செய்வினையும் – பொய்வினையும்
பூரியான் ஃபாத்திஹா
மதீனாவின் பெயரில் மாபெரும் பொய்
செய்வினையும் – பொய்வினையும்
உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும், மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர்.
ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை, எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க – சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதிகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
‘உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது” ‘நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை” என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க – கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து – கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள்.
யாரோ யாருக்கோ செய்து வைத்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்பதைக் கூட இந்த மூடர்கள் சிந்திப்பதில்லை. இவர்களுக் கெல்லாம் தலையில் மூளைக்கு பதில் வேறு என்னவோ இருக்கின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. செய்வினை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டான். அவனது ஈனத்தனமான பிழைப்பும் வருமானமும் தொடர வேண்டுமே!
உங்களுக்கு வேண்டியவர் – உறவினர் தான் செய்து வைத்திருக்கிறார்கள்” என்று அந்த மந்திரவாதி சொல்ல – தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், இப்படி ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தி, இதன் காரணமாக நெருங்கிய சொந்த பந்தங்கள், உடன்பிறந்தவர்,அண்டை அயலார், அனைவர் மீதும் பகைமைகொண்டு பிரிந்து போன குடும்பங்கள் எத்தனையோ!
ஒரு தாய் வயிற்றில் பிறந்து – உயிருக்குயிராய் நேசித்து அன்பு செலுத்தி – ஆதரவாய் அணுசரனையாய் இருந்த சகோதர சகோதரிகள் கூட, கண்ட கண்ட கழிசடைகளின் பேச்சையெல்லாம் நம்பி, செய்வினை என்னும் பொய் வினையில் மூழ்கிப் போய் இரத்த பந்தங்களை முறித்துக் கொள்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு கூறும். யார் என்னை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான். யாரும் யாருக்கும் எதுவும் செய்யலாம் என்று நம்புபவர்கள்,
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல் படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எதிராகச் செய்து வைக்க வேண்டியது தானே! செயல்பட முடியாமல் கை கால்களை முடக்க வேண்டிளது தானே!
பதவிப் போட்டியிலும், அரசியல் போட்டியிலும், தொழில் போட்டியிலும், ஒருவரையொருவர் வீழ்த்த தங்கள் ஆற்றலையும் திறமையையும், பொருளாதாரத்தையும், வீணடிப்பதை விட்டு விட்டுச் செய்வினையையும், பில்லி சூனியத்தையும் பயன்படுத்த வேண்டியது தானே!
இவை அனைத்தும் எமாற்று வேலை என்பதற்குச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களுக்கு – இந்த உதாரணங்கள் போதும்.
பூரியான் ஃபாத்திஹா
பணக்காரர் ஆக வேண்டும் என்னும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்குப் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதை விட்டு விட்டு முன்னோர்கள் செய்தவை என்று மூட நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, ரஜப் மாதம் வந்து விட்டால் – பூரியானை பாயசத்துடன் சேர்த்து வைத்துப் பாத்திஹா ஓதி, விறகு வெட்டி கிஸ்ஸாவை விடிய விடியப் படித்து விட்டால் பணக்காரர் ஆகிவடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். பூரியானை நினைத்துப் பூரித்துப் போகிறார்கள்.
வீடு வீடாகச் சென்று பூரியானுக்குப் பாத்திஹா ஓதியவர்களும் பணக்காரர் ஆகவில்லை. புத்தி கெட்டு பூரியானுக்கு பணத்தை செலவு செய்து பாத்திஹா ஓத வைத்தவர்களும் பணக்காரர் ஆகவில்லை. காலமெல்லாம் ஓதியவர்கள். இப்போதும் கடன் வாங்கி ஓதிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெயில் போட்ட பூரியான்கள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை போலும்.
பூரியான் பாத்திஹா ஓதாமலேயே பணக்காரர் ஆனவர்களும் உண்டு. பூரியானுக்குச் செலவு செய்து கடனாளி ஆனவர்களும் உண்டு. அப்படியே பணக்காரர் ஆகியிருந்தாலும் பூரியானின் புண்ணியத்தால் பணக்கரர் ஆனதாக நம்பிக்கை வைத்தால் – இறை நம்பிக்கையை (ஈமானை) குழி தோண்டிப் புதைத்ததாகப் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
மார்க்கத்தில் உள்ள அனைத்து வணக்க வழிபாடுகளும் மறுமையில் கிடைக்கும் பலனை அடிப்படையாகக் கொண்டவை. இறை வணக்கத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்வாக இருக்குமானால் நம்மை விடச் சிறந்த இறை நேசர்கள் அனைவருமே செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். அல்லாஹ் தான் ல்நாடியவருக்கு;கு ஏராளமாகக் கொடுக்க்கிறான்.;. (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்க்கிறான். எனினும் அவர்கள் இவ்வு;வுலக வாழ்க்கையில் மகிழ்ச்ச்சி அடைகிறார்கள். இவ்வு;வுலக வாழ்க்கையோ மறுமைக்கு;கு ஒப்ப்பிட்ட்டால் அற்ப்பமேயன்ற்றி வேறில்லை. (அல் குர்ஆன் 13:26)
மதீனாவின் பெயரில் மாபெரும் பொய்
மதீனாவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு, மக்கள் மறந்திருக்கும் சமயங்களில், அவ்வப்போது ஒரு பிரசுரம் சில விஷமிகளால் வெளியிடப்படும். அதில், மதீனாவில் வசிக்கும் ஷேக் அஹமத் தெரிவிப்பது என்னவென்றால், நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு கண்டேன்…. என்று துவங்கி ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பிரசுரத்திலும் அவரவர் மனதில் தோன்றியதை சேர்த்தும் குறைத்தும் எழுதிவிட்டு. இது போல் 1000 பிரதி அச்சிட்டு வெளியிட்டால், நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். பம்பாயில் ஒருவர் அச்சிட்டு வெளியிட்டார். கோடீஸ்வரர் ஆனார். கல்கத்தாவில் ஒருவர் கிழித்துப் போட்டார். கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்; என்றெல்லாம் ரீல் விடப்பட்டிருக்கும்.
இதைப் படித்து விட்டு, பணக்காரர் ஆகலாம் என்று இது போல் அச்சிட்டு வெளியிட்டு ஏமாந்தவர் பலர். இதை மறுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அல்லாஹ்வை மறந்து அஞ்சியவர்; பலர். இந்தப் பித்தலாட்டப் பிரசுரங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. அச்சிட்டு விநியோகிக்கக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை.
ஆரம்ப காலத்தில் மக்காவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு இப்பிரசுரம் வெளியானது. அதில் ‘நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது” என்று தொடங்கியதைப் பார்த்து ரவுலா ஷரீப் மதீனாவில் அல்லவா உள்ளது? என்று சிலர் கேட்க – அடுத்தடுத்த பிரசுரங்களில் மாற்றிக் கொண்டார்கள். இதிலிருந்தே மக்காவுக்கும் மதீனாவுக்கும் வித்தியாசம் தெரியாத எவனோ ஒரு மடையன்எழுதியுள்ளான் என்பதை உணரலாம்.
”ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது” என்ற வாசகமும் பொய்யானது. ஏனனில் ரவுலா ஷரீபில் யாரையும் தூங்க அனுமதிப்பதில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவுலா ஷரீபை ஸியாரத் செய்து விட்டு வந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.
பல்வேறு தர்காக்களைப் பார்த்துப் பழகிப் போனவர்கள் அதே கண்ணோட்டத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தையும் கருதி விட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தை அல்லாஹ் எல்லா அசுத்தங்களிலிருந்தும் பாதுகாத்து வைத்திருக்கின்றான். ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை 60 ஆயிரம் முஸ்லிம்கள் இறப்பதாகவும், அதில் ஒருவருக்குக் கூட ஈமான் இல்லை என்பதாகவும் அப்பிரசுரத்தில் ரீல் விடப்பட்டுள்ளது.
ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது.
இன்னும் இது போன்ற ஏராளமான தவறுகள் அப்பிரசுரத்தில் காணப்படுகின்றன. இதே போன்ற பிரசுரம் திருப்பதியின் பெயரால் ஒரு சாராரும், வேளாங்கன்னியின் பெயரால் ஒரு சாராரும் வெளியிடுகின்றனர்;. அவற்றின் ஆரம்பத்தில் காணப்படும் செய்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் – இறுதியில் காணப்படும் எச்சிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இதிலிருந்தே இவை திட்டமிட்டு கட்டி விடப்பட்ட கதைகள் என்பதை உணரலாம். இது போன்ற முட்டாள்தனமான பிரசுரங்களில் ஈமானை இழக்காமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
இறுதியாக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் எச்சரிக்கை : யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்: புகாரி)