o (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
o ‘அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
o ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
o அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
o மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்
o எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:1 முதல் 6)
மேற்கண்ட இந்த அருள்மறை வசனங்கள் எழுதவும், படிக்கவும் தெரியாத கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனைத்தையும் சூழ்ந்து அறியக்கூடிய ஞானமிக்க இறைவானாகிய அல்லாஹ் விடமிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளாகும். இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவெனில் அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகிறான் என்பதே! (ஸுப்ஹானல்லாஹ்)
அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).
இங்கு அல்லாஹ் அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை என்று கூறுகிறான் கல்வியைப் பற்றி சிந்தித்திருந்தால் நம் சமுதாயம் இன்று அனைத்து சமூகத்தாரையும் பின்னுக்குத் தள்ளியிருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை இதனால் என்ன தீமைகள், ஏன் நம் சமுதாய மாணவ மாணவிகள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள் என்பதை அலசிப்பார்ப்போம் வாருங்கள்!
தீன்குல மாணவ மாணவிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தற்கான காரணங்கள் இதோ
நெம்பர் 1 – பெற்றோர்களும் ஆசரியர்களும்
நாம்தான் ஒழுங்காக படிக்கவில்லை நம் பிள்ளைகளாவது படிக்கட்டுமே என்று தவிக்கும் பெற்றோருக்கு சாதாரண நோட்டு புத்தகம் வாங்குவதற்கு கூட வசதிகள் குறைவாக உள்ளது காரணம் பெற்றோரின் கல்வியறிவின்மைதான்.
நம் சமுதாயத்தின் 5ம் வகுப்பு கீழ் படித்த பெற்றோர்களில் பெறும்பாலும் பீடி சுற்றுபவர்களாகவும், பஞ்சர்கடை, பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளராகவும், ரிக்சா இழுப்பவராகவும் குதிரைவண்டி ஓட்டுனர்களாகவும் தான் வாழ்கிறார்கள் மேலும் 6 முதல் 10ம் வகுப்பு மேல் படித்த பெற்றோர்களில் பெறும்பாலானோர் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாகவும், ஆட்டோ ஓட்டுனராகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வறுமை இவர்களின் பிள்ளைகளை பாதிக்கிறது!
o 6ம் வகுப்பு படிக்கும் மகன் வசதியற்ற தன் தந்தையிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித்தர கெஞ்சுகிறான் ஆனால் போதிய பணவசதியன்மையால் தந்தை முகம் சுழிக்கிறார்
o 7ம் வகுப்பு படிக்கும் மகள் அடுப்பங்கரையில் இருக்கும் தன் வசதியற்ற தாயிடம் ஒரு நோட்டு புத்தகம் வாங்கித்தர கெஞ்சுகிறாள் ஆனால் தாயோ அப்பாவுக்கு வருமானம் இல்லை இரண்டு நாள் போகட்டும் என்று கூறி பள்ளிக்கு அனுப்புகிறாள்!
மகன் பள்ளிக்கு செல்கிறான் பக்கத்து வகுப்பில் பயிலும் தன் தோழனிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்குகிறான் இதை பார்க்கும் ஆசிரியரோ ஜாமென்ட்ரி பாக்ஸ் கூட வாங்க உனக்கு வக்கில்லையா என்று வகுப்பறையில் எல்லோர் முன்னால் கண்டிக்கிறார் மகனின் மனம் உடைகிறது! கண்களில் கண்ணீர் வடிகிறது, இறுதியாக படிப்பில் கவனம் சிதறுகிறது!
நோட்டு புத்தகம் வாங்காத நிலையில் மகள் தயங்கி தயங்கி பள்ளிக்கு செல்கிறாள் ஆசிரியையோ நோட்டு வாங்கிவரவில்லை என்று காரணம் கூறி வகுப்பறையில் ஏளனம் செய்து வெளியே நிற்க வைக்கிறார். மகளின் கண்களில் கண்ணீர் வடிகிறது, இறுதியாக படிப்பில் கவனம் சிதறுகிறது!
நெம்பர் 2 – குடும்பத்தில் வறுமை
அல்லாஹ்வின் கருணையினால் நம் குடும்பங்களில் தகப்பன்கள் அதிகம்பேர் சாராயம் குடிப்பதில்லை எனினும் வறுமானம் குறைவாக உள்ளதால் குடும்பத்தை நிர்வகிப்பதில் தடுமாறு கிறார்கள். இதோ மதந்தோறும் வகைவகையான போராட்டங்கள்
o முதல் வாரம் வீட்டு வாடகை கட்ட போராட்டம்
o இரண்டாம் வாரம் மின்சார கட்டணம் கட்ட போராட்டம்
o மூன்றாம் வாரம் கியஸ், சீமெண்ணை வாங்க போராட்டம்
o நான்காவது வாரம் அரிசி வாங்க போராட்டம்
மேற்கண்ட போராட்டங்களும், பிரச்சினைகளும் நம் சமுதாய குடும்பங்களில் விஷ்வரூபம் எடுக்கிறது இதற்கு நடுவில் சிக்கித்தவிப்பது நம் தீன்குல மாணவ மாணவிகளே!
மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் குடும்ப வறுமையைப் பற்றி சிந்திப்பதில்லை ஆனால் நம் தீன்குல செல்வங்களோ ஏன் என் அப்பா அழுகிறார், ஏன் என் அம்மா கண்ணை கசக்குகிறாள் என்று மனதிற்குள் சிந்திக்கிறது காரணம் இது சிந்திக்கும் சமுதாயமல்லவா?
நெம்பர் 3 – பசியும் பட்டினியும்
நம் தீன்குல மாணவர்கள் மதிய உணவுக்கு ஆசை ஆசையாக உணவருந்த வீட்டிற்கு சென்றால் அப்போதுதான் அடுப் பங்கறையில் அரிசி உலை வைக்கப்படுகிறது தாயாரோ சமயல் எண்ணை தீர்ந்துவிட்டது எனவே பழைய சாதத்தை சாப்பிடு என்று கண்ணீரோடு கூறிவிடுகிறாள் நம் மாணவனோ வகுப்பறையில் புத்தகத்தை திறந்தால் தாயாரின் முகம்தான் தெரிகிறது!
நம் சமுதாய மாணவியோ மதிய உணவுக்கு சாப்பாட்டை டிபன் பாக்ஸ்லி கட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறாள் ஆனால் மதிய உணவு இடைவேளையின் போது ஒரு ஓரத்தில் தனிமையில் அமர்ந்து வேகமாக சாப்பிட்டு முடிக்கிறாள் காரணம் இவள் கொண்டுவந்துள்ளதோ பொன்னி அரிசி அல்ல மாறாக உலுத்துப்போன ரேசன் அரிசி இதனால் நாக்கில் ருசி இருப்பதில்லை படிக்கும்போது வாய் நமநமக்கிறது!
நெம்பர் 3 – வீட்டில் படிப்பதில்லை டியுசன் கூட செல்வதில்லை
நம் தீன்குல மாணவ மாணவிகளில் வீட்டில் படிக்கலாம் என்றால் பெற்றோருக்கு கல்வியறிவு குறைவு பாடங்களை அவர்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை எனவே தாங்களாகவே படித்து பாடங்களை புரிந்துக்கொள்கிறார்கள் மேலும் பெற்றோர்களிடம் வருமானம் குறைவாக உள்ளதால் நிறைய தீன்குல மாணவ மாணவிகள் டியுசன் கூட செல்வதில்லை இதற்கு கூட மாதம் ரூ.500 செலவு செய்ய வேண்டுமே! தீன்குல மாணவர்களோ இதை சாக்காக பயன்படுத்தி கோலி விளையாடுவது, நொன்டியடிப்பது, வீதி வீதியாக ஓடி சுற்றித்திரித்திரிவது ஆகிய பொழுது போக்குகளில் மாலை நேரத்தை கழித்துவிடுகிறார்கள்.
தீன்குல மாணக்கர்கள் நன்றாக படிக்க இதோ வழிகள்
தீன்குல மாணவ மாணவிகள் நன்றாக படித்து முன்னேற பெற்றோர்களின் பொறுப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது அதற்கு அடுத்தபடியாக நம் சமுதாயத்தில் வசதிபடைத்தவர்களின் பொறுப்பும் முக்கியமாக திகழ்கிறது. ஆம் இவர்கள் ஊதாரித்தனமான செலவுகளை நிறுத்திக்கொண்டால் நம் தீன்குழ ஏழை மகன்களும், மகள்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பெற்றோர் திருந்த வழிகள்
தர்காஹ்வுக்கு போகாதீர்கள்! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்
o வருடா வருடம் குடும்பத்துடன் நாகூர், ஏர்வாடி முத்துப்பேட்டை தர்காஹ்களுக்கு சென்று ஊதாரித்தனமாக ரூ.6000 செலவு செய்கிறார்கள் இதை விட்டுவிட்டு அந்த பணத்தை தன் மகன் மற்றும் மகளுடைய ஒருவருட படிப்பு செலவுக்கு ஒதுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
o இந்த மாதம் இந்த ஃபாத்திஹா, அந்த மாதம் அந்த ஃபாத்திஹா என்று மாதந்தோறும் நடத்தும் ஃபாத்திஹா என்ற பூஜைக்கு ஆகும் செலவு மாதச் செலவு ரூ.300 இதை நிறுத்திவிட்டடு மேற்படி பணத்தை தன் மகளுடைய டியுசனுக்கு செலவிட இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
o தந்தை பீடி குடிப்பதற்கு மாதம் ரூ.400 செலவு செய்கிறார் இதை நிறுத்திக்கொண்டு தன் மகனுடைய டியுசன் செலவுக்கு என்று ஒதுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
o ஏழ்மை நிலையிலும் வருடத்தில் ஒரு முறை கடன்வாங்கியாவது காதர்வலி உருஸ் படையல் என்று ஊதாரித்தனமாக ரூ.10,000 செலவு செய்கிறார்கள் இதை விட்டுவிட்டு அந்த பணத்தில் நல்ல அரிசியை வாங்கி தன் பிள்ளைகளுக்கு கொடுக்க இயலாதா? ஏன் பெற்றோர் இதை சிந்திப்பதில்லை!
நம் சமுதாயத்தில் வசதிபடைத்தவர்களும் திருந்த வழிகள்
o நம் சமுதாத்தில் உள்ள ஒவ்வொரு வசதிபடைத்த இளைஞனும் அணியும் ஜீன்ஸ் பேண்டின் விலை ரூ.2000 இதை தன் பகுதியில் வாழும் ஏழை தீன்குல மாணவனின் படிப்பு செலவுக்கு ஒதுக்கி ஜகாத் கொடுக்க இயலாதா? சாதாரண பேண்ட் அணிந்தால் சமுதாயம் ஒதுக்கிவிடுமா அல்லது அல்லாஹ் கோபித்துக்கொள்வானா?
o நம் சமுதாத்தில் உள்ள ஒவ்வொரு வசதி படைத்த கண்ணிகள் அணியும் வேலைப்பாடு மிகக் சவுதி ஹிஜாப்–ன் விலை ரூ.2000 இதை தன் பகுதியில் வாழும் ஏழை தீன்குல மாணவியின் படிப்பு செலவுக்கு ஒதுக்கி ஜகாத் கொடுக்க இயலாதா? விலை குறைந்த வேலைப்பாடு இல்லாத ஹிஜாப் அணிந்தால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா?
o ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவன் தன் மனைவிக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வாங்கித்தரும் ஹீல்ஸ் சாண்டல் (செருப்பு)ன் விலை ரூ.400. இதை தன் பகுதியில் வாழும் ஏழை மாணவனின் இரண்டு மாத டியுசன் செலவுக்கு கொடுத்தால் தங்கள் மதிப்பு குறைந்தவிடுமா? ரூ.50க்கு செறுப்பு அணிந்தால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா?
இஸ்லாத்தை ஏற்று தங்கள் சொத்து சுகங்களை துறந்து ஹிஜரத் செய்த முகம் அறியாத புதிய மார்க்க தோழர்களுக்காக எத்தனையோ சஹாபா பெருமக்கள் தங்கள் சொத்துக்களில் சரிபாதியை கொடுத்து அவர்களும் முன்னேற வழிவகை செய்துள்ளார்கள் இப்படிப்பட்ட தியாகச் செம்மல்கள் வாழந்த நம் இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு ஒரு செருப்புக்கு ஆகும் செலவைக்கூட வசதிபடைத்த நம் சமுதாய சகோதர, சகோதரிகள் நம் சமுதாயத்தின் ஏழை மாணவ மாணவிகளுக்கு செலவழிக்க முற்படாதது வெட்கக்கேடாக உள்ளது! இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கையை வாழக்கூடிய நாம் எளிதாக சுவனம் சென்றுவிட இயலுமா? சிந்தியுங்கள்!
என் மகனும் மகளும் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்குத் தேவையானது ஃபாத்திஹாவும், சந்தனக்கூடமும், தர்காஹ்வும், காதர்வலி உருஸும்தான் என்று வாழந்து வரும் வசதியற்ற பெற்றோர் தாங்கள் இணைவைத்துக்கொண்டு தங்கள் குழந்தைகளை துன்புறுத்திக்கொள்கிறார்களே இதை அல்லாஹ் மன்னிப்பானா?
இன்று நம் சமுதாயம் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டு உள்ளதற்கு காரணம் நாம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஒழுங்காக படிக்காததுதான் இது நம் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மீது அல்லாஹ் விதித்த சாபமோ என்று கூட சில நேரங்களில் சிந்திக்க தோன்றுகிறது ஏனெனில் அந்த அளவுக்கு நம் சமுதாயத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தரிகெட்டு ஒரு கேவளமான வாழக்கையை வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலை மாற வேண்டும் அதற்கு மாணவ மாணவிகளுக்காக நாம் தாவா பணியை அதிகமதிகம் நடத்த வேண்டும் அப்போதுதான் இந்த சமுதாயம் திருந்த மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்