o பல கோடி ‘கமிஷன்‘ தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து அமெரிக்கா!
o கால் பந்தாட்டம் காண்பதில் எச்சரிக்கை: மார்க்க அறிஞர்கள்
o பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி
பல கோடி ‘கமிஷன்‘ தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து அமெரிக்கா!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க போராடி வரும் அமெரிக்கா, அந்த தலிபான் தீவிரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் ‘கமிஷன்’ தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் போராடி, ஜனநாயக அரசை அமர்த்தப் போவதாகக கூறி அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்பியது. இன்னமும் பல ஆயிரம் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
ஆஃப்கனில், ஹமீத் கர்சாய் தலைமையில் ஜனநாயக அரசு ஏற்பட்டாலும், பல மாவட்டங்களில் இன்னும் தலிபான் ஆதிக்கம் தான். அவர்களை அடக்க அமெரிக்க படையால் முடியவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினருக்கு உணவு முதல் ஆயுதங்கள் வரை சப்ளை செய்யும் பொறுப்பு தனியாரிடம் விடப்பட்டுள்ளது.
சப்ளை செய்யும் லாரிகள், தலிபான் ஆதிக்க பகுதிகளை கடந்து செல்லும் போது, தலிபான்களுக்கு கமிஷன் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால், சப்ளை லாரிகளை கடத்தி விடுவர். உணவு, எரிபொருள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை சப்ளை செய்யும் போது ஒவ்வொரு முறையும் கமிஷன் தர வேண்டியுள்ளது. இப்படி பல கோடிகள் கைமாறி உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இது பற்றி அமெரிக்க ராணுவம் இப்போது விசாரிக்க ஆரம்பித்துள்ளது. “தலிபான்களுக்கு பணம் தராமல் சப்ளை செய்ய முடியவில்லை. பாதுகாப்புக்கு தான் நாங்கள் பணம் தந்தோம். இதில் தவறில்லை” என்று விசாரணையின் போது, கான்ட்ராக்ட் கம்பெனிகள் கூறியுள்ளன.
தலிபான்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது, அமெரிக்காவே, தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டு எம்.பி.,க்களிடையே பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
கால் பந்தாட்டம் காண்பதில் எச்சரிக்கை: மார்க்க அறிஞர்கள்
துபாய்: உலகக்கோப்பை கால் பந்தாட்டத்தை வெறி கொண்டு பார்ப்பதால் வேலை, திருமணம், ஆன்மீக வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்படலாம் என்று மார்க்க அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துபாயில் ஒரு கருத்தரங்கில் பேசிய மார்க்க அறிஞர்கள் “இது சமூகத்திற்க்கு நல்லதல்ல ரசிகர்களிடம் இது பிளவை ஏற்படுத்துகிறது” என்று கூறினர். இஸ்லாமிய விவகாரம் மற்றும் அறநிலையத்துறை (
Department of Islamic Affairs and Charitable Activities ) இது சம்பந்தமாக நேற்றைய முன்தினம் (22/06/2010) கருத்து தெரிவித்தது.
விளையாட்டின் நல்ல அம்சங்களைப் பயன்படுத்துவது, ஊழல் இனவாதம் போன்ற தீயவைகளைத் தடுப்பது ஆகியவைகள் குறித்து அது கலந்தாய்வு செய்தது.
“விளையாட்டு வீரர்களைப் போற்றி வணங்குவது மிகப்பெரிய தவறாகும். கால் பந்தாட்டத்தின் மேலுள்ள வெறி திருமண உறவுகளை பாதிக்கலாம் அது விவாகரத்து வரை கூட செல்லலாம்” என்று நேற்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி
திருநெல்வேலி : டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைஇயக்குநர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஷமீலா பீவி, பிரசவ வலி ஏற்பட்டதால் காலையில் 6 மணிக்கு புளியங்குடி உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புளியங்குடி ஆஸ்பத்திரி 24 மணிநேரமும் டாக்டர்கள் இருக்க கூடிய 72 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாகும்.
ஆனால் ஷமீலா பீவி சென்ற நேரத்தில் இரவு பணி முடித்த டாக்டர், கர்ப்பிணியை பார்த்துவிட்டு வயிற்றில் குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாகவும் 9 மணிவாக்கில் பிரசவம் ஏற்படலாம் என கூறிவிட்டு அடுத்த டாக்டரிடம் பணியை ஒப்படைத்துவிட்டு சென்றார்.6 மணிக்கு பிறகு பணிக்கு வந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கண், மூக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பவர். எனவே பிரசவத்திற்காக அடுத்து பணிக்கு வரவேண்டிய பெண் டாக்டருக்கு போன் செய்து அழைத்துள்ளார். அந்த பெண் டாக்டர் உரிய நேரத்திற்கு வரவில்லை.
காலை 8 மணியை கடந்ததும் பிரசவ வலியால் ஷமீலா பீவி துடிதுடித்தார். தொடர்ந்து பலமுறை போன் செய்தும் பணிக்கு வரவேண்டிய பிரசவ டாக்டர் வரவில்லை. அங்கிருந்து நர்ஸ்களோ மேற்கொண்டு செய்வதறியாது திகைத்தனர். மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டிய கர்ப்பிணி காலை 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. 24 மணிநேரமும் பணியில் இருக்கவேண்டிய டாக்டர்கள் வராததால் இரண்டு உயிர்கள் பறி போன அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக இதுபோல சம்பவங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடைசிநேரத்தில்தான் வந்தார்கள். எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என சமாளிப்புகளை சொல்வார்கள். ஆனால் இன்றைய சம்பவத்தில் காலை 6 மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்தும் டாக்டர்களின் கவனக்குறைவால் 3 மணிநேரம் துடிதுடித்து பின் இறந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி ஷமீலாபீவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் பணிக்கு வராமல் உயிர் இழப்பிற்கு காரணமாக டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார். எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மருத்துவ துறை இயக்குநருக்கு பரிந்துரைத்துள்ளதாக நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா ரிஷபதாஸ் தெரிவித்தார்.