இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் திருமணம்
இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள். பின்பு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள்.
பின்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள். இப்பொழுது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு..! அதற்குக் காரணமும் இருந்தது.
o முதலாவதாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே..!
o இரண்டாவதாக, நானோ வயதான பெண்.
o மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே..! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மன உலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள். இன்னும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதியளித்தார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள், இறைத்தூதர் அவர்களுடைய குடும்பத்தார்களுடன் இணைவதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் திருமணம் நடந்தது.
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சிறப்புக்கள்அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பின்படி, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்.
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.
நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்,
நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.
அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப் ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)இன்னும் சூரா அத் தவ்பா வின் பல வசனங்கள் அன்னையவர்களின் இல்லத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்ட காரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான். (9:102)
இன்னும் இந்த வசனமும், ”(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்😉 பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது – அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் – ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.” (9:118)
மேலே உள்ள இறைவசனங்கள், கஅப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஹிலால் பின் உமைய்யா ரளியல்லாஹு அன்ஹு, மராரா பின் அர்ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர்கள், இறைவனிடம் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டதன் பின்பு, அதன் பலனாக அவர்களை மன்னித்து மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான். மேலே உள்ள மூன்று தோழர்களும், எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, இறைவன் இந்த மூன்று பேர்களையும் மன்னித்துத் தான் மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான், மேற்கண்ட வசனம் அருள் செய்யப்பட்டது. இரவின் இறுதிப் பகுதியில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த மூன்று நபர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினார்கள்.
இதனைக் கேட்ட அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே..! இந்த நற்செய்தியை அவர்களிடம் தெரிவிக்கச் சொல்வோமா? என்று கேட்டார்கள். இந்த அகால நேரத்தில் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின்பு யாரிடமாவது சொல்லி அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று கூறினார்கள். இந்த செய்தியைக் கேட்ட அந்த மூன்று பேரும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இன்னும் அனைத்து நபித்தோழர்களும் சந்தோஷமடைந்தார்கள்.
இன்னும் அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.
சல்மான் அல் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி ரளியல்லாஹு அன்ஹு என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.
அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.
இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச்சிறப்புப் பெற்ற நபித்தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத்தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள்.
நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித்தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள்:
மொழித்துறையிலும் அன்னையவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவருக்கு நிகராக இருந்தவர்கள் மிகச் சிலரே. அவர்கள் பேசும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே பேசுவார்கள்,
அவர்களது கருத்துக்கள் தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும். இன்னும் அவர்களது எழுத்துக்களும், நல்ல மொழிநடையைக் கொண்டதாக இருக்கும்.
அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள்.
யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் மற்ற தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
(… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)
source: http://www.ottrumai.net/History/7-UmmuSalama[RAL].htm