மௌலவி MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி)
‘அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?’ என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன். (அல் குர்ஆன் 5:76)
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கையாகிய ஓரிறைக் கொள்கையையும் அதன் மகத்துவத்தையும் கடந்த இதழில் நாம் கண்டோம். ஓரிறைக் கொள்கைக்கு எதிரான ஷிர்க்கையும் அதன் விபரீதத்தையும் இவ்விதழில் கண்போம். ‘ஷிர்க்’ எனும் அரபு வார்த்தைக்கு இணைகற்பித்தல், கூட்டுச்சேருதல் என்பது அர்த்தமாகும்.
அதாவது அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய வணக்கங்களை அழ்ழாஹ் அல்லாத விக்கிரகங்கள், மண்ணறைகள், மகான்கள், அவ்லியாக்களுக்கு வழங்கு வதே ‘ஷிர்க்’ என அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் மூலமந்திரமாகிய தௌஹீதை தகர்த்தெறியும் ஷிர்க்கை இஸ்லாம் மிகக் கடுமையாக வெறுக்கின்றது.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் அவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநியாயமெனக் கூறுகின்றான். லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறும் போது ‘என் அருமை மகனே! அழ்ழாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணைகற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை (நபியே) நினைவூட்டுவீராக’ (அல்குர்ஆன் 31:13)
இஸ்லாத்தின் அடிப்படையாகிய ஓரிறைக் கொள்கையை அடியோடு தகர்த்தெறியும் கொடிய பாவமான இந்த ஷிர்க்கைப் பற்றி மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகையில் ‘தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள(பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48 )
மற்றுமொரு வசனத்தில் ஷிர்க்கின் விபரீதத்தை அல்லாஹ்; பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
’அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.’ (அல்குர்ஆன் 5:72 )
இவ்வுலகில் வாழும் ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தால் அவன் வாழும்போது செய்யும் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து போய்விடுமென அல்குர்ஆன் எச்சரிக்கின்றது. ‘நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 39:65)
மன்னிப்பே இல்லாத இப்பாவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது ‘அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு இணைகற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும் எனக் கூறினார்கள்.’ (ஆதாரம்: புஹாரி-2856)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ‘யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனைச் சந்திக்கிராறோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராகச் சந்திக்கின்றாரோ அவர் நரகம் புகுவார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (ஆதாரம்: புஹாரி-1238)
அல்குர்ஆனும் ஆதாரபூர்வமன ஹதீஸ்களும் கண்டிக்கும் இக்கொடிய பாவத்தில் இன்று எமது சமூகத்தில் அதிகமானோர் மூழ்கிப்போயிருக்கும் அவலத்தை என்ன சொல்வது? மண்ணறைகளில் அடங்கப்பட்டிருக்கும் மகான்களிடத்தில் போய் தங்களது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் எத்தனையோ சகோதர, சகோதரிகளை கண்கூடாகக் காணுகின்றோம்.
மரணித்துப்போன அம்மனிதர்களால் செவிதாழ்த்திக் கேட்கவும் முடியாது, கேட்டால் பதிலளிக்கவும் முடியாது என அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
‘அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்!’ (அல்குர்ஆன் 7:194)
மேற்குறித்த திருமறை வசனம் மண்ணறைகளில் உள்ளவர்களிடம் அழைத்துப் பிரார்த்திப்பது வீணான செயல் என வர்ணித்த போதிலும் மார்க்கத்தில் விளக்கமில்லாத எத்தனையோ முஸ்லிம்கள் இன்று தர்ஹா வழிபாட்டிலும், ஸியாரங்களுக்குச் சென்று கொடி ஏற்றுவதிலும் மும்முரமாகச் செயற்படும் துர்ப்பாக்கிய நிலையைக் காணுகின்றோம்.
தர்ஹா வழிபாடு என்கின்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் ஷிர்க்கின் கேந்திரத்தளங்களுக்கு நமது சமுதாய மக்கள் ஆண், பெண் வேறுபாடின்றிச் சென்று ஈமானை இழந்து வரும் காட்சி அதிர்ச்சியானதும் அவசியம் கைவிடப்பட வேண்டியதுமாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கடைசி நேரத்தில் கடுமையாக எச்சரித்த ஓர் பாவம் இந்த கப்ரு வழிபாடுதான். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது, உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரும் (ஹபஷா ஹிஜ்ரத்தின் போது) ஹபஷாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிருஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘(அவர்கள் எத்தகை யோரெனில்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்’ என்று சொன்னார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்-918)
மேற்குறித்த செய்தியிலிருந்து ‘கப்ரு வழிபாடு’ என்பது ஓரிறைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் போதிக்கும் இறைகொள்கையில் போதிய அறிவில்லாத பாமர மக்களே இப்பயங்கரத் தீமையில் சிக்கிக் கொள்கின்றனர். நமது சமுதாயத்தில் உள்ள ஏமாற்றுப் பேர்வழிகளால் நடாத்தப்படும் கத்தம், பாத்திஹா, கந்தூரி போன்ற அநாச்சாரங்கள்தான் இஸ்லாம் தடுத்த இந்த கப்ரு வழிபாட்டை மென்மேலும் ஊக்கப்படுத்துகின்றது என்பதும் இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.
பகிரங்கமாக நடைபெறும் இந்த அநியாயத்தை ஒழிக்காமல் இந்நாட்டிலென்ன சர்வதேசத்திலும் கூட இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க முடியாது என்பதை கிலாபத் பேசுவோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தூய கொள்கையான இஸ்லாம் இப்பூமியை ஆள வேண்டுமென விரும்பும் அனைத்து உள்ளங்களும் ‘ஷிர்க்’ எனும் கொடிய குற்றத்தை இச்சமூகத்தை விட்டு ஒழித்துக்கட்ட ஒன்றிணைய வேண்டுமென இக்கட்டுரை வேண்டி நிற்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நமது இறுதி மூச்சுவரை அவன் வலியுறுத்தும் ஓரிறைக் கொள்கையில் வாழ அருள்பாலிப்பானாக!
source: http://dharulathar.com