ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..! உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார்.
அந்த மனிதர் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் உறவினர்களிடம் போய், இந்த பெண்ணை ஏன் நீங்கள் இப்படி சித்தரவதை செய்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பெண்ணை இப்படி குழந்தைகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பது முறையா? என்று அவர்களது தவறை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னதன் பின்பு, அவர்கள் தங்களது தவறை உணர்ந்து, குழந்தைகளை திருப்பிக் கொண்டு வந்து உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். அத்துடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி தந்தார்கள்.
ஆனால் எப்படி அவரால் தன்னந்தனியாக மதீனாவுக்குச் செல்ல முடியும்? அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னந்தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். தன்ஈம் என்ற இடத்திற்கு அருகே செல்லும் போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா அவர்களை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சந்தித்தார்கள்.
இந்த உதுமான் பின் தல்ஹா அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பார்த்த உதுமான் பின் தல்ஹா அவர்கள், உம்மு ஸலமா அவர்களே..! தன்னந்தனியாக நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். உம்முடன் வருவதற்கு உமது குடும்பத்தில் எவருமா கிடைக்கவில்லை? என்று வினா எழுப்பிய அவருக்கு, நான் எனது இறைவனை முழுமையாகச் சார்ந்து இந்தப் பயணத்தைத் துவங்கினேன், அவனே எனது பாதுகாவலன், அவனே எதிரிகளிடமிருந்து என்னைச் சூழ்ந்து காக்கிறவன், அவனால் மட்டுமே என்னைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.
உதுமான் பின் தல்ஹா அவர்கள் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு துணைக்காக மதீனா வரை வரச் சம்மதித்தவராக, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உதுமான் பின் தல்ஹா அவர்களது இந்த உதவியைப் பின்னாளில் இவ்வாறு நினைவு கூரக் கூடியவராக இருந்தார். அந்த அறியாமைக்காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா! இவரைப் போல நல்ல எண்ணம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவர் எனக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும், ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு, அவர் எங்களை விட்டு தூரப் போய் விடுவார். அதன் மூலம் எனக்கு அவர் சங்கோஜமும், சங்கடமும் ஏற்படுவதிலிருந்து என்னைப் பாதுகாத்தார். பின்பு பயணத்தைத் துவங்கும் போது, நானும் எனது பிள்ளைகளும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரைக்கும் தூர நின்று கொண்டு விட்டு, நாங்கள் ஏறி முடித்ததும், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவார்.
சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப் பகுதியில் அமைந்த இடமான கூபாவிற்கு உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்கள் அந்த இடத்தில் தான் குடியிருந்தார்கள். எனவே, அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கூட இங்கு தான் இருக்க வேண்டும், நீங்கள் அவருடன் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் நான் திரும்பிப் போகின்றேன் என்று கூறி உதுமான் பின் தல்ஹா அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.உதுமான் பின் தல்ஹா அவர்கள் செய்த, இந்த காலம் அறிந்து செய்த உதவியானது மறக்கக் கூடியதல்ல, அவரது நற்பண்பு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறுக் கூடியவர்களாக உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தார்கள்.
இறுதியாக, உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள், அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார்.
உஹதுப்; போரில் அபூ உஸமா ஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்து அதிக ரணத்தைத் தந்து கொண்டிருந்தது.
உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களை எதிராகப் போர் செய்வதற்குத் தயாராகும்படியும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தான், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்தார்கள். இந்தப் படையில் மிகப் பெரும் படைத்தளபதிகளாக விளங்கிய அபூ உபைதா அல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற மிகச் சிறப்புப் பெற்ற தளபதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்.அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஸ்லாமியக் கொடியைக் கொடுத்து விட்டு, போர் உத்திகளை எவ்வாறு வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.
பனூ அஸத் குலத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதியின் எல்லைக் கோட்டுக்கருகே நமது படைகளை நிறுத்துங்கள். அவர்கள் வந்து தாக்குதவற்கு முன்பாக நீங்கள் அவர்களை தாக்க ஆரம்பித்து விடுங்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து விடாதீர்கள் என்று கட்டளையிட்டார்கள்.
இப்பொழுது, அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப் படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். உஹதுப் போரின் வெற்றிக்குப் பின், நடந்த இப்போரில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஏனெனில் சுற்றி உள்ள யூத மற்றும் எதிரிகளுக்கு இதன் மூலம் சிறந்த பாடத்தையும், முஸ்லிம்களைப் பற்றிய அச்ச உணர்வையும் ஊட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருந்த காரணத்தால், தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து, வெற்றி அல்லது வீர மரணம் என்ற உயர்ந்த நோக்கத்தில் போரை, வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற முஸ்லிம்கள், இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.இந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மறந்து தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்காகவும், இறைத்திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலைகுலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள்.
இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்த இடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அதிகமான கனீமத் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மதீனாவை விட்டுக் கிளம்பி 29 நாட்கள் கழித்து மீண்டும் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 8 ம் தேதியன்று முஸ்லிம்கள் மீண்டும் மதீனாவிற்குள் நுழைந்தார்கள். அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு மரணம்
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
இன்னும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டார்கள்.நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் :இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘கிளிக்’ செய்யவும்