இஸ்திஃகாரா தொழுகையை தொழும் நேரம்:
இஸ்திஃகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திஃகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.
தவறான நம்பிக்கை:
இஸ்திஃகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கனவு காண்பார்; அக்கனவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திஃகாரா தொழுபவர் கனவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.
இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:
அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு ஆதாரமாக இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது. ஆனால்,
இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:
(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திஃகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.
(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன் உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:
ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)
“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)
அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்! பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள். விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة
“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:216)
சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்; குறித்த அப்பெண்னை மணப்பான்; காலப்போக்கில் அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்
இஸ்திஃகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:
ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார். அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன; அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!
விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300 பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?
அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!
எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?
சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்:
قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها
“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:286)
அல்லாஹ் கூறுகின்றான்:
قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:
“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (அல்குர்-ஆன் 64:16)
சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால் இஸ்திஃகாரா தொழுகையை தொழுதுகொள்!
சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!
சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திஃகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!
சகோதரா! இஸ்திஃகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.
இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.
நன்றி: சுவனத்தென்றல்