இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது;
‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை:
இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவரையும் அடித்ததில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.
தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்துமுள்ளார்கள்.
‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்தார்கள். (புகாரி)
ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.
‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
காரணங்களைக் கண்டறிவோம்:
கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.
மனைவி தரப்பில்:
மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.
(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.
தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும்.
இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும்.
சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.
(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:
பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.
(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.
(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.
கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:
பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.
(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:
மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு.
சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.
(3) தவறான பிள்ளைப் பாசம்:
ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.
எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.
இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.
பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.
(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.
பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.
சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்