கேள்வி: சில ஊர்களில் குர்பானி கொடுக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பங்குவைக்கின்றார்களே! இதற்கு அனுமதி உண்டா?
பதில்: அல்லாஹ்வும் அவனது தூதரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நமக்குக் கற்றுத் தரவில்லை.
கேள்வி: பள்ளிவாசல், மத்ரஸா போன்றவற்றை நிர்வகிப்பவர் எப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? மதுக்கடை வைத்திருப்பவர்கள், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் போன்றவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கலாமா?
பதில்: பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.
“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டும்.” (அல்குர்ஆன் 9:18)
இந்த ஒரு வசனம் உங்கள் கேள்வி அனைத்துக்கும் போதுமான பதிலாகும்.
கேள்வி: ஹஜ்ஜுக்குச் செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிலர் ஸலாம் சொல்லி அனுப்புகிறார்களே! ஸஹாபாக்கள் அப்படிச் சொல்லிவிட்டனரா?
பதில்: ஹஜ்ஜுக்குச் செல்பரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.
கேள்வி: இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுவார்கள் என்று ஒரு ஆலிம் பயான் செய்தார்?
பதில்: பச்சைப் பொய்! ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எவர் மூன்று நாட்களுக்குக் குறைவாக, குர்ஆனை ஓதி முடிக்கின்றாரோ அவர் குர்ஆனைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளனர். இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்ளாதவர் என்று நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
கேள்வி: கஃபாவை நோக்கி நாம் காலை நீட்டுவதில்லை. “நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசைக்கு மட்டும்தான் மரியாதை செய்கிறீர்கள்! அங்கு மட்டும் தான் இறைவன் இருக்கின்றானா?” என்று இந்து நண்பர் ஒருவர் கேட்கிறார். அதற்கு என்ன சொல்வது?
பதில்: கஃபாவை நோக்கி காலை நீட்டக் கூடாது என்று எந்த தடையும் கிடையாது. நீங்கள் விரும்பினால் கஃபாவை நோக்கிக் காலை நீட்டலாம்.
கேள்வி: ஒரு பெண் இறந்த பின் அவருக்காக அவரது மகள் குர்ஆன் ஓதி வருகிறார். அந்தப் பெண் கனவில் தோன்றி “குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விடாதே! அதனால் எனக்கு கம்பளம் விரித்து, கெளரவம் அளிக்கப்படுகிறது” என்று கூறியதாக சொல்லப்படுகின்றதே! அது உண்மையா!
பதில்: கனவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கனவுகள் மார்க்கத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி: சிராத்துல் முஸ்தஹீம் என்ற பாலம் பற்றி, கண் முடியை ஏழாகப் பிளந்த அளவு மெல்லியதாக இருக்கும் என்றும் அதன் கீழ் நரகம் இருக்கும் என்றும் சொல்கிறார்களே! அது உண்மையா?
பதில்: உங்களில் எவரும் அந்த நரகத்தைக் கடந்தே ஆக வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கருத்து. (மர்யம் 71) இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலத்தைக் கடந்து செல்வது என்று விளக்கம் தந்துள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
எவராக இருந்தாலும் “சிராத்” (பாலத்)தைக் கடந்தாக வேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸிலிருந்து தேளிவாகின்றது. ‘சிராதுல் முஸ்தகீம்’ என்று பெயர் அதற்கு இருப்பதாக நாம் அறிந்தவரை காண முடியவில்லை. முடியை விடவும் ெமல்லியதாக இருக்கும் என்பதற்கும் எவ்வித சஹீஹான ஹதீஸையும் நாம் காணவில்லை.
கேள்வி: பாங்கு சொல்லும் போது வீட்டின் முன் வாயிலைத் திறந்து பின்வாயிலை அடைகின்றனர். முன்வாயில் வழியாக ரஹ்மத்துடைய மலக்குகள் வருவார்களாம். பின்வாயில் திறந்திருந்தால் அந்த விழியே அவர்கள் சென்று விடுவார்களாம். அதற்காகத் தான் இந்த முன்னெச்சரிக்கை என்றும் கூறுகின்றனர். சரியா?
பதில்: இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் கிடையாது. மலக்குகள் வர, போக இந்த வாசல்கள் எதுவும் தேவை இல்லை. கதவை இறுக்கமாக அடைத்து விட்டால் ‘மலக்குல் மவ்த்’ வரமாட்டார் என்று சொல்லாத வரை சரிதான்.
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களா?
பதில்: அபூபக்ருல் கதீப், அபுல் காசிம் சுஹைலீ, ஆபூ அப்துல்லாஹ் குர்துபீ ஆகியோர் “திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர் உயிர் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினர்” என்பதாக அறிவித்துள்ளனர்.
அதன் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற பலர் ஹதீஸ்கலை வல்லுனர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் ஹதீஸ்கலை வல்லுனர்களில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதை நிலை நிறுத்த முயன்றுள்ளார்கள்.
ஸஸீஹான ஹதீஸ்களைப் பார்ப்போம். “ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கின்றார்?” என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகில் இருப்பதாக கூறினார்கள். அவர் திரும்பிச் செல்லும்போது அவரை அழைத்து ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகில்தான் உள்ளனர்’ என்று கூறினாாகள். (முஸ்லிம்)
“என் தாயின் கப்ரை ஜியாரத் செய்ய அல்லாஹ்விடம் அனுமதி வேண்டினேன். அல்லாஹ் அனுமதி அளித்தான். என் தாய்க்காப் பாவமன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். என் இறைவன் மறுத்து விட்டான்” என்பதும் நபிமொழி. (முஸ்லிம்) இவற்றிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களல்லர் என்பதைத் தெளிவாகப் புரியலாம்.
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்களை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?
பதில்: எல்லா அரபிகளும் பெண்களை உயிருடன் புதைத்துக் கொண்டிருந்ததில்லை. அப்படி இருந்தால் பெண்களே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் அவ்வாறு செய்துள்ளனர். அவர்களிடம் எத்தகைய சமுதாயக் கொடுமை நடந்ததோ தெரியவில்லை. “என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசரிக்கப்படுவாள்” (அல்குர்ஆன் 81:8) என்ற வசனத்திலிருந்து எவ்விதக் காரணமின்றி அறியாமையின் காரணமாகவே அவர்கள் செய்திருக்கக் கூடும் என்று அறிய முடிகின்றது.
பல்வேறு சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தாங்கள் அறியாமைக் காலத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் புதைத்து விட்டதாகச் சொல்லி வருந்தி இருக்கின்றனர். அவர்களெல்லாம் அறியாமையைத் தான் காரணமாகக் காட்டியுள்ளனர்.
பொதுவாகவே மனித இயல்பை உற்று நோக்கினால், பெரும்பாலும் ஆண் குழந்தையை விரும்பும் தன்மையிலும், பெண் குழந்தையை வெறுக்கும் தன்மையிலும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
இதற்கு அறிவு பூர்வமாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அவ்வாறே அன்றைய அரபிகளில் சிலர் செய்து வந்ததற்கும் அறிவு பூர்வமான காரணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது. என்ன காரணம் கூறப்பட்டாலும், அது மனிதர்களால் செய்யப்படும் அனுமானமாகத்தான் இருக்குமே தவிர சரியானதென்று உறுதி சொல்ல முடியாது.
கேள்வி: வீடுகளில் புறா, முயல் போன்றவை வளர்க்கலாமா? அதனால் முஸீபத் ஏற்படுமாமே!
பதில்: பாங்கோசை கேட்காத இடத்தில் ஒருவன் தனித்துத் தொழுதாலும் பாங்கு சொல்வதே சிறப்பு. “ஒரு மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர் தொழுகைக்காக பாங்கு சொல்லி பின்னர் தொழுவதைப் பற்றி அல்லாஹ் மலக்குளிடம் புகழ்ந்துரைக்கிறான்” என்று “நஸயீ” யில் ஹதீஸ் உள்ளது. அதுபோல் இகாமத் சொல்வதற்கும் ஹதீஸ் உள்ளது. உங்களின் கடைசி கேள்விக்குத் தனியாக ஒரு கட்டுரை விரைவில் வெளிவரும்.
கேள்வி: “தப்பத் யதா” என்ற சூராவை அடிக்கடி ஓதக் கூடாது என்கிறார்களே! ஏன்?
பதில்: ஏனோ தெரியவில்லை. பரவலாக அப்படிப் பேசிக் கொள்கின்றனர். நாம் அறிந்தவரை அப்படி ஒரு ஹதீஸைக் காணவில்லை. குர்ஆனில் தனக்குத் தெரிந்ததை ஓதும்படிப் பொதுவாகத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.
கேள்வி: பாங்கு சொல்லும் போது நாம் மல ஜலம் கழித்துக் கொண்டோ, பெருந்தொடக்காகவோ, மாதவிலக்காகவோ இருந்தால் பாங்கைக் கேட்கும் போது ஓத வேண்டிய திக்ருகளைச் செய்யலாமா? இந்த நேரங்களில் ஸலாம் கூறலாமா?
பதில்: மல ஜலம் கழிக்கும் போது எந்த திக்ருகளையும் சொல்லக் கூடாது. இரண்டு நபர்கள் மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொண்டிருப்பதையே அல்லாஹ் வெறுக்கிறான் என்பது நபி மொழி. (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா) உலகப் பேச்சுக்களையே பேசக்கூடாது என்னும் போது திக்ருகள் செய்யலாகாது என்பதை எவரும் உணரலாம். மேலும் மலஜலம் கழிக்கும்போது ஸலாம் சொல்லவும் கூடாது.
யாரேனும் ஸலாம் சொன்னால் அந்த நேரத்தில் அதற்குப் பதில் சொல்லவும் கூடாது. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்குப் பதில் கூறவில்லை” என்ற ஹதீஸ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு ‘நஸயீ’யில் இடம் பெற்றுள்ளது.
பெருந்தொடக்காகவோ, மாதவிடாயாகவோ, இருப்பவர் தொழுவது நோன்பு நோற்பது, தவாபு செய்வது, குர்ஆன் ஒதுவதைத் தவிர மற்ற திக்ருகள் செய்யலாம்; ஸலாம் கூறலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவைகளுக்குத்தான் தடை விதித்துள்ளனர்.
கேள்வி: ரமலான் மாதத்தில் முழுகுர்ஆனையும் ஓதிக் கேட்டுத் தான் ஆக வேண்டுமா?
27-க்குப் பிறகு உள்ள மூன்று நாட்களில் ‘சபீனா’ என்ற பெயரில் முழு குர்ஆனையும் தராவீஹில் ஓதுகின்றனரே! இதற்கு ஆதாரம் உண்டா?
பெருநாள் தொழுகை முடிந்ததும் கபரஸ்தானுக்குச் சென்று பாத்திஹா ஓத வேண்டும் என்கின்றனர். இதற்கும் ஆதாரம் உண்டா? மூன்று கேள்விகளுக்கும், விரிவாக விளக்கமாகப் பதில் தரும்படி கேட்கிறேன்.
பதில்: ஆதாரம் இல்லாதவைகளுக்கு விரிவாக எப்படிப் பதில் தர முடியும்? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கும் எவ்வித ஆதாரமும் நாம் காணவில்லை. யார் இப்படிச் செய்கிறார்களோ அவர்களிடம் தான் நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டும்.
கேள்வி: இறந்து போனவர்களை அடக்கம் செய்துவிட்டு இஷாவிலிருந்து சுபுஹ் வரை மூன்று நாட்கள் குர்ஆன் ஓதுகிறார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள் காலத்தில் இப்படி நடந்துள்ளதா?
பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலோ, ஸஹாபாக்கள் காலத்திலோ இப்படி நடக்கவில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட பழக்கமே இது.
கேள்வி: தாய், தந்தை இவர்களின் கால்களில் விழலாமா? ஆதாரத்துடன் விளக்கம் தரவும்?
பதில்: கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ, அவர்களின் அன்பு தோழர்களுக்கோ அவர்களின் பிள்ளைகள் இவ்வாறு செய்ததில்லை.“தன் சகோதரனையோ, நண்பனையோ , சந்திக்கும் போது அவனுக்காகக் குனிந்து மரியாதை செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது,”கூடாது” என்று கூறினார். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி
குனிந்து செய்யும் மரியாதையைக் கூட ஒரு மனிதனுக்குச் செய்யக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளனர் என்னும் போது நீங்கள் கேட்டது நிச்சயமாகக் கூடாது!
கேள்வி: ‘முபஸ்மிலன், முஹம்திலன், முஸல்லியன், முஸல்லிமா’ என்று சில திருமணப் பத்திரிகைகளில் காணப்படுகின்றதே! அதன் பொருள் என்ன?
பதில்: பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், ஸலவாத் சொல்லித் துவக்குகிறோம் என்று பொருள்.
source: அந்நஜாத்