மத்திய அரசின் ஒதுக்கீட்டில், “ஹஜ்’ பயணம் செய்ய விரும்புவோருக்கு, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் செய்தி குறிப்பு:
மத்திய அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில், “ஹஜ் 2010′ புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில நடைமுறைகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, விண்ணப்பதாரர் மத்திய, “ஹஜ்’ குழு மூலம் கடந்த ஐந்தாண்டுகளில், “ஹஜ்’ பயணம் மேற்கொண்டிருக்க கூடாது.
விண்ணப்பத்துடன் அதன் நகல், மற்றும் ஒவ்வொரு பயணியின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான, சான்றொப்பமிட்ட மூன்று புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அமைச்சர், எம்.பி., அல்லது மாநில அமைச்சர்களால் விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.குடியிருப்பு, குடிமகன் சான்றுக்காக, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலினை, சான்றொப்பம் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் கைவசம் இருக்க வேண்டும்.
அதன் விவரத்தையும் விண்ணப்பத்துடன் சேர்த்து தர வேண்டும்.
இவற்றை, “தி அன்டர் செகரெட்டரி (ஹஜ்), மினிஸ்டிரி ஆப் எக்ஸ்ட்ரனல் அபையர்ஸ், கவர்மென்ட் ஆப் இந்தியா, ரூம் நம்பர் 224 அக்பர்பவன், சாணக்யபுரி, டில்லி -110021′ என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.