முஸ்லிம் பெண்களும் சம்பாத்தியமும்
நாஸியா
இஸ்லாத்தை போலவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடக்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். தாருல் உலூம் என்ற இஸ்லாமிய அமைப்பு, கொஞ்ச நாள் முன்ன ‘முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்வது ஹராம்’ அப்படின்னு ஒரு ஃபத்வா சொன்னதாக எங்க பார்த்தாலும் செய்தி பரவி கிடந்தது.
முஸ்லிம் பெண்கள் படிப்பதோ, வேலைக்கு செல்வதோ எந்த இடத்துலயும் ஹராம் என்று சொல்லப்படாதபோது எப்படி இப்படி ஒரு ஃபத்வா வந்துச்சுன்னு ஒரே குழப்பம். பிறகு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்களின் கைங்கரியம் தான்.
சமீபமாக வந்த செய்திகளில் அப்படி ஒரு ‘ஃபத்வாவை சொல்லவில்லை, பெண்கள் வேலை செய்யுமிடத்தில் பேண வேண்டிய ஹிஜாபை பற்றித்தான் சொல்லிருந்தோம்’ என்று மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.
சரி. இப்ப முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லலாமா, செல்லக்கூடாதா?
இஸ்லாம் இதைப்பத்தி என்ன சொல்கிறது?
ஒருத்தர் முஸ்லிம் என்று சொன்னால் அவர் எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராவார். ஆங்கிலத்துல சொல்லனும்னா ‘டோட்டல் சப்மிஷன் டு அல்லாஹ்’. இதில் நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு செயல்களுமே இறைவணக்கம் தான்.
காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போன நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம செய்யக்கூடிய பல விஷயங்களை எப்படி ஒழுங்கோட செய்வதுன்னு இஸ்லாத்தில் நமக்கு கட்டளை/அறிவுரை இருக்கு.
வெளிய இருந்து பார்க்கும்போது இது ரொம்ப பிற்போக்குத்தனமா தெரியலாம். ஆனா 1400 வருஷங்களாக இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதில் இன்றிருக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு எந்த சிரமமும் இல்லை.
அப்படி, ஆண்கள், பெண்கள் என சேர்த்தியாகவும், தனித்தனியாகவும் மனிதர்களுக்கு பல கட்டுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கு.
ஒரு குடும்பம் என்றால், அதில் தாய், தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் பல கடமைகள் இருக்கு.
இஸ்லாத்தில் என்னதான் மனைவி பணக்காரியாக இருந்தாலும், சம்பாதிப்பவளாக இருந்தாலும், குடும்பத்தின் பராமரிப்புக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் கணவனுக்கு மட்டுமே இருக்கு. மனைவி தான் சம்பாதிக்கிறாளேன்னு கணவன் ஜாலியா இருக்க முடியாது. அதே போல, மனைவி சம்பாதிப்பதில் அவள் குடும்பத்திற்கு செலவு செய்ய கடமை இல்லை.
அதாவது, ஒரு குடும்பத்தில கணவன், மனைவி இருவரும் சம்பாதிச்சாலும், மனைவிக்கு குடும்பத்துக்காக செலவு செய்யனும்கிற அவசியமே இல்லை. அப்படிக்கட்டாயப்படுத்த கணவனுக்கோ, இல்லை அவள் தகப்பனுக்கோ, பிள்ளைகளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.
இப்படி ஒரு கட்டளை இருக்கும்போதே நாம தெரிஞ்சுக்கலாம், பெண்கள் வேலைக்கு போவதையும், சம்பாதிப்பதையும் இஸ்லாம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனா இப்படி ஒரு கட்டளை தான் எனக்கு கண்டிப்பா சம்பாதிக்கனும்கிற ஆசைய தூண்டிச்சே. பின்ன, நாம சம்பாதிச்சத நம்ம இஷ்டப்படி செலவு செய்யலாம்தானே? (ஆனா அதை நேர்வழியில் செலவு செய்வது முக்கியம். ஏன்னா அதைத்தந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லனுமில்லையா?)
சரி, அப்ப ஏன் பெண்கள் வேலைக்கு போறத பத்தி எந்த வித கட்டுப்பாடும் இல்லையா?
இருக்கு. எப்படி ஒரு ஆணுக்கு குடும்பத்திற்க்காக சம்பாதிப்பது கடைமயோ, அதே போல ஒரு பெண்ணுக்கு குடும்பத்தை பார்த்துக்கொள்வது கடமையாகிறது. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலம்.
உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.
வேலை செய்யும் இடத்திலும் கண்டிப்பாக ஹிஜாபை பேண வேண்டும். நான் கேம்பஸ் இன்டர்வியூக்களுக்கு போகும்போது பலர் என்னிடம் கேட்டது, ‘ஹிஜாப் போடக்கூடாதுன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?’ ‘அப்படிப்பட்ட வேலை எனக்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்’. ஏன்னா, வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல.
அடுத்ததா, அளவுக்கதிகமான சோஷியலைசிங் இருக்கக்கூடாது. ஆண்களிடம் பேசும்போது நம்முடைய பேச்சு வெறும் வேலையை பற்றி மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய வீண் அரட்டைகளுக்கு நோ.
அதோட ரொம்ப முக்கியம், நம்முடைய கடமையான தொழுகையையும் பேண அனுமதிக்கனும். இது ஆண்களுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்பது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் சமாளிப்பது நம்முடைய கடமை. ஒரு நாளைக்கு எத்தனையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிடங்கள் தொழுவதற்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை.
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.
இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷத்தில் இது நடந்திருக்கு.
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.
வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்!), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.
நாஸியா
source: http://biriyaani.blogspot.com/2010/05/blog-post_15.html