உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரளியல்லாஹுஅன்ஹா
அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.
அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி ரளியல்லாஹுஅன்ஹு என்பவராவார். இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார்.
இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.
உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். இன்னும் இவரது தந்தையின் பெயர் உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்பதாகும். இவரது பொதுநலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்டவர்களாவார்கள். இவருடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, அவர்களது உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் பொறுப்பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.
தமது அண்டை வீட்டுக்காரர்களுடன் உணர்வுப்பூர்வமாக மிகவும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார்கள். உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்களின் கோத்திரம் எவ்வாறு உபகாரத்திலும், பிறருக்கும் உதவுவதிலும் இன்பங்கண்டதோ, அதே போலவே குணங்கள் அமையப் பெற்றவரும், மக்காவில் அன்றைய தினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்தவராக அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இப்பொழுது மக்சூம் குடும்பங்களில் அன்பும், விருந்தோம்பலும் இன்னும் அனைத்து வித சந்தோஷங்களும் கரை புரண்டோட ஆரம்பித்தன.
ஆனால், இந்த சந்தோஷங்களும், குதூகுலங்களும் அபூ ஸலமா தம்பதியினர் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.
முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களை, மற்ற மதத்தவர்களுடன் அணுசரணையாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது.
ஒருமுறை இறைத்தூதர்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களையறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (ஸுஜூது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப்பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித்தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.
முஸ்லிம்களுக்கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லையாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்வதை நிறுத்தி விட்டு, மதீனாவிற்குச் செல்லுமாறு பணித்தார்கள். அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள். இன்னும் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) வருகின்ற முஸ்லிம்களை தங்களது சொந்த சகோதரர்கள் போல கவனித்துக் கொள்வதாகவும் அன்ஸார்கள் (மதீனத்து முஸ்லிம்கள்) வாக்குறுதி அளித்தார்கள்.
அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு குடும்பத்தினரின் ஹிஜ்ரத்அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களது குடும்பத்தார் ஓட்டகத்தை மறித்து, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு,
அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ.. அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.
நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்..! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.
உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப்பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்கள் எங்களது இரத்தமும், சதையும் ஆவார்கள், எனவே அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.
சற்று முன் மதீனாவை நோக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருந்த ஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது, தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார், உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா ரளியல்லாஹுஅன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.
ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது முற்றிலும் பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா..! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா ரளியல்லாஹுஅன்ஹா அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘கிளிக்’ செய்யவும்