நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னும் பெற முடியாமல் தவிப்பதால், வேலைவாய்ப்பு மிகமிகக் குறைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 218000 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் மே மாதம் வெறும் 41000 பணியாளர்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நியமித்துள்ளன.
அரசுத் தரப்பில் 431,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் 411000 வேலைகள் தற்காலிகமானவைதான். எனவே இவர்கள் குறித்த காலத்துக்குப் பின் வேலையற்றவர்களாகவே இருப்பார்கள்.
வரும் மாதங்களில் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியே இல்லை என்பதால் திகைப்பில் உள்ளது ஒபாமாவின் அரசு. பொருளாதார அறிஞர்கள் கணித்த இரண்டாவது வீழ்ச்சி இப்போதே தொடங்கிவிட்டதோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனின் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. இது ஐரோப்பிய யூரோ வலயத்தையே சிதறடித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. அப்படியொரு சூழல் உருவாகும்பட்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக முதலீட்டாளர்கள் ரிஸ்க்கான தொழில்களிலிருந்து தங்கள் பங்குகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நியூயார்க் மெர்க்ன்டைல் எக்ஸ்சேஞ்சில் 1 பேரல் 73.05 டாலராகக் குறைந்துவிட்டது. ஒரே நாளில் 1.56 டாலர்கள் குறைந்துள்ளன (ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது, இதுபற்றி அரசு மூச்சுக் காட்டுவதில்லை!)