o ஆண்களின் ஆடையை, பெண்கள் அணியக் கூடாது என்றால் பேண்ட் சட்டைகளின் நிலை என்ன?
o தொப்பியை கட்டாயம் அணிய வேண்டுமா?
o பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?
ஆண்களின் ஆடையை, பெண்கள் அணியக் கூடாது என்றால் பேண்ட் சட்டைகளின் நிலை என்ன ?
ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.
இன்று பெண்களுக்கென்றே தனியாக பேண்ட், சட்டைகள் இருக்கின்றன. இவற்றின் நிலை என்ன?
இதை ஆண்களின் ஆடை என்று கணிப்பதா? பெண்களின் ஆடை என்று கூறுவதா?
பெண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற ஆணையும், ஆண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற பெண்ணையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 3575)
ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது; பெண்களின் ஆடையை ஆண்கள் அணியக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ் இது தான்.பொதுவாக இது பெண்கள் ஆடை, இது ஆண்கள் ஆடை என்று குறிப்பிட்டுப் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் இது வித்தியாசப்படும். உதாரணமாக நமது நாட்டில் பாவாடை என்ற உடையை பெண்கள் அணிகிறார்கள். ஆனால் ஃபிஜி என்ற நாட்டில் அதையே ஆண்கள் அணிகிறார்கள்.
ஒரு பகுதியிலேயே ஒரே விதமான ஆடையை இரு சாராரும் அணிகிறார்கள். தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்களில் சிலர் கைலி போன்ற ஆடையை அணிவது வழக்கம். ஆண்களும் கைலி அணிகின்றனர். இது போன்று இரு சாராருக்கும் பொதுவான ஆடைகளும் உள்ளன.
எனவே குறிப்பிட்டு இந்த உடையை ஆண்கள் அணியக் கூடாது; இந்த உடையைப் பெண்கள் அணியக் கூடாது என்று இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். எனவே இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைத் தரவில்லை.
பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் ஆடை அணியக் கூடாது; ஆண்கள் அணியும் விதத்தில் பெண்கள் அணியக் கூடாது என்று தான் இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.
சேலை, தாவணி போன்ற ஆடைகளை எடுத்துக் கொள்வோம். அதைப் பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் அணிவதற்குத் தடை உள்ளது. ஆனால் அதையே லுங்கி போன்று ஒரு ஆண் கட்டினால் அதைத் தடுக்க முடியாது.
ஆடையின் மூலம் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும், பெண்கள் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும் தான் இந்த ஹதீஸ் தடை செய்கின்றதே தவிர குறிப்பிட்ட ஆடையை அணிவதைத் தடை செய்யவில்லை. கீழ்க்கண்ட ஹதீஸ் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5885)
தொப்பியை கட்டாயம் அணிய வேண்டுமா?
“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?”என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ,தலைப் பாகையையோ,தொப்பியையோ,கால் சட்டையையோ அணிய வேண்டாம்.குங்குமச்சாயம்,வர்ஸ்(எனும் மஞ்சள்)சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம்.செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம்.அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்”என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்:புகாரி134, 366, 1542, 1842)
இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கூறுகின்றீர்கள்.
தொப்பிக்கு இதிலிருந்து இப்படிச் சட்டம் எடுப்பவர்கள் இதே ஹதீஸில் இடம் பெற்றுள்ள சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றுக்கு இவ்வாறு சட்டம் எடுப்பதில்லை.
அதாவது இஹ்ராமைக் களைந்த உடன் சட்டை, பேண்ட், காலுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்தாக வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். விரும்பினால் அவற்றை அணியலாம்; அல்லது அணியாமல் இருக்கலாம்; அது அவரவர் விருப்பம் என்று விளங்கிக் கொள்கிறோம்.
இதே நிலை தான் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றை அணிவது எப்படி மார்க்கக் கடமை இல்லையோ அது போன்று தொப்பி அணிவதும் மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.
அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.
o பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17:36)
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2442)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும் ஆதாரப் பூர்வமான ஹதீஸும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.
جَزَاكَ اللَّهُ خَيْرًا : சத்தியப்பாதை