MUST READ
மார்க்க விஷயங்களில் சரியான அளவுகோள் எது?
மௌலவி B.A. அஸ்பர் (பலாஹி)
‘இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.’ (அல் குர்ஆன் 6:153)
இஸ்லாமிய மார்க்கத்தில் அடிப்படை அம்சங்கள் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபி வழிகளுமாகும். மனித குலத்திற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இவ்விரண்டும் உள்ளடக்கியுள்ளது. மனித குலம் ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்பட வேண்டுமென்பது அல்குர்ஆனின் வாக்காகும்.
அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்படுகின்றாரோ, அவர் திட்டவட்டமாக வெற்றிபெற்று விட்டார்’ எனக்கூறுகின்றான். (அல்குர்ஆன் 33:71)
இன்றைய முஸ்லிம்களில் அதிகமானோர் மேற் கூறப்பட்ட அளவுகோளை விட்டுவிட்டு, நபியவர்கள் இஸ்லாத் தைப் பிரச்சாரம் செய்த வேளையில் அக்காலத்தில் வாழ்ந்த அறியாமை சமூகம் மார்க்கத்தின் அளவுகோள்களாக எதனைக் கொண்டார்களோ அந்த விஷயங்களையே இவர்களும் தமது மார்க்க அளவுகோள்களாக கொள்வதை காணமுடிகின்றது. இன்று அதிகமான முஸ்லிம்கள் மார்கத்தின் அளவுகோள்களாக பின்வரும் அம்சங்களை எடுக்கின்றனர்.
1. மூதாதையர், தாய்தந்தையர்களைப் பின்பற்றல்.
2. தலைவர்கள், ஷேகுமார்கள், பழைய உலமாக்களைப் பின்பற்றல்.
3. மார்க்க விஷயங்களில் பெரும்பான்மை எண்ணிக்கையைப் பார்த்துப் பின்பற்றல்.
4. ஊர்வழமைகளைப் பின்பற்றல்.
இவைகளில் எது சரியானது என்பதை நாம் ஆராய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ‘நான் உங்களை தெட்டத்தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்.’ (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா, ஆதாரம்: இப்னுமாஜா-42, முஸ்னத் அஹ்மத்-16813)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச்சென்ற அந்தத் தெளிவான சான்று என்னவென்பதை பல அறிவிப்புகளில் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ‘ஓர் இடத்தில் நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல் வழியும் பேரொளியும் உள்ளது. எனவே அவ் வேதத்தை பலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம், நூல்: முஸ்லிம்-4782)
மற்றொரு அறிவிப்பில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; ‘எனது வழிமுறையை பற்றிக் கொள்ளுங்கள்; எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இர்பால் பின் ஸாரயா, நூல்: அபூதாவூத்-4012)
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில்; நபியவர்கள் எமக்கு மார்க்க விடயத்தில் அளவு கோளாகஅல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான நபிவழிகளையும்தான் கூறியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இறைவன் தனது திருமறையில் ‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன் 07:03)
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட தாம் விரும்பியதை பின்பற்ற முடியாது. இறைவன் எதை வஹியாக அறிவித்தானோ அதை மாத்திரம்தான் பின்பற்ற முடியும். என்று திருமறையில் இறைவன் கட்டளையிடுகின்றான். ‘(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!’ (அல்குர்ஆன் 06:106) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை விளக்கும் அறிவைப்பெற்றிருப்பதால் நாம் அவர்களையும் மார்க்க விடயத்தில் அளவுகோளாக கொள்ளவேண்டும்.
அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிவழிகள் இவை இரண்டையும் விடுத்து மனிதர்கள் குறிப்பாக இஸ்லாமியர் களில் அதிகமானோர் எடுத்திருக்கும் அளவு கோள்களும் அவற்றிற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் அளிக்கும் பதில்களும்
1. மூதாதையர், தாய்தந்தையர்களைப் பின்பற்றல்.
முஸ்லீம்களில் பலர் மார்க்க விஷயங்களில் தமது மூதாதையர், தாய்தந்தையர்கள் என்ன அடிப்படை யில் இருந்தார்களோ அதே அடிப்படையில்தான் நாங்களும் இருப்போம் என்று கூறுகின்றார்கள். சரியான கொள்கை விளக்கத்தை சொல்லும் போது, ஃபிர்அவ்ன் மூஸா நபியிடம் கேட்ட கேள்விகளினைப்போல் எங்கள் தாய்தந்தையர்கள் வழிகேடர்களா? அவர்கள் நிலை என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு மூஸா நபி என்ன சொன்னார் என்பதை இறைவன் திருமறையில் குறிப்பிடும் போது ‘முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன? என்று அவன் கேட்டான். அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம்(உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிடமாட்டான். மறக்கவும் மாட்டான் என்று அவர் கூறினார்.’ (அல்குர்ஆன் 20:51,52) என்று கூறுகின்றான்.
மற்றுமொரு வசனத்தில், ‘அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன் 5:104) என்று அல்லாஹ் கேள்வியாக கேட்கிறான்.
பிறிதொரு வசனத்தில் ‘அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்’
எனவே மார்க்க விடயங்களில் அளவுகோள்களாக தாய்தந்தையர்கள், மூதாதையர்களைப் பார்ப்பது திருமறைக் குர்ஆனுக்கு முரணான விடயமாகும்.
2. தலைவர்கள், ஷேகுமார்கள், பழைய உலமாக்களைப் பின்பற்றல்.
மேற்குறித்த விடயத்தினையும் முஸ்லீம்களில் பலர் மார்க்க விடயங்களின் அளவு கோளாக எடுத்துள்ளனர். ஒரு மனிதன் அல்லது ஆலிமின் தோற்றத்தை, ஆடையை வைத்து, பேச்சின் கவர்ச்சியை பார்த்து இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும், இவர்கள் கொண்டிருக்கும் கொள்கை சரியானதாகத்தான் இருக்கும், இவர்களெல்லாம் பெரும் பெரும் மார்க்க அறிஞர்கள், பொய் சொல்ல மாட்டார் கள் என்று அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியின் காரணத்தால் அவர்கள் சொல்வதை, செய்வதை நன்மையென நினைத்து செய்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு தவறானது என்பதனையும் இறைவன் இத்தகையோருக்கு மறுமையில் என்ன செய்வான் என்பதனையும் திருமறைக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.
இறைவன் ஓர் வசனத்தில் இத்தகையோர் மறுமையில் அடையும் நஷ்டத்தைப்பற்றி குறிப்பிடும்போது, அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக் கலாமே என்று கூறுவான். இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.) என் இறைவா? எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டனர் என்று இத்தூதர் கூறுவார்.’ (அல்குர்ஆன் 25:27-30)
மற்றுமோர் வசனத்தில் ‘உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று(அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரக மெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக! என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று(அவன்) கூறுவான். எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து வந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்! என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 07:38,39)
மேலும் திருமறைக் குர்ஆன் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடுகையில், ‘அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டி ருக்கக்கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! எனவும் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 33:66-68 ) எனக் கூறுகின்றது. எனவே திருமறைக் குர்ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமாக இவ்விடயம் இருப்பதை மேற்கூறப்பட்ட வசனங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.
3. மார்க்க விஷயங்களில் பெரும்பான்மை எண்ணிக்கையைப் பார்த்துப் பின்பற்றல்.
இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களில் ஒரு சாரார் மார்க்க விடயங்களில் எண்ணிக்கையைப் பார்க்கின்றனர். தமது இயக்கத்தில் அல்லது தமது அமைப்பில் கூடுதலானவர்கள் உள்ளனர், தாம் கொண்டிருக்கும் கருத்தில் ஊரில் அதிகமானோர் சார்ந்திருக்கின்றனர், அதிகமான பள்ளிவாயல்களில் தமது கருத்தின் அடிப்படையில்தான் வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றது என்றும் இவ்விடயத்தில் அளவுகோளாக எண்ணிக்கையைப் பார்க்கின்றனர்.
இந்த அளவுகோள் திருமறைக்குர்ஆனின் பார்வையில் எந்த அளவு பிழையானது என்பதைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
‘பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்று கின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.’ (அல்குர்ஆன் 06:116)
மற்றொரு வசனத்தில்,
‘ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 07:179). பிறிதோர் இடத்தில், ‘நீர் பேராசைப் பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.’ (அல்குர்ஆன் 12:103).
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் பெரும்பான்மை எண்ணிக்கை என்பது மார்க்க விடயங்களில் அளவுகோள் கிடையாது எனபதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் எமது சகோதரர்கள் பெரும் கூட்டத்தை வைத்து சத்தியத்தை எடைபோடு கின்றனர். இது ஓர் கவலைக்குரிய அம்சமாகும்.
4. ஊர்வழமைகளைப் பின்பற்றல்.
முஸ்லிம்களில் மற்றொரு சாரார் மார்க்க விடயங்களின் அளவுகோளாக ஊர் வழமைகளைப் பார்க்கின்றனர். இவர்கள் ஊரில் தொன்றுதொட்டு செய்யப்பட்டு வந்த மார்க்க விடயங்களை மாற்றக்கூடாது, அவை நிலைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான ஓர் அடிப்படையை இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான மோசமான சிந்தனைகளை தகர்த்தெரிந்த மார்க்கம் இஸ்லாமாகும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக் கருதிவந்தனர். அம்மாதத்தில் அவர்கள் எவ்விதமான நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள்.
ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள். ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரில், அவர்களுடன் என்னை விட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்!’ (நூல்: முஸ்லிம்-2782)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் இருந்து இஸ்லாத்தில் ஊர்வழமைகள் மார்க்கத் தீர்வாக அமையாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மார்க்க விடயங்களில் அளவுகோள் அல்குர்ஆனும், ஆதாரபூர் வமான நபிவழிகளும்தான். அதை விடுத்து அதிகமானவர்கள் செய்கின்றார்கள்தானே என்று கூட்டு துஆ, குனூத், தறாவீஹ் 20 ரக்அத்கள், ஜும்ஆவின்போது மஹ்ஷர் ஓதல், பாங்கிற்கு முன் ஸலவாத்து, தாயத்து, தட்டு, தகடு, கத்தம், பாத்திஹா போன்ற அம்சங்களில் இறைவன் சொன்ன அளவுகோளை எடுத்துப்பாருங்கள்.
அல்குர்ஆனையும்,ஆதாரபூர்வமான நபிவழியையும் வாழ்வின் எச்சந்தர்ப்பத்திலும் எடுத்து நடந்து ஈருலகிலும் வெற்றி பெற்று இறையன்புக்கு உரித்தானவர் களாக மாறுவோமாக!
source: http://dharulathar.com