வீரர்களின் உயிர் காப்பது தலைக் கவசம் எனில்,
பெண்களின் மானம் காப்பது ‘ஹிஜாப்‘ எனும் கவசம்
இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்புக் கலை என்ற பெயரில் கற்று வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு முதல் முக்கிய தற்காப்பு எது என்றால், அது ஹிஜாப் தான்.
இஸ்லாம் பெண்களை உயர்வாகவும், கண்ணியமானவர்களாகவும் மதிக்கிறது. ஒரு பொருள் பேணிப் பாதுகாப்படும் பொழுது தான் அதன் மதிப்பு உயரும். அது சிறப்புடனும் பேசப்படும். இவ்வாறு தான் பெண்களை உயர்வாகக் கருதி ஹிஜாப் முறையைக் கையாளச் சொல்கிறது இஸ்லாம். இதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)
தெருக்கள், கடை வீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, வங்கி போன்ற அனைத்து இடங்களிலும் ஆண்களுடன் பெண்கள் கலந்து இருப்பார்கள். பெண்களை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் ஆண்கள் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் ஒழுக்கத்துடன் பயமின்றி சென்று வர ஹிஜாப் அவசியமாகின்றது.
ஹிஜாப் அணிந்த பெண் கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறாள். இப்படி ஹிஜாபின் சிறப்பை அறிந்தவர்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல. (எங்கள் ஊர் தொண்டியில்) மாற்று மதத்தைச் சேர்ந்த, பருவடைந்த மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஹிஜாப் அணிந்து வெளியில் செல்பவர்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகித்து ஹிஜாபுடன் சென்றால் ஹிஜாபின் நோக்கமே பாழாகிவிடும். ஹிஜாப் அணிபவர்கள் முகத்தையும், இரு முன் கைகளையும் தவிர வேறெந்த அலங்காரத்தையும் வெளிக்காட்டாக் கூடாது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் (அல்குர்ஆன் 24:31)
மேலும் ஒழுக்கமுடன் வாழும் பெண்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
”பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்‘ தான். நீச்சலுடை அல்ல” என்கிறார் இஸ்லாத்தைத் தழுவிய முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர். சுதந்திரக்குறியீடு மட்டுமல்ல, ‘ஹிஜாப்’தான் தங்கள் மானத்துக்கும், மரியாதைக்கும் இன்னும் சொல்லப்போனால் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கவசம் என்று புரிந்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகறித்தே வருகிறது.
இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2911)
நல்லொழுக்கமுள்ள பெண்களின் அடையாளங்களில் ஹிஜாபும் ஒன்று என்பதை எவரும் மறுக்க முடியுமா என்ன?!
பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், இராணுவத்தில் பணிபுரியும் பெண் சிப்பாய்கள் மீதும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்று சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை..
பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தோம் என்று கூறும் இது போன்ற மேற்கத்திய நாடுகளில் தான் பெண்களின் நிலை இப்படி. அதுவும் ராணுவத்தில் பணிபுரியும் பெண்களின் நிலை இப்படி என்றால் சாதரணமான பெண்களின் நிலை? இஸ்லாம் கூறும் ஹிஜாப் முறையை பின்பற்றினால் இவர்களுக்கு இந்நிலை ஏற்படாது.
மிக விரைவில் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுதும் பெண்களின் பாதுகாப்புக்கவசம் ‘ஹிஜாப்‘ தான் என்பதை உணரும்.
by: Abu Safiyah