தமிழ் முஸ்லிம் நண்டுகள்!
ஒரு கூஜாவுக்குள்ளே நிறைய நண்டுகள் இருந்துச்சாம். ஹிந்து நண்டுகள், கிறித்துவ நண்டுகள், முஸ்லிம் நண்டுகள் எல்லாம் இருந்துச்சாம்..உள்ள இருந்த ஹிந்து நண்டுகள் சாதி அடிப்படையில் உயர்சாதி நண்டுகள், பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், மிக பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், தாழ்த்தப்பட்ட சாதி நண்டுகள் அப்படின்னு பல பிரிவுகளாக இருந்துச்சாம்.
அது போலவே கிறித்துவ நண்டுகளும் சாதி அடிப்படையில் பிரிந்து .நாடார் கிறுத்துவ நண்டுகள் – வன்னிய கிறுத்துவ நண்டுகள், தலித் கிறித்துவ நண்டுகள் அப்படின்னு கிடந்ததாம் – ஆனால் முஸ்லிம் நண்டுகளெல்லாம் மத்த நண்டுகள பாத்து ஏளனமா சிரிச்சக்கிட்டே சொன்னிச்சாம் “நாங்கல்லாம் ஒரே மாதிரியான நண்டுகள்.. ஏற்ற தாழ்வு எங்களுக்குள்ள கிடையாது” அப்படின்னு.. பிற நண்டுகளும் அத நம்பி .. அடடா… முஸ்லிம் நண்டுகள் மாதிரி ‘சகோதரத்துவத்தோட’ ஒத்துமையா இருக்கனும்னு நெனச்சி பெருமூச்சு விட்டதாம்.
நண்டுகளுக்கெல்லாம் காலங்காலமா கூஜாக்குள்ளாற அடஞ்சி கெடந்து வாழ்க்கையே வெறுத்து போயிடிச்சாம்..சுதந்திரமா சுற்றித்திரிய வேண்டிய நம்மை அநியாயமாக இப்படி கூஜாக்குள்ள அடச்ச்சுப்போட்டுட்டானுங்களே அப்படினு புலம்ப ஆரம்பிச்சிடிச்சாம்.. எல்லா நண்டுகளும் யாரு எப்ப மூடிய தொறப்பா..ஏறி வெளியே போகலாம்னு ஆர்வமாக இருந்துச்சாம்..
எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி அந்த கூஜாவின் மூடிய யாரோ தொறந்து வெச்சாங்களாம்.. அதைப் பார்த்தவுடன் நண்டுகளுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாம்… முதலில் எல்லாரையும் முந்திக்கொண்டு.. உயர் சாதி நண்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வந்ததாம்.. அப்புறம் கொஞ்சநேரங்கழிச்சு மத்த நண்டுங்கள் எல்லாம் வெளிய வந்ததாம். அது மாதிரியே சாதி வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த கிறித்துவ நண்டுகளும் ஒவ்வொரு பிரிவா வெளியே வந்ததாம்..
ஆனா வெகு நேரம் ஆகியும் ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளிய வரவே இல்லையாம்.. உள்ளார பாத்தா… ஒரு முஸ்லிம் நண்டு கஷ்டப்பட்டு மேலே ஏறி வர முயற்சி செய்றப்ப..மாற்று இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் நண்டுகள் ’குரூப்பா’ ஒன்னு சேர்ந்துக்கிட்டு அதோட கால புடிச்சி இழுத்து கீழே போட்டு கைக்கொட்டி சிரிச்சிச்சாம்.. .அது மாதிரியே..மாத்தி மாத்தி குரூப் சேர்ந்துகிட்டு – மற்ற நண்டோட காலப்பிடிச்சி இழுத்து கீழே போடுறது தொடர்ந்து நடந்திச்சாம்..
இத பாத்த வெளியே வந்த நண்டு ஒன்னு கேட்டிச்சாம்.. ஏன் இப்படி உங்களுக்குள்ள எவரும் வெளியா வராத மாதிரி ‘கால் வாருகிற’ வேலய கச்சிதமா பன்னுறீங்க்கன்னு..நியாயமான கேள்விதானே கேட்டுச்சு அந்த நண்டு.. ஆனா அந்த ஒரு கேள்விக்கு..உள்ள இருந்த முஸ்லிம் நண்டுகள்ள ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி பதில் சொன்னிச்சாம்..
ஒவ்வொரு பதிலா பார்ப்போமா..?
ஒரு நண்டு சொன்னிச்சாம் நாங்க வெளியே ஏறி போகாம – எங்க கால்கள் முடங்கி போவதற்கு காரணமே இந்த சுன்னத் வல் ஜமாத் நண்டுகள்தான்.அதக்கேட்ட சுன்னத் வல் ஜமாத் ’தலைவர்’ நண்டு சொன்னிச்சாம்..”இந்த ‘தவ்ஹீத்’ நண்டுகள் வந்த பிறகுதான் கால் வாரும் வேலை இப்படி மும்முரமா நடக்குது..எங்க மேலே குத்தம் எதுவும் இல்ல” அதக் கேட்ட மத்த தவ்ஹீது நண்டுகளுக்குள்ள இருக்குற ஒரு குரூப்பு நண்டுகளுக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துடுச்சாம்..”தவ்ஹீது” நண்டுகள்ன்னு ‘பொதுப்படையா சொல்லாதே. நாங்கதான் – ஒரிஜினல் தவ்ஹீது நண்டுகள்..மத்ததுல்லாம் போலிகள் – வழிகேட்டில் இருப்பவர்கள் இதக்கேட்ட மத்த நண்டுகளுக்கு கோபம் வந்து. “நாங்களும்தான் தவ்ஹீது -.யாரு ஒரிஜினல் – யாரு போலின்னு சொல்றதுக்கு யாருக்கும் அருகதை இல்லைன்னு.. இதக்கேட்ட இன்னொரு குரூப் நண்டுகள் ” போலிகளை அடையாளம் காட்டும் வரை ஓயமாட்டோம்..உறங்கமாட்டோம் அப்படின்னு சவால் விட்டதாம்.
ஒவ்வொரு அணியைச் சார்ந்த தலைமை நண்டுகளும் – எதிர் அணியை சார்ந்தவரகள் உண்மையான “தவ்ஹீது” நண்டுகள் அல்ல என்பதை வி.சி.டி, வார-மாத இதழ், இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ‘தோலுரித்து’ காட்டுவதற்காக – கூஜாக்குள்ள சிக்கி கிடக்கும் ‘தொண்டர்’ நண்டுகளிடமும் – பிழைப்புக்காக மனைவி மக்களை பிரிந்து – பாலைவனத்தில் கூலிக்கு வேலைப் பார்க்கும் ’தொண்டர்’ நண்டுகளிடம் மும்முரமாக நிதி வசூல் பன்னப்பட்டதாம்
அன்றிலிருந்து இன்றுவரை – யாரெல்லாம் உன்மையான தவ்ஹீது அல்ல என்று நிரூபிப்பதற்காக ‘மார்க்க பிரச்சாரம்’ – ‘ஏகத்துவ விளக்கம்’ ‘இஸ்லாமிய விளக்கம்’ என்று பல பெயர்களில் – இயக்கம் வளர்க்கும் பணி தொடர்ந்து வருகிறதாம். தலைவர் நண்டுகளின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரத்தில் சிக்கிய நண்டுகள் கூஜாவை விட்டு வெளியே போகவேண்டும் என்பதை மறந்துவிட்டதாம்.. இயக்க வெறிபிடித்த சில நண்டுகள் உண்மையான தவ்ஹீத் நண்டு யாருன்னு முடிவா தெரிவதற்குள்ள எந்த இயக்கத்தை சார்ந்த நண்டாவது வெளியே போக முயற்சி பன்னினால்..கால புடிச்சி ஒரே இழுப்பா இழுத்து கீழே போடனும்னு “குர் ஆன் – ஹதீஸ்” ஆதாரத்தோடு ஒரே ஒரு தீர்மானம் மட்டும் ‘தொண்டர்’ நண்டுகளின் ‘நாரே தக்பீர்’ ..அல்லாஹ் அக்பர்’ கோசங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டதாம்..
இயக்க உறுப்பினர்களாக காலம் கழித்த சில நண்டுகள் – தாம் இதுவரை செய்த ‘கால் வாறும்’ செயலால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லையென்று காலங்கடந்து ஞானோதயம் வந்ததாம் – ஆனால் தலைமையை எதிர்த்து கேள்விக்கேட்கும் மனபான்மை மழுங்கி போனதால் – இயக்கத்தை விட்டு வெளியேறாமல் – கால் வாறும் பணியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்ததாம். இனியாவது முஸ்லிம் நண்டுகள் ஒற்றுமையாகி – கூஜாவை விட்டு வெளியேறும் என்று நம்பிக்கையுடன் அந்த நண்டுகள் இருந்தபொழுது – கால் வாறும் பணியை செவ்வென செய்வதற்காக புதிய தலைமுறையை சார்ந்த இளைய நண்டுகள் உருவாக்கப்பட்டு – தயார் நிலையில் இருந்ததாம்.. இந்நிலை எதிர்காலத்திலும் எவ்வித தடையுமின்றி நடைபெற தேவையான ஏற்பாடுகளை ஒவ்வொரு இயக்க தலைமையும் திட்டமிட்டு செய்து வருகின்றனவாம்..
அன்றிலிருந்து – ஒவ்வொரு முஸ்லிம் நண்டும் கூஜாவை விட்டு வெளியேற என்ணும் பிற நண்டுகளின் கால்களை இறுக்கமாக பிடித்து – இழுத்து போட்டு இயக்கத் தலைமையிடம் நற்பெயர் வாங்க போட்டி போட்டதாம் .அதனால..கூஜாவை விட்டு இதுவரை ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளியே வராமல் இன்னும் அப்படியே இருக்குதாம்..
தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்