[ சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம்.
தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன?
மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு. சென்னையில், அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?]
உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான். நமது அரசியல்வாதிகள், எந்த அளவுக்கு மக்கள் தரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்குத் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2005-ல் ரூ. 12 ஆயிரமாக இருந்த அவர்களது ஊதியம் ரூ. 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே மேலும் ரூ. 4,000 அதிகரிக்கப்பட்டு ஊதியம் ரூ. 20 ஆயிரமாக உயர்ந்தது.
அடுத்த நிதியாண்டில் ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியம் 2008 மே மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு ரூ. 30 ஆயிரமாகியது. 2009 பிப்ரவரியில்தான் ரூ. 15 ஆயிரம் உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஓர் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு மொத்த ஊதியம் ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நமது சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இப்படி இத்தனை முறை ஊதிய உயர்வும், இந்த அளவுக்கு ஊதிய அதிகரிப்பும் தமிழகத்தில் வேறு எந்தத் தொழிலிலாவது, நிறுவனத்திலாவது யாருக்காவது அளிக்கப்பட்டிருக்குமா?
ஓர் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமானால் சம்பளக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையின்மீது நிதி அமைச்சகம் பல விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நான்கோ, ஐந்தோ, ஆறோ வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஷயத்தில் அப்படி எதுவுமே தேவையில்லை. எப்போதெல்லாம் முதல்வராக இருப்பவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அத்தனை உறுப்பினர்களும் கட்சி மனமாச்சரியங்களை மறந்து உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்பார்கள். இடதுசாரிகள் இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வார்கள்.
இதற்கு முன்பே ஒருமுறை நாம் குறிப்பிட்டிருந்தபடி, தாங்களே தங்களது ஊதியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் கேலிக்கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழ வேண்டும். எந்த ஊதிய உயர்வும் அடுத்து வரும் சட்டப்பேரவைக்குத்தான் பொருந்தும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டும்தான் இப்படிப்பட்ட விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி விழும்.
ஊதிய உயர்வைவிட அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை இப்போதைய சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி காலனி அமைக்கப் போவதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை கிரவுண்டில் வீட்டு மனை வழங்கப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு.
முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கட்சி மனமாச்சரியங்களை மறந்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவசர அவசரமாக ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்கள். கிடைப்பதை வாங்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அத்தனை அவசரம். என்ன கொடுமை இது?
சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம்.
தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு. சென்னையில், அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?
இப்போதெல்லாம் இன்னொரு விபரீதமும் அரங்கேறுகிறது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் முடிவிலும் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளிப்பது எங்கே தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்! ஆண்டுதோறும் இதற்காகும் செலவு எத்தனை லட்சங்கள் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அவலம் என்று குரல் எழுப்பினால், சாமானியர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்ணக் கூடாதா என்று குதர்க்கம் பேசுவார்கள்.
ஒன்று மட்டும் தெரிகிறது – வாக்களித்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் “சாமானியன்’ முட்டாள். வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவரது வயிற்றில் அடிக்கும் “சாமானியன்’ புத்தி சாலி!
நன்றி: தினமணி