அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
வெற்றி வேண்டும் என்போர் அவசியம் படிக்கவும்,
வெற்றி வேண்டாம் என்போர் உலகில் இருக்கிறார்களா என்ன?!
இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக் கூட்டித்தைச் சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்!
இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வாழ்நாட்களில் சில காரியங்களை செய்தவர்களை வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளிலிருந்து தொகுத்துத் தருகிறோம். தாங்களும் அக்காரியத்தை செயல்படுத்தி வெற்றிபெற்றோர்களாக மாறுங்கள்!
கடமையான காரியங்களை சரியாக நிள்வேற்றுவோர்
நஜ்த் என்ற ஊரைச்சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா? என்று கேட்டார்.
அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை என்றார்கள். அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
உடனே அவர் அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா? என்றார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை என்றார்கள். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள்.
அதற்கவர் அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என்மீது கடமையா? என்றார். அதற்கவர்கள் நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை என்றார்கள்.
உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ (46)
இந்த நபிமொழியின் இறுதியில் அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறைவைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை மேற்சொன்ன ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
இது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலிஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகிவிட்டது. என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள் ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது! என்று கூறினார்கள். அதற்கு அவர் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்பஹ அல்லது யுசப்பிஹூ என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக! என்று கூறியபோதும் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார்.
பிறகு அவர் அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதா ஸன்ல்லித்தில் அர்லு ஸில்ஸாஹா என்ற சூராவை முழுமையாக ஓதிக்காண்பித்தார்கள். அம்மனிதர் உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒருபோதும் நான் அதிகமாக்கமாட்டேன் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.
அதற்கு நபியவர்கள் ருவைஜில் வெற்றிபெற்றுவிட்டார் என்று இரு முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் அபூதாவூத் (1191) அஹ்மத் (6287)
மார்க்கத்தின் கட்டளைகளை பின்பற்றுவதில் ருவைஜில் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வளவு ஆர்வப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டுவிடாமல் அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய முறையை அப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதை செயல்படுத்த ஆர்வமும் கொள்ளவேண்டும்..
நபிவழியை மட்டும் பின்பற்றியவர்
“ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையரை உள்ளது. யாருடைய வரையரை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். எவருடைய வரையரை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்துவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் (6664)
இஸ்லாத்தின் வழிமுறை தெளிவாக கூறும் நபிமொழி இது. மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாக கண்டிக்கும் நபிமொழி.
இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாக கடைபிடிக்கவேண்டிய தொழுகை என்ற அமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த முறைப்படி நடைபெறுகிறதா? ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவு வித்தியாசப்படுவதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பவற்றுவதுதான். இவ்வாறு பின்பற்றுபவர் வெற்றியாளர்களா? என்பதை மேற்கூறிய நபிமொழி கவனித்து முடிவு செய்யுங்கள்!
இறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்லிதுகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா? அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் கிடையாது இருந்தும் நாம் அதை பின்பற்றிவருகிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தாரத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதை செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெறமுடியாததோடு தண்டையும் பெறுவார்கள்.
(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (அறிவிப்பர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 1560)
எனவே வெற்றியாளராக மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் முன்மாதிரிக் கொண்டும் அமல்களைச் செய்வோம்.
உள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்
நமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களை கவனித்து தேவையானதை வாங்கித் தந்தாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையே விரும்புவார்கள்.
பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதும் அதை பெறுவதற்கு வட்டி உட்பட பல மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதை பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1903)
உறுதியுள்ளவர்கள்
இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிகமுக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்புக்காட்டியதைப் போல் அதை பின்பற்றுவதிலும் அதன் கொள்கை கோட்பாடுகளை பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்கவேண்டும். இன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும்போது அதையும் ஏற்று பொறுமையுடன் இருப்பதும் இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதிபெறவேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழிதவறிவிடக்கூடாது.
அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்கச் சென்று இணைவைத்தல் என்ற பெரும்பாவத்தில் சிக்கிவிடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையை காட்டுகிறது. இவ்வாறு நடந்துகொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைமாட்டார்கள். கொள்கையில் உறுதிதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள். (நூல் அஹ்மத் 21380 அறிவிப்பாளர் சவ்பான்
தொழுகையைப் பேணியவர்
ரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலைமோதும் கூட்டத்தை காணலாம். தொழுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவெறிச்சோடிக் கிடக்கும்.
தொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்கு காரணம். காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுபவர்கள் ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.
ஆண்களுக்கு ஜமாத் தொழுகையை இஸ்லாம் வலியுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வலியுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டேத் தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்குகிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலையில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.
நம்மில் பலர் வயதானவர்கள் தான் தொழ வேண்டும். நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்று நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று அவனும் கூறவில்லை. அவனுடைய தூதரும் சொல்லவில்லை.பருவ வயதை அடைந்துவிட்டால் ஐவேளைத் தொழுவது கடமையாகும்.
சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளைத் தொழுவார்கள். ஆனால் ஃபஜர் தொழுகைக்கு வராமல் உறங்கிவிடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முதலில் இந்தத் தொழுகையைப் பற்றித்தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்த குறைபாட்டையும் நாம் வைக்காமல் நிறைவேற்றியிருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை அவர் கூறிவிடமுடியும். முதல் கேள்வியிலே நாம் தோற்றுவிட்டால் அதன்பின்வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறமுடியமால் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.
அடியானிடம் முதலில் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித்தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந்தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ (461), திர்மிதீ (378)
மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்
ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. அனைத்து உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் அவைகள் தீமைபுரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகிவிட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகிவிடுகின்றது. உள்ளம் கெட்டுவிட்டால் உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அதை தீயஉள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்றுவிட்டதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7-10)
உதாரணமாக ஒருவர் தான் கொடைவள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக தர்மங்களை செய்கின்றார். இவர் செய்யக்கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுஅளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப்படுகின்றது.
100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப்பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரீ 3470)
அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையேப் பார்க்கின்றான். பார்ப்பதற்கு அறுவறுப்பாக கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற்குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகுகின்றாப்.
இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்கள் செயல்களை சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்கள் இவ்வுலகத்திலேயே சுவர்க்கவாதி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். (புகாரீ 1149)
யார் தனது உள்ளத்தை ஈமானுக்காக தூய்மையாக்கி மேலும் தன் உள்ளத்தை தவறுகளிலிருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மனநிறைவுபெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக்கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்னை (நல்லவற்றை) காணக்கூடியதாகவும் ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் (20348)
ஈமான் கொண்டு விட்டால் மறுஉலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றிபெறுவார்கள் என்பதை இதே அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1-11)
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக.
جَزَاكَ اللَّهُ خَيْرًا : சத்தியப்பாதை