Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மக்கள்தொகை அதிகரிப்பு மகிழ்ச்சிக்குரிய விஷயமா?

Posted on June 21, 2010 by admin

இன்று உலகில் 1 பில்லியன் 570 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக அமெரிக்காவில் நிலைகொண்டுள்ள fcqp ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழும் ஒவ்வொரு நான்காம் நபர் முஸ்லிமாகவே இருப்பார். இது மகிழ்ச்சிக்குரிய விடயமா? என்பதே கேள்வி. இல்லை என்பதே எனது விடை.

இந்த அறிக்கையை வைத்து முஸ்லிம்களாகிய நாம் ஒரு சுயமதிப்பீட்டை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். ஏன் உலகின் இந்த 25வீதமான (1.5 பில்லியன்) மக்கள் தொழில்நுட்ப, அறிவியல் ரீதியாக பின்தங்கியும் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டும் பொருளாதார ரீதியாக ஏழ்மையிலும் வாழ்கின்றனர்?

ஏன் உலக மொத்த தேசிய உற்பத்தியில் அவர்களது பங்கு 3 ட்ரில்லியன் டொலராக, அதாவது, 70 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட பிரான்ஸின் மொத்த தேசிய உற்பத்தியை விடக் குறைவாக உள்ளது?

இது 120 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஜப்பானின் மொ.தே.உற்பத்தியின் பாதியாகவும் 300 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் மொ.தே.உற்பத்தியின் 1/5 பங்காகவும் இருக்கிறது? உலக சனத்தொகையில் 35 வீதமான கிறிஸ்தவர்கள் 70 வீதமான உலக செல்வங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்.

முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரையில், சில எண்ணெய் உற்பத்தி நாடுகளைத் தவிர, மனித அபிவிருத்திச் சுட்டெண் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. முஸ்லிம் நாடுகளின் அறிவியல் சாதனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் 500க்கும் குறைவான விஞ்ஞானக் கலாநிதிகளே இங்கு உருவாகின்றனர். ஆனால் பிரிட்டனில் மட்டும் இத்தொகை 3000 க்கும் அதிகமாகும். 1901 முதல் 2008 வரையுள்ள காலப்பகுதியில் விஞ்ஞானத்துறைக்காக வழங்கப்பட்ட சுமார் 500 நோபல் பரிசுகளில் 140 ஐ உலக சனத்தொகையில் 0.2 வீதமான யூதர்கள் தட்டிச்சென்றுள்ளனர்.

இதனோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் ஒரேயொரு பரிசை மட்டுமே பெற்றுள்ளனர். விஞ்ஞான சாதனைகனைப் பொறுத்தவரையில் எமது கேவலமான நிலையைப் பார்த்தீர்களா? அண்மையில் செங்ஹாய் பல்கலைக்கழகம் ஆய்வு மற்றும் போதனா முறைகள் தொடர்பாக உயர்நிலை வகிக்கும் 400 பல்கலைக் கழகங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் உலகில் உள்ள ஒரு பல்கலைக் கழகம்கூட அப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது மிகவும் வேதனை தரும் தகவலாகும். இஸ்லாமிய நாகரிகம் மேலோங்கியிருந்த மத்திய காலத்தில் (7-16 நூற்றாண்டு வரை) உலகின் தரம் வாய்ந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களும் கொரடோவா, பக்தாத், கெய்ரோ போன்ற இஸ்லாமிய நகரங்களிலேயே காணப்பட்டன.

பிரபலமிக்க அறிவியல் வரலாற்றாய்வாளர் கில்லஸ்பீ மத்திய காலத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 130 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேதைகளின் பெயர்ப் பட்டியலொன்றைப் பதிவு செய்துள்ளார். அவர்களுள் 120 பேர் இஸ்லாமிய உலகைச் சார்ந்தவர்களாகவும் நால்வர் மட்டுமே ஐரோப்பியர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவே, முஸ்லிம்கள் தமது கடந்த கால சாதனைகளுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்குப் போதுமான காரணியாகும்.

பல முக்கிய முகவரகங்களின் அறிக்கைகளின்படி இன்னொரு முக்கிய விடயம் இங்கு ஆராயத்தக்கதாகும். அதாவது, தற்போதைய முஸ்லிம் உலகின் பிறப்பு விகிதத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உலக முஸ்லிம் சனத்தொகை இன்னும் 50 வருடத்தில் இரட்டிப்பாகும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. இந் நிலைமையில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை எண்ணிக்கையில் மட்டுமே மிஞ்ச முடியும். அதேநேரம், தற்போதைய கிறிஸ்தவ சனத்தொகையான 2.3 பில்லியன் இரட்டிப்பாக இன்னும் 500 வருடங்கள் செல்லுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, முஸ்லிம் உலகில் தற்போது நிலவிவரும் பொருளாதார நிலைமை மற்றும் இன்று அவர்கள் அடைந்துள்ள பிற்போக்கு நிலை என்பவற்றுடன் இந்த சனத்தொகை அதிகரிப்பு வேகமும் ஒன்றுசேர, பொருளாதாரப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர ஒருபோதும் அதற்குத் தீர்வாக அமையாது.

அடுத்துவரும் 50 வருடத்தில் முஸ்லிம் சனத்தொகை இரட்டிப்பாகுவதால் முஸ்லிம் உலகுக்கும் கிறிஸ்தவ உலகுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி மேலும் விரிசலடையும். இந்த நூற்றாண்டில் அல்லது அடுத்த நூற்றாண்டில் உலகை ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? உலக செல்வ வளங்களில் 5 வீதத்தினைக் கொண்டுள்ள முஸ்லிம்களா அல்லது 70 வீதமான பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களா?

அறிவியல் ரீதியாக அபிவிருத்தியடைந்துள்ள இன்றைய உலகில் எண்ணிக்கைப் பலத்தை மட்டுமே கொண்டுள்ள ஒரு நாடு அல்லது தேசம் ஆதிக்கத்தையோ கௌரவத்தையோ உறுதி செய்யாது என்பதை முஸ்லிம் உலகம் உணர வேண்டும்.

விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதன் மூலமே அதிகாரம், கௌரவம், செல்வம் என்பவற்றை ஈட்ட முடியும். அதிகரித்த சனத்தொகையையும் குறைந்த இராணுவ, பொருளாதார பலத்தையும் கொண்ட நாடுகளின் இயலாமையை விளக்கப் பல உதாரணங்களைக் கூற முடியும். பொருளாதார, இராணுவ, அறிவியல் ரீதியில் உயர்நிலையிலுள்ள யூத சமூகம் அரபு உலகத்தை எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்பது நாம் அன்றாடம் காணும் காட்சியாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உயர்ந்த சனத்தொகையுள்ள நாடுகளில் வாழும் மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு விதமான கஷடங்களுக்கு மத்தியில் மேற்கில் வாழும் சிறுதொகை முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பொருளாதார வளத்துடனும் வாழ்வதை இன்னொரு முக்கிய உதாரணமாகக் கூறலாம். ஐரோப்பாவில் வாழும் 20 மில்லியன் முஸ்லிம்களின் மொத்த தேசிய உற்பத்தியானது இந்திய உபகண்டத்தில் வாழும் 500 மில்லியன் முஸ்லிம்களின் மொத்த தேசிய உற்பத்தியை விடவும் உயர்ந்ததாகவும் உறுதியானதாகவும் காணப்படுகின்றது.

இஸ்லாமிய நாகரிகத்தின் அரசியல், பொருளாதார பலம் வீழ்ச்சியடைந்தமைக்கான ஒரே காரணம் அறிவியல் துறையில் முஸ்லிம்களின் கவனம் குறைந்து சென்றமையே என பிரபல இஸ்லாமிய அறிஞர் நிஸ்ஸிம் ஹஸன் கூறுகிறார். மனித இனத்தின் தலைமைத்துவ நிலையை நாம் பல நூற்றாண்டுகளாக இழந்தே வந்துள்ளோம். நாம் நமது தூரநோக்கு, நம்பிக்கை மற்றும் நமது பகுத்தறிவு என்பனவற்றை பிரயோசனமற்றவைகளுக்காகத் தாரைவார்த்துவிட்டோம். `சித்தாந்த வேறுபாடுகளையும் காலத்துக்கொவ்வாத கோட்பாடுகளையும் கைவிட்டு துரிதமாக மாற்றமடைந்துவரும் சமூக ஒழுங்குமுறைகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்’ என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் முஹம்மத் கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் நிறுவன மாநாட்டின்போது கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் ஸ்பெய்னை ஆதிக்கம் செலுத்திய காலத்தில் (8-14ம் நூற்றாண்டு வரை) முழு ஐரோப்பாவையும் ஆதிக்கம் செலுத்தினர். ஏனெனில் அன்று இஸ்லாமிய ஸ்பெய்னே அறிவியல் விவகாரங்களின் உறைவிடமாக விளங்கியது. அதன் பயன்பாடு முழு ஐரோப்பாவின் பயன்பாட்டைவிட அதிகமாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய கிறிஸ்தவ ஸ்பெய்னின் மொ.தே.உற்பத்தி 12 முஸ்லிம் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒன்றிணைந்த மொ.தே.உற்பத்தியை விடக் கூடியது.

மத்திய காலத்தில் இஸ்லாமிய உலகில் ஸ்பெய்ன் மட்டும் உயர் அபிவிருத்தி அடைந்த நாடாக இருக்கவில்லை. இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த பக்தாத், டமஸ்கஸ், கெய்ரோ மற்றும் திரிபோலி போன்ற நகரங்களும் அறிவியல் துறையில் மேலோங்கியிருந்தன. அக்காலத்தில் முழு உலகிலும் வாழ்ந்த இஸ்லாமிய சமூகம் பொருளாதார, கலாசார, ஆய்வறிவு மற்றும் அறிவியல் ரீதியாக ஒரு உன்னத நிலையை எட்டியிருந்தது.

டொனல்ட் கெம்பல் தனது `முஸ்லிம் மருத்துவம’ என்ற நூலில், `இஸ்லாமிய உலகில் விஞ்ஞானம் மேலோங்கியிருந்த காலத்தில் ஐரோப்பியர், இருள் சூழ்ந்த உலகில் மூடநம்பிக்கைகள், கர்வம், குரூரம், மந்திரம், வசியம், தாயத்து மற்றும் மதவெறி என்பவற்றில் மூழ்கியிருந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இஸ்லாமிய நாகரிகம் எழுச்சியடைந்திருந்த காலத்தில் முஸ்லிம்கள் உலக சனத்தொகையில் 10 வீதத்தையே பிரதிநிதித்துவம் செய்தனர் என்பதே.

ஒருபுறம், 16ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள், ஐரோப்பியர்களின் இருள் சூழ்ந்த கால வாழ்க்கை முறைகளைப் பின்பற்றத் தொடங்கியதும் அவர்களது அறிவியல் அபிவிருத்தியில் ஒரு தேக்க நிலை தோன்ற, மறுபுறம், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்தத் தொடங்கி முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் மாறிக்கொண்டு வந்தனர்’ என மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சுமார் 800 வருடகாலம் தமது அறிவியல் சாதனைகளால் மனித நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்கு செலுத்திய முஸ்லிம் சமூகம் தமது ஆய்வறிவுத் துறையில் வீழ்ச்சியடைந்து, எழுந்துவரும் புதிய ஐரோப்பிய சக்திகளின் ஆதிக்கத்துக்குட்பட்டது.

16ம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் தேடல் மற்றும் பௌதீக அறிவியல் என்பனவற்றில் ஆர்வமிழந்து அறிஞர்களை உருவாக்க முடியாத தேவையற்ற அறிவியல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் தமது சொந்த அறிவியல் சிந்தனைகளை மறந்து பாரம்பரிய அறிவியலுக்கே திரும்பிச் சென்றனர். இதன்மூலம் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் என்பவற்றில் பின்தங்கி மேற்கின் அடிமைகளாக மாறினர்’ என அழகாக விளக்குகின்றார் பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் மௌலானா அபுல் ஹஸன் நத்வி.

அரசியல் அறிவியலாளர் சாமுவெல் பீ. ஹன்டிங்டன் சிலகாலத்துக்குமுன், மேற்குலகுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தற்போதைய முரண்பாடுகளை `நாகரிகங்களுக்கிடையிலான மோதல்’ என வர்ணித்திருந்தார். அது அப்பட்டமான தவறாகும். உண்மையிலேயே, அது செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்குமிடையிலான மோதல் என்பதே சரியானதாகும்.

செல்வந்த நாடுகள் பல்வேறு நிபந்தனைகளை வறிய நாடுகள் மீது திணித்து அந்நாடுகளைச் சுரண்டியும் இழிநிலைக்குத் தள்ளியும் வருகின்றன. வறிய நாடுகள், அது முஸ்லிம் நாடாயினும் முஸ்லிமல்லாத நாடாயினும், அவர்களது மீட்சி, உலகளாவிய சமாதானத்திலேயே தங்கியுள்ளது என்பதை உணர வேண்டும். செல்வந்த நாடுகளுடனான அவர்களது தேவையற்ற முரண்பாடுகள், குறிப்பாக மதத்தின் பெயரால் ஏற்படுபவை, அவர்களைப் பெரும் துன்பத்திலும் இடர்களிலுமே சிக்க வைத்துவிடும்.

முஸ்லிம்கள் ஐரோப்பியர் செய்ததைப்போல, மிகவும் துரிதமாகவும் உத்வேகத்துடனும் ஒரு அறிவியல் மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதன் மூலமே அவர்களது பழைய செழுமை நிலையை அடைந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு முன் முஸ்லிம்கள் தீவிரவாதத்ததைக் கண்டித்து, நிராகரித்து சகிப்புத்தன்மை, நிதானம், நியாயம் போன்ற உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை மேம்படுத்த வேண்டும். மேற்குடனான வெறுப்புணர்வு முஸ்லிம்களுக்கு நல்லதல்ல. இது அவர்களை பெரும் துன்பங்களுக்கே இட்டுச் செல்லும். மேற்கை வெறுப்பதும், அதேநேரம் அங்கு வாழ்வதற்காக வீஸாக்கள் மற்றும் கிரீன் கார்ட் என்பவற்றைப் பெற முயற்சிப்பதும் ஒரு வகையான நயவஞ்சகமேயன்றி வேறில்லை.

சில அரபு ஆட்சியாளர்கள் குறிப்பாக சவூதி அரேபிய உலக மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் மதங்களுக்கிடையிலான உரையாடல்கள் என்பவற்றுக்கு ஆதரவு தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அண்மையில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான மாநாடொன்றில் மன்னர் அப்துல்லாஹ் கலந்துகொண்டு, மதங்களின் நல்ல செய்திகளை முன்வைப்பதற்காக அனைவரும் தீவிரவாதத்தைக் கைவிடவேண்டும் எனவும் நாம் சகவாழ்வுக்கான குரல், நாம் மனிதநேயம், விழுமியங்கள் மற்றும் நியாயம் என்பவற்றின் குரல் என்பதை உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய உலகம் சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இது இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் கண்ணியம் என்பவற்றையே குறி வைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

கட்டாரில் நிறுவப்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான உரையாடல்களுக்கான சர்வதேச நிலையம் உலக சமாதானத்துக்கும் சமாதான சகவாழ்வுக்கும் அவசியமானது மதங்களுக்கிடையிலான புரந்துணர்வே என்ற உயரிய நோக்கில் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளே சிலுவை யுத்தகாலத்திலிருந்து பல்வேறு வடிவங்களில் பரவியுள்ள இஸ்லாத்துக்கு எதிரான மேற்கத்திய சக்திகளைப் பலவீனமடையச் செய்யும்.

கலாநிதி. இக்திதார் ஹுஸைன் ஃபாரூகி

source: (தமிழில்:நஸ்ருள் இஸ்லாம்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 34

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb