த ஆலிம் கூறியபடி தனது சொந்த ஊரை விட்டு விட்டு நல்ல ஊரை நோக்கி “ஹிஜ்ரத்” செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, அமல் செய்வதற்காக இஸ்லாத்தை அறிந்துகொள்ள முற்படவேண்டும்.

12. நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.

‘உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள மன்னிப்பின் பக்கமும், வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவர்க்கத்தின் பக்கமும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.’ (3:133)

எனக் குர்ஆன் கூறுகின்றது. எனவே, நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தாது அவசரமாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் குறுக்கிட்டு நல்லதைச் செய்ய விடாமல் தடுத்து விடுவான். இந்த ஹதீஸ் அவர் நல்ல ஊரை நோக்கி ஒரு அடி அதிகமாகச் சென்றதால் இவர் நன்மையின் பக்கம் சற்று விரைவாகச் சென்றுள்ளார் என்ற அடிப்படையில் அவரது “ரூஹ்” ரஹ்மத்துடைய மலக்குகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது.

இவ்வாறு, பல்வேறுபட்ட நல்ல பாடங்களையும் படிப்பினைகளையும் இந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. இந்தப் பாடங்களைப் படிப்பினையாகக் கொண்டு செயற்பட முனைவோமாக!

source: http://ismailsalafy.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 29 = 39

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb