”பொம்பளை சிரிச்சா போச்சி… புகையிலை விரிச்சா போச்சி…” இது பிரபலமான பழமொழி.
சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். அதனால்தான் என்னவோ பெண்களையும் சிரிப்பையும் இணைத்து ஏராளமான கவிதைகள்!
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
கார்ட்டூன் படத்தில் இருந்த ”பஞ்ச்” வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது.
அத்துடன் ”பஞ்ச்” வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது.
பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.
பெண்களின் சிரிப்பு அழகுதான். அதற்காக அன்னியப்பெண்ணின் சிரிப்பை ரசிக்க அலையாதீர்கள். ரசிக்கிறேன் என்று சொல்லி முறைக்கப்பார்த்தால் அடி கூட விழலாம், உங்கள் மனைவியின் சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை! அதுபோல அன்னிய ஆடவருடன் சிரித்துப்பேசும் பெண்களுக்கு ஆபத்து பின்னாலேயே வரலாம், எச்சரிக்கைத் தேவை.