‘அவரை’ புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
“அவரை’ ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?” இது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பல பெண்களின் மனதிலுள்ள கேள்வி.எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல:
o சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவதில்லை. என்னை விட அப்படி என்ன முக்கிய பிரச்னை… என் மீது பாசமே இல்லையா? இருந்திருந்தால், நான் வருவதற்கு முன்பாகவே இங்கு நிற்கணுமே?
o புடவை வாங்கக் கடைக்குப் போகணும்ன்னு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச நேரம் தள்ளிப் போடக் கூடாதா?
o திருமணத்திற்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். என் பேச்சை அவர் ஏன் மதிப்பதே இல்லை?
o எனக்குப் பிடிச்ச டிரெஸ் போடுவதற்கு இவர் ஏன் தடுக்க வேண்டும்? இவர் மாதிரி எண்ணெய் வழிந்த தலையும், பழங்கால மாடலுமாய் என்னை இருக்கச் சொன்னால் என்னால் முடியுமா? * மத்தவங்க இருக்கும்போது என் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவர் போல் ஏன் “ஆக்ட்’ கொடுக்க வேண்டும்?
o இப்போதே சேமிப்புக்கு ஏதாவது யோசிப்போம் என்று சொன்னால் காதில் வாங்கவே மாட்டேங்கறாரே? என்ன மனிதர் இவர்? இவருடன் எதிர்காலத்தில் எப்படிக் குடித்தனம் நடத்துவது?
o அவருடைய காலில் ஒரே வெடிப்பா கிடக்கு. “பார்லர்’ போய் சரி செய்துக்கச் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்.
o ஹூம்… ரசனையே இல்லாத மனிதரைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டந்தாம்ப்பா!
o திருமணம் முடித்த கையோடு, குழந்தைகளைப் பெத்துப் போடச் சொல்லி வீட்டில் வற்புறுத்துவாங்களே? இவர் எனக்கு எதிரா கருத்து வச்சிருந்தா அவரை எப்படி சமாளிக்கிறது?
இதுபோன்ற பலவிதமாய் யோசிக்கும் நீங்கள் அடிப்படையாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளுமே உங்களைச் சுற்றியே எழுப்பப்படுபவை. அவரைச் சுற்றியும், அவரது வீட்டைச் சுற்றியும் நீங்கள் யோசிக்கவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், சுற்றுச்சூழலோடு ஒத்து வாழ்ந்தாலே மாபெரும் பிரச்னைகளைத் தவிர்த்து, சாதாரணமான, சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.
“ஊரோடு ஒத்து வாழ்’ என்று பெரியோர் சொல்லியிருப்பதை “ஊர்’ என்று அர்த்தம் கொள்ளாமல், சுற்றுச்சூழலோடு ஒப்பிட்டுக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் வாழப் போவது வேறொரு வீட்டில். அந்த வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று சொல்வதை விட, உங்களின் திறமைகளை அவர்களிடம் காட்டுவதை அவர்கள் வரவேற்கின்றனர் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக, உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை எந்த விதத்திலும் மாற்ற முயல வேண்டாம். நீங்கள் மாற வேண்டாம்; உங்கள் கணவரையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
சில அடிப்படைத் தேவைகளுக்கான உங்கள் கோரிக்கைகளை வெளிப்படையாகச் சொன்னால், அதை யாருமே நிறைவேற்றித் தருவர். உங்களையே உங்கள் “அவர்’ சுற்றிச் சுற்றி வந்தால், அவருடைய அத்தியாவசிய வேலைகள் என்னாவது? காதல் முக்கியம் தான்; பாசம் முக்கியம் தான். ஆனால், அவைகளே மற்ற அத்தியாவசிய கடமைகளையும், வேலைகளையும் ஒதுக்கித் தள்ளச் செய்து விட்டால், அதனால் ஏற்படும் இழப்பு, உங்கள் காதலைக் கொண்டாட முடியாமல் செய்து விடும்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்:
o சொன்ன நேரத்தில் வராமல் இருந்ததற்கு நீங்கள் சந்தேகப்படும்படியாக எந்தக் காரணமும் இருந்து விடாது. எனவே முதலில் சந்தேகத்தை விட்டுத் தள்ளுங்கள். அவர் என்ன காரணம் சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
o திருமணத்திற்கு ஆடம்பரச் செலவு வேண்டாம் தான். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பளபள பட்டுப்புடவையும், நகையுமாக வாங்கப் போவதில்லையா?
o கண்ணியமான உடையை நீங்கள் போட்டுக் கொண்டால் அவர் மறுப்பா சொல்லப் போகிறார்? உரிமை கொண்டாடுவது இந்த விஷயத்தில் சரியாக இருக்காது. ஏனெனில், மற்றவர்களின் பார்வை எப்படிப்பட்டது என்பது உங்கள் வயதுக்கு உங்களால் புரிந்து கொள்ள முடியாது. “என் உடம்பு, நான் போட்டுக் கொள்கிறேன்…’ என்று நீங்கள் சொன்னால், மற்ற ஆண்கள், “சரி…. என் கண்கள்… நான் பார்க்கிறேன்; அதைத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை…’ என்பர். எது நல்லது? யோசிங்க.
o வெளியிடங்களிலும் உங்கள் கையோடு, கை கோர்த்து நடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லதில்லையே? மற்றவர்கள் எதிரில் நீங்கள் பிரியமான ஜோடிகள் என்று காட்டிக் கொள்ளும் ஆசை முக்கியமா? கண்ணியம் முக்கியமா?
o சேமிப்பு அவசியம் தான். அவருடைய தங்கை திருமணம், அக்கா மகப்பேறு என்று செலவுகள் வரும்போது அவை தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் தடை போட்டு “வில்லத்தனமாய்’ நடந்து கொள்ளாதீர்கள்.
o உங்கள் ஆசைநாயகன் தானே அவர்? அவருக்கு நீங்கள் ஏன் வெடிப்பை நீக்கும் களிம்பு வாங்கித் தரக் கூடாது? என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டால் வெடிப்பை குணப்படுத்தலாம் என்று எடுத்துச் சொல்லுங்கள். இதற்கென செலவு செய்யும் வசதி இருந்தால், அவர் “பார்லர்’ செல்லாமல் இருப்பாரா? யோசிங்க தோழியே!
o இயற்கை தான் அழகு. எனினும், உங்கள் ஆசை வீண் போகாது. “பெட்டிஷனை’ இதமாய், பதமாய் போட்டு வைங்க. நேரம் வரும்போது “ஓகே’ யும் கிடைக்கும்.
o இவ்விஷயத்தில் இருவரும் மிகவும் கவனமாய் முடிவெடுக்க வேண்டும். உங்கள் வயது, அவர் வயது, குழந்தை பிறக்கும் ஆண்டிலிருந்து குழந்தைக்குத் திருமணம் செய்யப் போவது வரை அழகாய் யோசித்து வைத்தால், நீங்கள் மகப்பேறுக்குத் தயாராகி விடுவீர்களா, இல்லையா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். குழந்தைக்குத் திருமணம் செய்த பிறகு, அதனுடைய எதிர்காலத் தேவைக்கு உதவப் போகும் நீங்கள் தள்ளாமையால் அவதிப்படாமல் இருக்கும் வகையில், இப்போதே திட்டமிட வேண்டும்.
source: ilamai.blogspot