MUST READ, An Excellent Article
மெளலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.
இஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.
பொறாமை கொள்வது:
தனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.
ஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.
அயலவர் இரகசியங்களை அம்பலப்படுத்துவது:
“வீட்டுக்கு வீடு வாசல் படி” என்பர். எல்லா வீட்டிலும் குறைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும். அவரவர் குறைகளை அவரவர் மறைத்து வாழவே ஆசைப்படுகின்றனர்.
எனது குறையோ, எனது குடும்பத்துக் குறையோ மக்கள் மன்றத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கும் நான், எனது அயலவரின் குறைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது பெரும் துரோகம் அல்லவா? எனவே, அயலவரின் இரகசியங்களைப் பேண வேண்டும். அவர்களது குடும்ப விவகாரங்களையோ, குழந்தைகளின் குறைகளையோ வெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
குறை தேடுதல்:
சிலர் எப்போதும் அண்டை வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். அங்கே என்ன நடக்கின்றது? என்ன பேசுகின்றார்கள்? என உளவு பார்ப்பர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
“ஒட்டுக் கேட்காதீர்! உளவு பார்க்காதீர்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். எனவே, பொதுவாகப் பிறர் குறை தேடும் குணம் தடுக்கப்பட்ட ஒரு இழிகுணமாகும். அதிலும் குறிப்பாக அயலவர்களின் குறைகளைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துமீறுவது:
சிலர் அயலவர் விடயத்தில் வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர். தமது கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவர்களது விவசாயங்களை அழிக்கின்றனர். வேலியின் எல்லையை மாற்றி அநியாயம் செய்கின்றனர்.
“காணியின் வேலி எல்லையை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!” (முஸ்லிம்) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையே இல்லை.
மற்றும் சிலர் கழிவு நீரை அயலவர் பக்கம் திருப்பி விட்டு அநியாயம் செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் குழந்தைகளை நோவினை செய்கின்றனர். மற்றும் சிலர் அயலவரின் வீட்டுப் பொருட்களைத் திருடுகின்றனர்.
மிக்தாத் இப்னுல் அஸ்வத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “திருட்டைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடுத்துள்ளனர். அது ஹறாமாகும்!” என்று கூறினர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பத்து வீடுகளில் திருடுவதை விட தனது அண்டை வீட்டில் திருடுவது பாரதூரமானதாகும்!” எனக் கூறினார்கள். (அஹ்மத் 23854, அதபுல் முஃப்ரத், தபரானீ)
எனவே, அயலவர் விடயத்தில் அத்துமீறுவதும் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அநியாயம் செய்வதும் பெரும் குற்றமாகும் என்பதைப் புரிந்து இக்குற்றத்திலிருந்து விலகி நடப்பது கட்டாயமாகும்.
அயலவர் விரும்பாதவர்களுக்கு வீட்டைக் கூலிக்குக் கொடுத்தல்:
எனது வீட்டை நான் கூலிக்குக் கொடுப்பதாக இருந்தால் கூட அயலவர் நலன் பாதிக்காத விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். சிலர் பக்கத்து வீட்டாரைப் பழி வாங்குவதற்காகவே சண்டைக்காரர்களுக்கும், குடிகாரர்களுக்கும் வீட்டை வாடகைக்கு வழங்குகின்றனர். இது தவறாகும்.
இமாம்களான அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் வீடு தன்னுடையது என்றாலும், அயலவர்களுக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அதிலிருந்து ஒருவர் பயன் பெற முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.(ஜாமிஉல் உலூம் வல்ஹுக்ம் 1/353)
இந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் குடியிருக்கும் இடத்தில் இளைஞர்களைக் குடியமர்த்துவது, நல்லவர்களுக்கு மத்தியில் பாவிகளையும், கெட்டவர்களையும் குடியமர்த்துவது அல்லது முஸ்லிம்களுக்கு மத்தியில் காஃபிர்களைக் குடியமர்த்துவது அல்லது மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இரசாயணக் கழிவுகளை வெளியேற்றக் கூடிய தொழிற்சாலைகளுக்கு வாடகைக்குக் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் ஒருவர் ஒரு காணியை விற்பதாக இருந்தால் கூட முதலில் தன் அயலவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் வாங்கும் எண்ணம் இல்லையென்றால் பிறருக்கு விற்கலாம். ஆனால் இன்று, விற்கும் வரை அயலவருக்குத் தெரிந்து விடக் கூடாது என்றுதான் நினைக்கின்றனர். அயலவர்களும் பக்கத்துக் காணி விற்கப்படுகின்றது என்றால் ஏதேனும் குறைகளைக் கூறி விலையில் வீழ்ச்சியை உண்டுபண்ணும் விதத்தில்தான் நடந்துகொள்கின்றனர்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எவரிடத்தில் ஒரு காணி இருந்து, அவர் அதை விற்க விரும்புகின்றாரோ, அவர் முதலில் தன் அயலவரிடம் அதை விற்பதற்குக் காட்டட்டும்!” எனக் கூறினார்கள்.(இப்னுமாஜா 2493, தபரானீ)
இன்று சிலர் காணி விற்பது என்றாலே பக்கத்து வீட்டாரைப் பழி தீர்ப்பதற்காகவே விற்கின்றனர். காலம் பூராக இவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக மோசமானவர்களுக்கு விற்கப்படுகின்றது. சிலர் தமது ஊரைப் பழி தீர்க்க ஊருக்குள் காஃபிர்களுக்குக் காணி விற்கின்றனர். மதுபானக் கடைக்குக் காணியைக் கொடுத்து ஊரைப் பழி வாங்க முற்படுகின்றனர். இது ஹறாமாகும்.
நல்லுறவைப் பேணாமை:
சிலர் பிறர் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தவர் துன்ப-துயரங்களில் பங்கெடுக்க மாட்டார்கள். இஸ்லாம் இதை விரும்பவில்லை. ஸலாம் கூறுவது நோய் விசாரிப்பது, விருந்தளிப்பது, விருந்துக்கு அழைத்தால் பதிலளிப்பது, மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனச் சமூக உணர்வுடன் வாழும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. பிற முஸ்லிமுடன் இந்த ஒழுங்குகளைப் பேண வேண்டும் எனும் போது அயலவருடன் இது விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் நடத்தல் அவசியமாகும்.
உணவு விடயத்தில் பொடுபோக்கு:
சிலருக்கு அல்லாஹ் வாழ்க்கை வசதிகளை அளித்திருப்பான். இவர்கள் அண்டை வீட்டாரின் உணவுத் தேவை குறித்து அக்கறையின்மையுடன் நடந்துகொள்வர். தேவைக்கு அதிகமாகச் சமைத்து மீதியைக் குப்பையில் கொட்டுவர். ஆனால், அடுத்த வீட்டான் உண்ண உணவின்றி நொந்து போயிருப்பான். மற்றும் சிலர் தமது பிள்ளைகளுக்குப் பல்சுவைக் கனி வர்க்கங்களையும், உணவுகளையும் கொடுத்து விட்டு அவற்றின் தோல்களையும், பெட்டிகளையும் அடுத்த வீட்டுப் பிள்ளைகள் காணும் விதத்தில் போட்டு விடுவர். இதனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்க்கும் போதும், தமது பெற்றோரிடம் இது போன்று தமக்கும் வாங்கித் தருமாறு வற்புறுத்தும் போது அவர்கள் படும் வேதனையோ இவர்களுக்கு விளங்குவதில்லை.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“தனது அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமினாக மாட்டான்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தபரானீ, அதபுல் முஃரத்)
அபூதர் கிஃபாரிரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்;
“எனது நேசத்திற்குரிய தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு வஸிய்யத்துக் கூறும் போது, “நீ சமைக்கும் போது ஆணத்தை அதிகப்படுத்துவாயாக! அதன் பின்னர் பக்கத்து வீட்டார்களுக்கும் அதைக் கொடுப்பாயாக!” எனக் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
ஒரு கூட்டம் வயிறு நிறைய உண்ண, அவர்களிலொருவர் உணவு அற்ற நிலையில் பசியுடன் காலைப் பொழுதை அடைந்தால் அந்தக் கூட்டம் அல்லாஹ்வின் பாதுகாப்பை இழந்து விடும் என்ற கருத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பொன்மொழிகளில் காணலாம்.(அஹ்மத் 2/33, இப்னு அபீஷைபா 6/104, பஸ்ஸார் 1311)
எனவே, அண்டை-அயலவரின் உணவு நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உணவுப் பரிமாற்றம் அன்பையும், நட்பையும் வளர்க்கும். இது விடயத்தில் வசதியுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அன்பளிப்பின் மூலம் அன்பை வளர்த்தல்:
அன்பளிப்புக்கள் அன்பை வளர்க்கும்; கோபத்தையும், பகைமையையும் தணிக்கும்; உறவை வளப்படுத்தும். எனவே, அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பதன் மூலம் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பளிப்புகள் மிகப் பெறுமதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்னப் பொருளாக இருந்தாலும் அது அன்பை வளர்க்கும்.
அன்பளிப்புச் செய்யும் போது ஒரு வீட்டைத் தாண்டி மற்றொரு வீட்டுக்கு அன்பளிப்புச் செய்யக் கூடாது. ஏனெனில், அது ஒரு வீட்டின் அன்பை ஏற்படுத்தும் அதே வேளை, மற்றொரு வீட்டின் வெறுப்பைப் பெற்றுத் தந்து விடும்.
ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அயலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பளிப்பது?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் “யாருடைய வீட்டு வாசல் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றதோ அவர்களுக்கு!” என்று கூறினார்கள். (புகாரி 2259, 2595, 6020)
எனவே, நமது வீட்டுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு அன்பளிப்பில் முன்னுரிமையளிக்க வேண்டும். அண்டை-அயலவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது சின்னச் சின்ன மனஸ்தாபங்களை அழித்துப் பெரிய பிரச்சினைகளைக் கூடச் சின்னதாக மாற்றி விடும் தன்மை கொண்டதாகும்.
அன்பளிப்பு விடயத்தில் ஆணவங்கொள்ளல்:
அயலவர் அன்பளிப்புச் செய்த பொருள் அற்பமானது என்றாலும், அதை அலட்சியம் செய்யாது அவர்களது அன்பை மதித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக மறுத்து விட்டால் அது மன முறிவை உண்டுபண்ணி விடும். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிக்கிறார்கள்;
“நம்பிக்கை கொண்ட பெண்களே! உங்களில் எந்தப் பெண்ணும் தனது அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குழம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும், அதை அற்பமாகக் கருத வேண்டாம்!” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 6017, முஸ்லிம் 1030)
இந்த ஹதீஸில் பல அம்சங்கள் கவனிக்கத் தக்கதாகும்;
o அன்பளிப்பு எனும் போது அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதற்கில்லை:- இருப்பதற்கேற்ப அளிக்கலாம். ஈத்தம் பழத்தின் ஒரு பாதியை தர்மம் செய்வதன் மூலமாகவேனும் நீங்கள் நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
o தாராளமாக வைத்துக்கொண்டு அற்பமானதைக் கொடுக்கலாகாது:- இதைக் கொடுப்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒருவன் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கு விரும்பாத வரை பூரண முஸ்லிமாக முடியாது என்ற ஹதீஸைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
o தருவது அற்பமானது என்றாலும் அன்பையும், உறவையும் கருத்திற்கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். குறை காணக் கூடாது.
o இந்த ஹதீஸில் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அயலவர் உறவு பலப்படுவதும், பலவீனமாவதும் பெண்கள் கையில்தான் தங்கியுள்ளது. அடுத்து, உணவுப் பரிமாற்றத்தில் ஆண்களை விட அவர்களே அதிகத் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
o கொடுப்பதிலும், பெறுவதிலும் ஆண்களை விடப் பெண்களே பெருமை கொள்கின்றனர். “இதைக் கொடுப்பதா!?” எனக் கொடுப்பதை அற்பமாகக் கருதுவதும், “பெரிதாகத் தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க!” என அன்பளிப்புப் பொருட்களை அலட்சியம் செய்வதும் பெண்களேயாவர்.
o பெண்களின் உறவின் மூலம் தான் அயலவர் நட்பு விரிவடைகின்றது. இரண்டு பெண்களுக்கிடையில் கோபமும், பகையும் ஏற்பட்டு விட்டால், அவ்விருவரும் கணவர்-பிள்ளைகளையும் அடுத்தவரைப் பகைத்துக் கொள்ளச் செய்து விடுவார்கள். எனவேதான், இங்கே பெண்களை விழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுகின்றார்கள். எனவே, அன்பளிப்புகளை அலட்சியம் செய்யாது, கொடுத்து-பெற்று அயலவர் உறவைப் பலப்படுத்த வேண்டும்.
அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்தல்:
மனிதர்கள் எவரும் முழு நிறைவு பெற்றவர்கள் அல்லர். எல்லா மக்களுக்கும் அவசர-அவசியத் தேவைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு/வீட்டுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள் தேவைப்பட்டால் அயலவர் உதவியைத்தான் நாட வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டுக் கேட்டுத் தொல்லை கொடுப்பர். இதுவும் நல்லதல்ல. சிலர் தாம் பிறரிடம் கேட்டுப் பெற்றாலும், அவர்கள் ஏதாவது கேட்கும் போது குத்து வார்த்தைகள் கூறி, வேண்டா வெறுப்புடன் கொடுப்பர். அவர்கள் பேசும் தொணியும், கொடுக்கும் விதமுமே இனி இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என எச்சரிப்பதாக அமைந்திருக்கும். இதுவும் தவறாகும்.
உப்பு, சீனி, பால்மா, மண்வெட்டி, கோடாரி போன்ற பொருட்கள் தேவைப்படும் போது கொடுத்துதவுதல் அல்லது இரவல் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
மறுமையை நம்பாதவர்களின் அடையாளங்கள் சிலவற்றைக் கூறும் போது, அல்லாஹ் சூறா மாஊனில் “அற்பப் பொருளையும் பிறருக்குக் கொடுக்காமல் தடுப்பார்கள்!” எனக் கூறுகின்றான்.
இரவல் பெற்ற பொருளை மீள அளிக்காமை:
சிலர் பிறரிடம் இரவல் பெறுவர். அதை மீள அளிக்க மாட்டார்கள். இந்நிலையில் சிலர் கேட்டுப் பெற்றுக்கொள்வர். மற்றும் சிலர் கூச்சம்/சங்கடம் காரணமாக கேட்காமல் மனதுக்குள் நொந்து கொண்டிருப்பார்கள். இரவல் பெற்ற பொருளை வேலை முடிந்த பின்னர் முறையாகத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
இதே வேளை, அவசரத் தேவைக்காக சீனி, பால்மா, உப்பு போன்ற பொருட்களை இரவல் பெற்றால் மீண்டும் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது எடுத்ததை விடச் சற்றுக் கூடுதலாகக் கொடுப்பது கண்ணியமான நடைமுறை என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இதே வேளை, அவசியத் தேவையற்ற பொருட்களை இரவல் வாங்குவதை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சில பெண்கள் திருமண நிகழ்ச்சி, பயணம் என்பவற்றுக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்களின் நகை-நட்டுக்களை இரவல் கேட்கின்றனர். இது தவறாகும். இவையெல்லாம் அவசியப் பொருட்களோ, அத்தியவசியப் பொருட்களோ அல்ல. இருந்தால் போட்டுக்கொள்வதில் தவறில்லை. இல்லாத போது பிறரிடம் வாங்கி ஆடம்பரமாக நடிக்க வேண்டியதில்லை. அத்துடன் பிறருக்குக் காட்டுவதற்காகத்தான் இவற்றை இரவல் கேட்கின்றனர். பெண் பிறர் பார்க்க அலங்காரம் செய்துகொள்வது ஹறாமாகும் என்பது கவனிக்கத் தக்கதாகும். அவசியப் பயணத்திற்கு ஆடை இல்லையென்றால் நண்பியிடம் இரவல் பெற ஹதீஸில் ஆதாரம் காணலாம்.
அதிகமாக இரவல் கேட்பதும், தேவையற்ற பொருளை இரவலாகக் கேட்பதும், இரவலாக எடுத்த பொருளை முறையாக மீள ஒப்படைக்காமல் இருப்பதும் அயலவர் உறவைச் சீர்குலைக்கும் என்பதால் இது விடயத்தில் கூடிய அவதானம் தேவை.
விருந்தின் போது:
சிலர் தமது முக்கிய விருந்துகளில் அயலவரை அழைப்பதைத் தவிர்த்து விடுவர். சிலபோது மறதியாகவோ அல்லது பக்கத்து வீட்டாரைக் குறைத்து மதிப்பிட்டதாலோ இது நடந்து விடலாம். எனினும், இது பாரிய உளப் பிரச்சினையை உண்டுபண்ணி விடும். எனவே, முக்கிய விருந்துகளின் போது பக்கத்து வீட்டாரை உரிய முறையில் அழைக்கும் விடயத்தில் அவதானம் தேவை.
சிலர் ஏனையோரை கணவன்-மனைவியாகச் சேர்ந்து சென்று பெண்களுக்கு மனைவியும், ஆண்களுக்குக் கணவனும் அழைப்பு விடுப்பர். ஆனால், பக்கத்து வீட்டுக்கு மட்டும் சர்வ சாதாரணமாகக் கூறுவர். “பக்கத்து வீடு தானே!” என்ற எண்ணத்தில் இப்படிச் செய்வர். ஆனால், மற்ற வீடுகளுக்கு இருவரும் சென்று அழைக்கின்றனர். எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் இப்படிக் கூறியுள்ளனர் என்று சிந்திக்கும் போது சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே, அழைப்பு விடயத்தில் அவதானம் தேவை. சந்தோஷமான நிகழ்ச்சி சோகங்களைச் சுமந்து வந்து விடக் கூடாது என்பதில் கவனம் தேவை.
இதே வேளை, பக்கத்து வீட்டில் நல்லது நடந்து நமக்குக் கூறவில்லையென்றால், அதை அலட்டிக்கொள்ளாத இதயம் தேவை. குறிப்பாக அயலவர்களினதும், குடும்பங்களினதும் எண்ணிக்கை அதிகரித்துப் போன இந்தச் சூழலில் இந்த இதயம் அவசியம் தேவையாகும்.
جَزَاكَ اللَّهُ خَيْرًا – உண்மை உதயம் மாத இதழ்