ஏமாளிகளான மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் முகமாக இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வின்படி,
பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.50,
டீசல் லிட்டருக்கு ரூ 2.00,
மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 3.00,
எரிவாயு சிலிண்டருக்கு ரூ 35.00 உயர்த்தப் பட்டுள்ளது.
வழக்கம் போல் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சியைத் தாக்கி போலி அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்டுகள் ஆளும் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த் நடைபெற்று முடிந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலிலேயே முடிவு எடுக்கப் பட்டிருந்தாலும், சில கட்சிகள் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும்.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த, தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அரசு காரணம் கூறுகிறது. இந்த இழப்பைச் சரி கட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என பாரிக் கமிட்டி கொடுத்தப் பரிந்துரையின் பேரிலேயே விலை உயர்வு தீர்மானிக்கப்பட்டதாகவும் இந்த விலை உயர்வு பெட்ரோல் உபயோகிப்பாளர்களுக்குப் பெரிய சிரமத்தை அளிக்காது எனவும் மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது.
உண்மையில் மத்திய அரசு கூறும் இந்தக் காரணம் அப்பட்டமான பொய் என்பதைக் கடந்த 2009 – 2010 நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைத்த லாபம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. 2009-2010 ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 10,200 கோடி, பாரத் பெட்ரோலியம் 1,500 கோடி, ஹெச்.பி.சி.எல் 1,300 கோடி, ஓ.என்.ஜி.சி 16,700 கோடி, கைல் 3,140 கோடி என கோடிக்கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. சாதாரண மக்கள் இதையெல்லாம் கவனிக்கவா போகிறார்கள் என்ற ரீதியில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டவே விலை உயர்வு என மத்திய அரசு மக்களின் காதில் பூச்சுற்றியுள்ளது.
அத்தோடு இந்தச் சிறிய விலை உயர்வு பெட்ரோல் உபயோகிப்பாளர்களுக்குப் பெரியச் சிரமத்தைக் கொடுக்காது எனவும் மத்திய அரசு திருவாய் மலர்ந்துள்ளது. அதாவது, பெட்ரோலை அதிகமாக உபயோகிக்கும் மேல் தட்டு மக்களுக்குச் சிரமமாக இருக்காதாம். பெட்ரோலியப் பொருட்களின் விலையினை அடிப்படையாக வைத்தே, சாதாரண மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பெட்ரோல் விலை ஏறினால் சாதாரண மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதும் இந்த அரசுக்குத் தெரியாதா என்ன?
நிச்சயம் தெரியும். சாதாரண மக்களைக் குறித்து இந்த அரசு எவ்விதக் கவலையும் படவில்லை என்பதையே மிகச் சாதாரணமாக பெட்ரோல் விலையை ஏற்றி, பணம் கொழிக்கும் தனியார் நிறுவனங்களின் மனதைக் குளிர வைத்து விட்டு, இதனைச் சாதாரண விலையேற்றம் போல் மத்திய அரசு சித்தரிக்க முயல்வது காட்டுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வும் இந்த விலையேற்றத்துக்குக் காரணமாகும் என, ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்டச் சில அரசியல்வாதிகளும் உளறிவருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 140 டாலராக இருந்த போது என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கே 30 டாலருக்கு விற்கப்பட்டபோதும் இதே மத்திய அரசு விற்றது நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.35 க்குள் விற்கப்படுகிறது. பின்னர் ஏன் இந்தியாவில் மட்டும் இந்த தாறுமாறான விலை உயர்வு?
சர்வதேச அளவில் தற்போது ஒரு பேரல் 77 டாலருக்குக் கச்சா எண்ணெய் விற்கிறது. இந்த விலையின்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் இந்திய விலைக்குச் சுமார் ரூ. 23 வருகிறது. இந்தக் கச்சா எண்ணெயிலிருந்தே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எஞ்சிய கழிவிலிருந்து பாரபின் மெழுகு போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின் எஞ்சியிருக்கும் இறுதிக் கழிவு சாலை போட பயன்படுத்தும் தாராகிறது. 23 ரூபாய்க்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்துப் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டும் பெட்ரோல் விலை ரூபாய் 55 வரை விற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுகின்றன என்பது மிகப்பெரிய மோசடியல்லாமல் வேறென்ன?
இந்த விலை உயர்வுக்கு உண்மையில் பெட்ரோல் நிறுவனங்களின் நஷ்டமோ சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயர்வோ காரணமல்ல என்பதைத் தர விவரங்களைப் பரிசோதிப்பவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். எனில், இந்த விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன?
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பும் தனியார் நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளைக்கு அரசுகள் துணை போவதுமே உண்மையான காரணமாகும். மத்திய அரசு சுங்க வரி, உற்பத்தி வரி என்று ஒரு புறமும் மாநில அரசுகள் விற்பனை வரி, மதிப்பு கூடு வரி என மறு புறமும் போட்டுத் தாக்கி வருகின்றன.
தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் சுமார் 51 விழுக்காடு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான். அதாவது தற்போது பெட்ரோல், டீசலுக்குக் கொடுக்கும் விலையில் பாதிக்கும் சற்று அதிகமாக வரி தானேயன்றி, அது பெட்ரோலுக்கான உண்மையான விலையல்ல. மத்திய மாநில அரசுகள் வரியைக் குறைத்துக்கொண்டாலே விலை உயர்வுக்கு அவசியமில்லாமல் போகும். மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, அந்தக் கருத்தை மத்திய அரசை நோக்கி சொல்ல வாயைத் திறப்பதில்லை.
ஆடம்பரமாக கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி மற்றும் கேளிக்கை வரி விலக்கு, தமிழில் பெயர் வைக்கப்படும் சினிமாக்களுக்குக் கேளிக்கை வரி விலக்கு! இப்படி ஒருபுறம் அநாவசிய கேளிக்கைகளுக்கு வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெருமுதலாளிகளுக்கு அரசு தரும் சலுகைகள் பல்லாயிரம் கோடிகளை எட்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கம்பனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் மத்திய அரசு அளித்திருக்கும் சலுகை மட்டுமே 80,000 கோடி. இது தவிர கலால் வரி, சுங்கவரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகை மொத்தம் 4,19,786 கோடியாம். அதாவது ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சம் கோடியை பெருமுதலாளிகளுக்கு மானியமாக அள்ளிக்கொடுத்துவிட்டு, அரசின் வருவாய் இழப்பைச் சரிகட்ட சாதாரண மக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் கைவைப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!
இம்முறை விலை உயர்வு உத்தரவோடு மற்றொரு பெரிய குண்டையும் மத்திய அரசு மக்கள் மீது தூக்கிப் போட்டுள்ளது. கிரிட் பாரிக் பரிந்துரைகளை ஏற்று பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியிருக்கிறது. அதாவது, இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை அரசு தான் தீர்மானித்து வந்தது. இனிமேல் “பெட்ரோல், டீசல் விலைகளை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானிக்கும்” என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதன்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக்கொள்ளும். கிரிட் பாரிக் பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு, பழியை கிரிட் பாரிக் குழு மீது போட்டு விட்டாலும் இதுவும் உண்மையல்ல!
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதேவேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கச்சாப்பொருள் மீது விதிக்கப்படும் பெரும்பாலான வரிகள் ஏதும் இந்தியாவில் கிடைக்கும் இந்தக் கச்சா எண்ணெய் மீது இல்லாத நிலையில் கூட, நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரே விலையிலேயே விற்கபடுகிறது. இதன் மூலம் பலகோடிக்கணக்கான ரூபாய் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு தாரை வார்த்திருப்பினும் அதுவும் போதாது என இந்தத் தனியார் நிறுவனங்கள் அண்மையில் நாடெங்கும் பெட்ரோல் டீசல் விற்பனையை விலை கட்டுபடியாகவில்லை என்று மூடிவிட்டன. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அன்றாட கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்! கேளிக்கைகளுக்கு நீக்கும் வரிவிலக்கால் சாதாரண மக்களின் வயிற்றுப்பாடு கழியுமா? என்று எந்த அரசியல்வாதியும் சிந்திப்பது போல் தெரியவில்லை. எங்கே சென்று சொல்வது இந்தக் கொடுமையை?
சீமானை மேலும் சீமானாக்கி ஏழைகளைப் பரதேசிகளாக்கும் மத்திய மற்றும் மாநில அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் இனி ஒரு நாளில் ஒரு வேளை சாப்பிடுவதே அரிதாகி விடுமோ என்ற அச்சம் சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையில் ஒரு காசு உயர்ந்தாலும் அது, சாதாரண மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகும். நாட்டின் அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை தனியார்களின் தீர்மானத்திற்கு அரசு விட்டதிலிருந்தே, சாதாரண மக்கள் மீது இந்த அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை விளங்க முடிகிறது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரியால் இருமடங்கு விலையில் விற்கப்படும் பெட்ரோலின் அதே விலையிலேயே இறக்குமதி, கலால் வரிகள் ஏதுமின்றிக் கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி பெட்ரோலையும் விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டி வந்ததுப் போதாமல் நஷ்டம் என இழுத்து மூடி விட்ட இந்தத் தனியார் கொள்ளைக்காரர்களின் கைகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசு அளித்திருப்பது இந்நாட்டு மக்களுக்கு அரசு செய்துள்ள மிகப்பெரும் அயோக்கியத்தனம் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை!
இவ்வாறு அரசுகள் தன் போக்கிற்கு சாமானியர்களை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது இந்த சாமானியர்கள் நமக்கென்ன என்று இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். ஓட்டு போடுவதுடன் எனது கடமை முடிந்தது என இருக்காமல் அக்கிரமத்தையும் அநீதியையும் எதிர்த்துப் போராட முன் வரவேண்டும்.
நன்றி: இந்நேரம்