அதிரவைக்கும் ஆடிட் ரிப்போர்ட்!
பழைய மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? உதாரணமாக, வடுவூர் துரைசாமி அய்யங்கார்நாவல்கள்? ‘ஆம்’ என்றால், உங்களுக்கு இந்தக் கட்டுரையின் விஷயங்களும் நிச்சயம் பிடிக்கும். சுவாரஸ்யம் கொடி கட்டும் கற்பனைக் கதைகளையும் மிஞ்சும் உண்மைகள் இவை!
தமிழக அரசின் நிதி நிர்வாகம், ஒவ்வொரு இலாகாவின் செயல்பாடுகள், ஒதுக்கப்பட்ட பணம், செலவழித்த முறைகள் குறித்து, மத்திய அரசின் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் வினோத் ராய் (COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA) ஓர் அறிக்கை வெளியிடுவார். ஆழ்ந்து படித்தால் இது ஒரு கண்ணீர்க் காவியம்தான்.
வருங்கால அரசியல் தலைவர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் சம்பாதிக்க எத்தனை வழிகள் உண்டு என்று ‘சுயமுன்னேற்றத்துக்கான வழிகாட்டி’யாகவே பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை. பல்வேறு துறைகளின் நிதி நிர்வாகத்தை அலசி ஆராய்ந்திருக்கும் இந்த அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் இங்கே…
அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இந்த அறிக்கை விஷயத்தில்தான் எத்தனை ஒற்றுமை. இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்யும்போதும், இந்த அறிக்கைகளைமதித்ததே இல்லை. இரண்டு ஆட்சிகளிலும் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியப்போகும் முதல் நாள்தான் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பார்கள். எதிர்க் கட்சிகளின் சரங்களில் இருந்து தப்பிக்க அது ஒரு சமாளிப்பு டெக்னிக்!
இந்த முறை சட்டமன்றக் கூட்டத் தொடர் மே மாதம் 14-ம் தேதி முடிந்தது. தணிக்கை அதிகாரி மார்ச் 5-ம் தேதி வெளியிட்ட அறிக்கை, கூட்டத் தொடர் முடிகிற சமயத்தில்தான் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. 2001–2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கிய நிதிக் குளறுபடிகள் அப்படியே இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்பதையே அறிக்கை நமக்குப் புரியவைக்கிறது.
முதலில் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு. அங்கு இருந்தே அறிக்கையைத் தொட(ங்க) லாம்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்:
பொது வினியோகத் திட்டத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகள், மத்திய நிறுவனங்களிடம் இருந்து இந்தத் துறை கொள்முதல் செய்யவேண்டும். நெல் உமியைக் களைந்து அரிசியாக்கி, பொருட்களைப் பாதுகாத்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பிவைப்பது இந்தத் துறையின் முக்கியப் பணி. 2004–2005 முதல் 2008–2009 வரையிலான இதன் பணிகள் தணிக்கைக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.
இது பொதுச் சேவைக்கான துறை. இதில் ஏற்படும் இழப்புகளைச் சரிக்கட்ட மாநில அரசு மானியம் அளிக்கும். மார்ச் 31, 2008 வரை இந்த நிறுவனத்தில் வரவைவிட செலவு 6,358 கோடி ரூபாய் அதிகம். இதற்கு முக்கிய காரணம் – பல்வேறு செலவுகளைத் திரும்பப் பெறுவதில் மெத்தனம் காட்டியது. கொள்முதல் செய்த நெல்லை உமி நீக்கி அரிசி யாக்குவதற்கு மத்திய அரசு உதவித் தொகை அளிக்கிறது. அந்த உதவித் தொகையான 96.57 கோடி ரூபாயைக் கேட்டுப்பெற யாருக்கும் நேரம் இல்லை.
சந்தையில் நெல்லுக்கு அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும். ஆனால், விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தயார் நிலையில் இல்லை. பொது வினியோகத்துக்கு எவ்வளவு நெல் தேவை என்று இந்த நிறுவனத்துக்குத் தெரியும். ஆனால், அதைவிட மிகக் குறைவான நெல் கொள்முதல் அளவையே தனது இலக்காக வைத்துக்கொண்டது இந்த நிறுவனம். இதனால், சந்தையையும் விலை ஏற்றத்தாழ்வுகளையும் சீர்படுத்தக்கூடிய வாய்ப்பு பறிபோனது. அப்படியே செய்தாலும், அதை வாங்கிப் பாதுகாக்க தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது.
தமிழ்நாடு மின்சார வாரியம்:
இதன் நஷ்டம் 3,512 கோடி ரூபாய். இந்த வாரியத் தின் தணிக்கை குறிப்பு மட்டுமே 14 பக்கங்கள். மின்சாரப் பற்றாக்குறை என்பதைவிட இந்தத் துறை முறையான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பாதுகாக்கவோ, பெருக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுபுரியும். இதன் நஷ்டங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது மின்வெட்டு. அதற்கு இது ஒரு சின்ன சாம்பிள்… கோதையாறு நீர் மின் நிலையம்.
இதன் மின் உற்பத்தி திறன் 60 மெகா வாட். இதில் உள்ள சுழலி அச்சுத்தண்டு பழுதானது. இந்த உபகரண உற்பத்தியாளருக்கும் வாரியத்துக்கும் ஏதோ பிரச்னை. ஜூன் 2004-ல் (அ.தி.மு.க. ஆட்சி) தொடங்கி, இப்போது 2009 வரை அது தீர்ந்த பாடில்லை. இதனால், வாரியத்துக்கு 74.45 கோடி இழப்பும், 386 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி யும் இல்லாமல் போனது. இதனால், 60 மெகா வாட் திறனுள்ள இந்த மின் நிலையத்தின் திறன் 36 மெ.வா. குறைந்தது. ஒரு மின் நிலையத்தின் கதியே இதுவென்றால் மற்றவை..?
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்:
இந்த நிறுவனத்துக்கு ஏழு போக்குவரத்துக் கழகங்கள்… 20,104 பேருந்துகள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 196.96 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். தணிக்கைக்கான காலகட்டத்தில் இதன் வருவாய் 5,053 கோடி. 2004–05 முதல்
2008-0-9 வரை தணிக்கை செய்யப்பட்டது. இதன் நஷ்டம் 3,884.99 கோடி. சரி, இந்த இழப்பை இந்தக் கழகம் எப்படிச் சமாளிக்கிறது? ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குத் தரவேண்டிய தொகை 969.99 கோடி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டஈடு 158.15கோடி. இதையெல்லாம் தராமல் வைத்துக் கொண்டு தங்கள் தேவைகளைச் சமாளிக்கிறார்கள்!
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை:
தேசிய ஊரக நல்வாழ்வு இயக்கம், குறிப்பாக கிராமப்புற மக்களின் சுகாதாரம், அதன் முன்னேற்றத்துக்காக இந்திய அரசால் எல்லா மாநிலங்களிலும் 2005 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக மாநில அளவிலான அடிப்படை சர்வேக்கள் முடிந்துவிட்டன. ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தகவல்கள் தொகுக்கப்படவில்லை.
2008–09 வரை மத்திய அரசில் இருந்து மாநில சங்கம் பெற்ற தொகை 965.57 கோடி. இதில், 359 கோடி (37%) செலவிடப்படாமல் இருந்தது. தனியார் மயக்கவியல் சிறப்பு மருத்துவர், குழந்தை நல சிறப்பு மருத்துவர், பிரசவமானதுமே குழந்தைகளைக் கவனிப்பதற்கான சிறப்பு வசதிகளுக்காக இந்த நிதி சரியாகப் பயன்படுத்தபடவில்லை.
இதைச் சோதிக்க தணிக்கைக் குழுவால் ஏழு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அங்கே 62 கோடி ரூபாய் செலவு செய்யப் படாமலே இருந்தது.
2006-09 காலகட்டத்தில் இந்த நிதியில் இருந்து 5,395 கோடி வேறு திட்டங்களுக்குப் பயன் படுத்தப்பட்டது. மாநிலத்தில் 47 சதவிகித ஆய்வக உதவியாளர்களின் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. ஓட்டுனர்கள் 22 சதவிகிதம் மற்றும் மருந் தாளர்கள் 12 சதவிகிதம் இடங்கள் காலி.
பல்வேறு கொள்முதல் முகாம்களுக்கு மருந்து வாங்க முன்பணம் கொடுக்கப்பட்டது. இதில், இன்று வரை 92.22 கோடி ரூபாய்க்கு கணக்கே வரவில்லை!
மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்தத் தணிக்கை அறிக்கை. இதில் இருந்து ஏழை கிராம மக்களின் சுகாதாரம்பற்றி அறிக்கைகளில் கவலைப்படும் அளவுக்கு அரசாங்கம் தன் செயல்முறையில் கவலைப்படவில்லை என்றே கருதவேண்டி உள்ளது.
தொழில் துறை:
இந்திய சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள். இதில் 16, அரசின் கூட்டுறவுத் துறையைச் சார்ந்தவை. இவற்றில் மூன்று பழுது!
மார்ச் 2008 வரை 15 கூட்டுறவு ஆலைகளில் இழப்பு 1,475 கோடி. குறிப்பிட்ட சில ஆலைகளில் இருந்து மற்ற ஆலைகளுக்குச் சர்க்கரையை அனுப்பிய போக்கு வரத்துச் செலவினால் ஏற்பட்ட இழப்பு 1.25 கோடி.
சர்க்கரை உற்பத்தியில் தொழில்நுட்பம் சரியாக இல்லாததால், கரும்பில் இருந்து பெறவேண்டிய அளவுக்கான சர்க்கரையைப் பிழிந்தெடுக்க முடிய வில்லை. இதனால், இழப்பு 12.97 கோடி. சர்க்கரை ஆலைகளைச் சரியாகப் பராமரிக்காததால் இழப்பு 4.35 கோடி.
சேலம் ஓர் உதாரணம்… இங்கே வடிப்பகம் (டிஸ்டிலரி) இழப்பு மட்டுமே 13.46 கோடி.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:
திருவான்மியூர், கொட்டிவாக்கம் கிராமங்களில்(!) அரசுக்குச் சொந்தமான 49.19 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 26-.62 ஏக்கரை தகவல் தொழில்நுட்பம்அதனைச் சார்ந்த சேவைகளுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைப் பெறவிரும்பும் நிறுவனங்களில், யார் அதிக முன்பணம் செலுத்துகிறார்களோ… அவர்களுக்கே முன்னுரிமை. 99 வருடக் குத்தகைக்கு நிலம் அளிக்கப்படும். இதைக் கொடுப்பது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்.
இந்த நிலத்துக்கு, சதுர அடிக்கு 5,757 ரூபாயாக அளிக்க முன்வந்த டி.எல்.எஃப். நிறுவனத்தை தன் பங்காளியாக தொழில் வளர்ச்சிக் கழகம் தேர்ந்தெடுத்தது. இது நடந்தது செப்டம்பர் 2007-ல். இதை ஏற்றுக்கொண்ட அரசு, பிப்ரவரி 2008-ல் அந்த நிறுவனத்துக்குத் தெரிவித்தது. அந்த நிறுவனமும் அதே ஆண்டு மே மாதம் மொத்த குத்தகைத் தொகையான 725.33 கோடியை அரசு கணக்கில் செலுத்தியது. இனிதான் அறிக்கையில் வேதனையான சுவாரஸ்யம்…
வழக்கமாக இதுபோன்ற நிலங்களுக்கு அதன் மதிப்பு, அருகில் உள்ள குடியிருப்பு நிலங்களின் வழிகாட்டுதல் விலையைவிட இரண்டு மடங்காக இருக்க வேண்டும். இந்த நிலத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு மனைகளின் வழிகாட்டுதல் விலை சதுர அடிக்கு 3,520 ரூபாய். அப்படியானால் டி.எல்.எஃப் வாங்கிய நிலத்தின் விலை சதுர அடிக்கு 7,040 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் கொடுத்த விலையோ 5,757தான். இதனால் அரசுக்கு இழப்பு – அந்த நிறுவனத்துக்கு லாபம் – 148.88 கோடி.
இந்த நிலத்தில் மீதம் உள்ள 25.27 ஏக்கரை இன்னொரு கூட்டுக் பங்காளியான டாட்டா ரியாலிட்டிஸ் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் என்ற மும்பை நிறுவனத்துக்குக் கொடுக்க முடிவானது. இதுவும் அதே காலகட்டமான பிப்ரவரி 2008-ல்தான். அவர்கள் சதுர அடிக்கு 12,050 ரூபாய் வழங்கினார்கள்.
ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றியே இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக அரசு டிசம்பர் 2009-ல்தெரிவித்தது. முதல் நிறுவனத்துக்கு குடியிருப்பு பகுதியின் வழிகாட்டுதல் விலைக்கு அளித்த அரசு, டாட்டா நிறுவனத்துக்குத் தொழில் பகுதிக்கான வழிகாட்டுதல் விலையை எப்படித் தீர்மானித்தது? இதற்கு அரசு கொடுத்த பதிலை ஏற்க முடியாது என்கிறது அறிக்கை.
இதேபோல்தான், டைடல் பார்க் பகுதியில் 2001-ல் அ.தி.மு.க. அரசு, அசண்டாஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்தான் முடிவானது. அதிலும், அ.தி.மு.க-வின் தவறான ஒப்பந்தத்தையே பின்பற்றியது தி.மு.க. அரசு. இதனால், அரசுக்கு இழப்பு 9.75 கோடி.
இதில் பல இலாகாக்கள் தணிக்கைக் குழுவின் சந்தேகங்களுக்கு பொறுப்பாகப் பதிலளிப்பதே இல்லையாம். குறிப்பாக, அரசு கேபிள் நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அது, இன்னும் கணக்கே காட்டவில்லை. அதேபோல, செய்யாத கணினி வேலைக்கு எல்காட் நிறுவனத்தில் ஒன்பது கோடி பாழ்!
இந்த அறிக்கையில் இன்னும் பல இலாகாக்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அரசு பணம் எப்படிப் போனால் நமக்கென்ன என்கிற மனோபாவம் ஆண்ட – ஆளுகிற கட்சிகளுக்கு இருப்பதாகவே இதன் சாராம்சம் காட்டுகிறது. இன்னும் ஊன்றிப் படித்தால், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பணத்தை அள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிற வருங்கால அரசியல்வாதிகள் இந்த அறிக்கையை கையில் வைத்துக்கொண்டால் எங்கெல்லாம் சுரண்டலாம் என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம்!
நன்றி: சுதாங்கன் (கட்டுரையாசிரியர்) & நீதியின் குரல்