வீண் விரயம் செய்யாதீர்கள்
[ வீண் விரயம் செய்பவர்கள் மேலுள்ள புகைப்படத்தை பார்க்கவும். ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களைப்படைத்த அல்லாஹ்தான் இவர்களையும் படைத்தான். வீண் விரயம் செய்வீர்களானால், இந்த குழந்தைக்கு கிடைத்துள்ள சொற்ப உணவு கூட மறுமையில் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். வீண் ஆடம்பரத்துக்காக, பெருமைக்காக வேறு எதற்காகவும் வீண் விரயம் செய்யாதீர்கள்.
மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் தொழுகைக்காக ”ஒளு” செய்யும்போதுகூட தண்ணீரை வீண் விரயம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்காதபோது உணவுப்பொருள்களை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணருங்கள்.. அத்துடன் உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணருங்கள். – Adm. nidur.info]
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 6:141)
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.
அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப்புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன. மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 6:141)
தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும். மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (திருக்குர்ஆன் 4:36)
உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான். …உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான். (திருக்குர்ஆன் 15:40)
இன்று பார்க்கின்றோம். எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது. யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வேறு வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.
இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் (முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும்) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம்.
”அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள். (ஆதார நூல்: திர்மிதீ)
உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.
விருந்துகளிலும் இதே நிலை.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள். அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,
இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம். பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.
இஸ்லாம் தடை செய்கிறது.
இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால்,
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ”…உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்,
என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)
ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டு போய் குப்பையில் தட்டலாமா?
சிந்தித்தால் சீர் பெறலாம்
விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி-முஸ்லீம்)
ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது. ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ் அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.
அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.
இது இந்தியாவின் நிலை என்றால் ? அரபு நாடுகளின் நிலையோ இதை விட மோசம் எனலாம். விருந்து நடந்து முடிந்தப் பகுதியின் குப்பைத் தொட்டிகள் அனைத்தும் உயர்தர உணவுகளால் நிரம்பி வழிந்து ரோடுகளிலும் சிதறிக் கிடப்பதைக் காணலாம். ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளை ஆளும் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார்கள், தங்களின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட மக்களையும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழும்படி ஏவினார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அவற்றிற்கு நேர்மாறான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
குறிப்பிட்ட o ஒரு மன்னர் குடும்பத்தில் பிறந்திருக்கா விட்டாலும் பரவாஇல்லை,
குறிப்பிட்ட o ஒரு அமீர் குடும்பத்திலாவது பிறந்திருக்கக் கூடாதா ? என்று அவர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு ஏழைக் குடிமக்கள் ஏங்கித் தவிக்கும் மோசமான முன்மாதிரிகளாக ஆகிக் கொண்டார்கள். இவர்களின் வீடுகளில் தயார் செய்யப்படும் உணவு வகைகளை சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு மிதமிஞ்சி குப்பைத் தொட்டிகளை நிறைத்து வருகின்றனர்.
நல்ல முன் மாதிரி
சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்
o சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,
o முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர். (செய்தி: தினத்தந்தி)
குறிப்பிட்ட இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால், மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால், விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால், அல்லாஹ்வின் அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும். அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்து ஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.
இறைவனின் அடியார்களை அவனின் நிணைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (திருக்குர்ஆன் 4:36)
o உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?
o வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?
o இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை ஏன் பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது? சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்