1960களில் அதாவது சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் மக்களின் ஈடேற்றத்திற்குள்ள ஒரே வழி தப்லீஃக் பணியே என்று முழுமையாக நாம் நம்பி இருந்த காலம்: அதிலேயே எமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தோம். அதற்காகவே 1963-ல் பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறினோம்.
சுமார் 10 வருட உழைப்பிற்குப்பின் குறுகிய காலத்திலேயே மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காக செய்யப்படும் அந்தப் புனித முயற்சியில், எப்படிப்பட்ட மனிதக் கருத்துக்கள் புகுந்து அந்த நல்ல முயற்சியை ஒரு வெற்றுச் சடங்காகவும், உரிய பலனை அடைய முடியாத முயற்சியாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சொந்த அனுபவத்திலேயே உணர நேரிட்டது.
அதன் அடிப்படையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிஜ்ரி 10-2-1398-ல் தப்லீஃக் பணியின் தலைமைப் பொறுப்பில் அப்போது இருந்த ஹஜ்ரத்ஜீ என்று அழைக்கப்பட்ட மவ்லவி இன்ஆமுல் ஹஸன் அவர்களுக்கு எமது அனுபவங்களை எழுதி அனுப்பியதோடு, அதை திருச்சி அரபி மதரஸாவில் ஆசிரியர்களாக இருந்த இரு மவ்லவிகளிடமும் உருதுவில் மொழி பெயர்த்து அனுப்ப ஏற்பாடும் செய்தோம். அதன் பிரதிகளை திருச்சி, தமிழ்நாடு, கேரளா, இலங்கை அமீர்களாகப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் அனுப்பி வைத்தோம்.
அக்கடிதத்தைக் கடந்த 30 ஆண்டுகளாக நாம் பகிரங்கமாக வெளியிடவில்லை. ஆனால் இன்றைய தப்லீஃக் பணியாளர்களின் (கார்க்கூன்) செயல்பாடுகள் படு மோசமாக இருப்பதாலும், தூய மார்க்கமான இஸ்லாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டும், மனிதக் கருத்துக்கள் நுழையாத நிலையில் மக்களிடையே எடுத்து வைக்கப்படுவதை அவர்கள் தடுத்து வருவதாலும், 30 வருடங்களுக்கு முன்னர் தப்ஃலீக் தலைமைக்கு எழுதிய கடிதத்தை இன்று வெளியிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அக்கடிதத்திலேயே தப்லீஃக் பணிணில் உரிய மாற்றங்கள் செய்யத் தவறினால், நாம் பிறிதொரு சரியான முயற்சியில் ஈடுபடும் கட்டாயம் ஏற்படும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
தப்ஃலீக் தலைமையிடமிருந்து உரிய மாற்றங்கள் ஏற்பட வழியில்லை என்ற நிலைக்குப் பின்னரே, முதலில் சிறு சிறு பிரசுரங்கள் மூலமும், 1986 ஏப்ரல் முதல் அந்நஜாத் மாத இதழ் மூலம் மக்களை குர்ஆன், ஹதீஸ் வழியில் செயல்பட தூண்டி வருகிறோம்.
1988 மார்ச் 19 சனிக்கிழமை மீண்டும் டெல்லி சென்று எமது கருத்துக்களைச் சொல்லி, அவசியமாக, நடைமுறையிலிருக்கும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கட்டுக்கதைகளையும், பொய் மூட்டைகளையும் உடைய “அமல்களில் சிறப்புகள்” என்ற நூல் மாற்றப்பட்டு, அதற்குப் பகரமாக குர்ஆன், ஹதீஸ் மட்டும் தப்லீஃக் தஃலீமில் வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். எமது வேண்டுகோள் உருதுவிலும் மொழி பெயர்க்கப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டது.
இப்போது தப்லீஃக் மேலிடம் “அமல்களில் சிறப்புகள்” என்ற கட்டுக் கதைகள், பொய்கள் நிறைந்த அந்த நூலுக்குப் பதிலாக “முன்தகப் அஹாதீஸ்” என்ற பெயரில் புதியதொரு நூலை தப்லீஃக் தஃலீமுக்காக அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒரு சிறு மாற்றம். பெரியார்கள், நாதாக்கள், அகாபிரீன்கள் பெயரால் பொய்களைப் பரப்புவதை விட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயராலேயே பொய்களைப் பரப்பும் முயற்சியாகும் இந்தப் புதிய நூல்.
இந்த நூலில் காணப்படும் “ஹதீஸ்” என்று சொல்லப்படுபவைகளில் பெரும்பாலானவை பலகீனமானவை, இட்டுக் கட்டப்பட்டவை. இதற்குத் தோதாக மக்களுக்கு மத்தியில் காணப்படும் மார்க்கத்தில் பொடுபோக்குத் தனத்தை மாற்றி அமல்களில் ஆர்வமூட்ட இந்த இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் பெரிதும் உதவும் என்பதே அவர்களின் பதிலாகும்.
ஆனால் இந்த அவர்களின் சுயவிளக்கம் 2:38,39, 7:3, 33:36: 66:,67,68, 49:16,42:21 போன்ற எண்ணற்ற இறைக்கட்டளைகளுக்கு முரணானவை என்பதை அவர்கள் உணராததுதான் பெரிய ஆச்சரியம்.
இன்னொன்றையும் இங்கு நாம் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரும் கட்டாயத்தில் இருக்கிறோம். அந்நஜாத்தின் வருகைக்கு முன்னர், இந்த தர்கா, தரீக்கா, தப்லீஃக், மத்ஹபு மவ்லவிகளின் உபதேசங்களில், அந்தப் பெரியார் சொன்னார், இந்தப் பெரியார் சொன்னார், இந்த அவுலியா சொன்னார், அந்த அவுலியா சொன்னார். நாதாக்கள் சொல்கிறார்கள், அகாபிரீன்களின் முடிவு என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள், பிகஹு நூல்களை ஆதாரமாகக் காட்டியவர்கள்,
இப்போது எதற்கெடுத்தாலும், ஹதீஸ்கள் என்று கூறி இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை எடுத்துக் கூறுவதையே பார்க்க முடிகிறது.
அல்லது ஒரு குர்ஆன் வசனத்தைக் கூறி அந்த வசனம் கூறும் நேரடிக் கருத்துக்கு முரணான கருத்தை சுயவிளக்கமாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதற்குத் தோதாக குர்ஆனில் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்கக் கூடாது. அதை விளங்கும் ஆற்றல் உங்களுக்கு இல்லை. எனவே அதற்கு மவ்லவிகளாகிய நாங்கள் கூறும் சுய விளக்கத்தையே எடுத்து நடக்க வேண்டும்:; அந்த எங்களின் சுயவிளக்கங்கள் அந்த அல்குர்ஆன் வசனத்திற்கு முரணாகத் தெரிந்தாலும் நாங்கள் சொல்லுவதையே எடுத்து நடக்க வேண்டும் என்று முஸ்லிம்களை மூளை சலவை செய்து வைத்தள்ளனர்.
நபிமார்களைப்போல், குர்ஆன், ஹதீஸில் உள்ளதை, உள்ளபடி எடுத்துச் சொல்வதாக இருந்தால், தங்களின் தொழிலை வெற்றிகரமாக, லாபகரமாக நடத்த முடியாது என்ற ஒரே காரணத்தால்தான், இந்தப் மவ்லவிகள் இந்தத் தந்திரத்தைக் கையாள்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும்.
அதற்குத் தோதாக பல லட்சக்கணக்கான பொய் ஹதீஸ்களை மக்களிடையே பரவச் செய்துள்ளனர். அது போதாதென்று குர்ஆன் தஃப்ஸீர் – குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் தஃப்ஸீர்-ஹதீஸ் விரிவுரை என பல ஆயிரக்கணக்கான வால்யூம்களை எழுதி குவித்துள்ளனர். மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களின் கற்பனை சரடுகளை எல்லாம் இறக்குமதி செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதோடு மக்களை நரகில் கொண்டு தள்ளுகின்றனர்.
அல்குர்ஆனிலுள்ள இறைவாக்குகளை எப்படி எண்ணினாலும் 6666க்கு அதிகமாகாது. இதேபோல் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் கணக்கிட்டாலும் இந்த அளவுதான் தேறும். ஆனால் ஹதீஸ்கள் என்ற பெயரால் அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகள் என்ற பெயரால் இன்று பல இலட்ச ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இந்த லட்சக்கணக்கான ஹதீஸ்களை ஆய்வு செய்து பார்த்தால் அவற்றில் மிகப் பெரும்பாலானவை இந்த மவ்லவிகளின் முன்னோர்களும், புரோகிதத்தை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்ட வந்து நுழைத்தவர்களுமான புரோகிதர்களின் கற்பனைச் சரக்குகள் என்பது தெரிய வரும்.
இந்த உண்மைகள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே கண்டறியப்பட்டு, பல நல்லடியார்களால் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, பெரும் சிரமங்களிடையே ஹதீஸ்களை அறிவிப்பவர்களான அறிவிப்பாளர்களின் தராதரங்கள் அனைத்தும் அறியப்பட்டு ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. “அஸ்மாவுர்ரிஜால்” என்ற பெயரால் சுமார் ஐந்து லட்சம் அறிவிப்பார்களின் தராதரங்கள் முறையாக அறியப்பட்டு பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.. அப்போதே இவை எல்லாம் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், இவையெல்லாம் பலவீனமான ஹதீஸ்கள் என்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மட்டும் ஒரு சில ஆயிரங்கள் என பிரித்து அடையாளம் காட்டப்பட்டு பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இப்படி 1000 வருடங்களுக்கு முன்னரே அடையாளம் காட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸ்களையே இந்த புரோகித மவ்லவிகள் பெரிய ஆதாரமாகத் தருகிறார்கள். மக்களுக்கு அமல்களில் ஆர்வம் காட்ட இந்தப் பலவீனமான ஹதீஸ்களையும் எடுத்துச் சொல்லலாம் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். 17:36 இறைக் கட்டளைப்படி இப்படிப்பட்ட ஹதீஸ்களின்படி அமல் செய்வது இறைக் கட்டளைக்கு மிகவும் முரணான செயலாகும் என்பதை மக்களிடமிருந்து மறைக்கிறார்கள்.
எனவே தப்லீஃக் மேலிடத்திற்கு நாம் வைக்கும் அன்பு வேண்டுகோள் என்னவென்றால், கடந்த பல்லாண்டுகளாக ஏற்றிப் போற்றி தப்லீஃக் தஃலீம்(ஹல்க்கா) சபைகளில் படித்து வரப்பட்ட கட்டுக்கதைகள், கப்ஸாக்கள், புளுகு மூட்டைகள் நிறைந்த அமல்களின் சிறப்புகள் என்ற நூலை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்கள் நிறைந்து காணப்படும் “முன்தகப் அஹாதீஸ்” என்ற நூலை வைக்க முன் வந்துள்ளமைக்கு, அதாவது குறைந்த பட்சம் முன்னோர்கள் பேரால் உள்ள கட்டுக் கதைகளை அகற்றிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயராலேயே முன் சென்ற மவ்லவிகள் கற்பனை செய்துள்ள ஹதீஸ்களை தஃலீம் சபைகளில் வைத்துப் படிக்க முன் வந்துள்ளமைக்கு, எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயினும் அதையும் நீக்கிவிட்டு எவ்விதக் கலப்படமும் இல்லாத இறைவனது – விளக்க நூலான அல்குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறைகளையும் தப்லீஃக்; தஃலீம் சபைகளில் நீங்கள் வைக்க முன்வந்தால் மட்டுமே சமுதாயத்தில் அசலான மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை தப்லீஃக் மேலிடத்தாரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இந்த தப்லீஃக் முயற்சியின் நிறுவனரான அறிஞர் இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பொன்மொழிகளான “மல்பூஜாத்தே இல்யாஸ்” என்ற நூல் மறைக்கப்பட்டு, கற்பனை கட்டுக்கதைகள் நிறைந்த அமல்களின் சிறப்பு நூலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? என்ற உண்மை ஆரம்பத்தில் தப்லீஃக் பணியில் ஈடுபட்டவர்கள் அறிவார்கள்.
ஆரம்ப தப்லீஃக் முயற்சியை இந்த மவ்லவிகள் கடுமையாக எதிர்த்து, எந்தப் பள்ளியினுள்ளும் நுழையவிடாமல் தடுத்ததும், அந்தப் மவ்லவிகளை திருப்திபடுத்தும் நோக்கத்துடன், இந்தக் கட்டுக் கதைகள் நிறைந்த “அமல்களின் சிறப்புகள்” நூலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததையும் அறிந்தவர்கள் இருக்கிறார்கள்.
இன்று இந்த தப்லீஃக் பணி மவ்லவிகளின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்பதையும் ஆரம்ப பணியாளர்கள் அறிவார்கள். முஸ்லிம் மக்களின் மிகப் பெரும்பான்மையினர் இந்தப் மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறரர்கள். எனவே அவர்களைக் கவர்ந்திழுக்க இந்தத் தந்திரம் கையாளப்பட்டது என்பதையும் ஆரம்ப பணியாளர்கள் அறிவார்கள்.
ஆனால் பெரும்பான்மைக்கு, எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை: அவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் அல்குர்ஆனின் வாக்குகள் 2:100,243, 5:59,103, 6:37,111,116, 7:17,102,131,187, 8:34, 9:8,69, 10:36,55,60, 11:17, 12:21, 38-40, 68, 103,106, 13:1, 16:38, 17:89, 21:24, 23:70, 25:44,50, 26:8,67,103,121,139,174,190,223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6,30,42, 34:28,36,41, 39:29,49, 40:57,59,61,82, 41:4, 44:39, 49:4, 52:47
அனைத்தையும் முறைப்படி படித்து விளங்கியவர்கள், பெரும்பான்மை கூட்டத்தில் மயங்க மாட்டார்கள். உலக ஆதாயத்தைக் குறியாகக் கொண்டு செயல்படும் மவ்லவிகள் மட்டுமே பெரும்பான்மை மக்களைக் குறியாக வைத்து, அதற்கேற்றவாறு குர்ஆன் வாக்குகளையும், ஹதீஸ்களையும் திரித்து வளைத்து மக்களை மயக்கி நரகில் தள்ளுவதோடு, அவர்கள் உலக ஆதாயம் தேட முற்படுவார்கள். தப்லீஃக் பணி உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இயக்கம் அல்ல என்பதை நாம் அறிவோம். எனவே தப்லீஃக் மேலிடம் எமது வேண்டுகோளை கவனத்தில் கொள்ளும் என நம்பிக்கை வைக்கிறோம்.
நம்மைப் படைத்த இணை துணை தேவை எதுவுமே இல்லாத ஏகன் அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனை எழுதப்படிக்கத் தெரியாத பாமரனும் தெள்ளத் தெளிவாக விளங்கும் நிலையில் மிக எளிதாக ஆக்கி இருப்பதாக உறுதி அளிக்கிறான். அரபி மொழி பண்டிதர்கள் மட்டுமே விளங்க முடியும் என்று ஒரேயொரு இடத்தில் கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக தெளிவாக விளக்கப்பட்டது. எளிமைப்படுத்தப்பட்டது என நானூறு (400) இடங்களுக்கு மேல் அறுதிவிட்டு உறுதி கூறுகிறான். இந்த நிலையில் அல்லாஹ் அல்குர்ஆனில் விளக்கியுள்ளது உங்களுக்கு விளங்காது: அதை நாங்களே உங்களுக்கு விளக்க வேண்டும் என்று மவ்லவிகள் சொல்வார்களேயானால், படைத்த அல்லாஹ்வுக்கே இல்லாத அல்குர்ஆனை விளங்க வைக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது என்று சொல்வதாகத்தான் அது இருக்கும்.
அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து, தப்லீ.ஃக் தஃலீம் சபைகளில் வைத்துப் படிக்க தப்லீஃக் மேலிடம் முன் வந்தால், முஸ்லிம்களிடையே பெரும் புரட்சி ஏற்பட்டு, இந்தப் புரோகித மவ்லவிகளைப் புறக்கணித்துவிட்டு, அல்லாஹ்வின் 3:103 கட்டளைப்படி, அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட்டு விடுவார்கள். 3:139 இறைவாக்குறுதிப்படி அவர்களுக்குப் பயமோ துக்கமோ இருக்காது: முஸ்லிம்களே உயர்ந்த சமுதாயமாகிவிடுவார்கள். 24:55 இறைவாக்குறுதிப்படி மீண்டும் முஸ்லிம்கள் உலகை ஆளக்கூடியவர்களாக ஆகி விடுவார்கள். தப்லீஃக் மேலிடம் செவி சாய்க்குமா?
source: www.annajaath.com
posted by: Sadiq saddam