அபூ சுமையா
உண்மையை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எடுத்துச் செல்ல உதவும் கருவியை இன்று பொய்யை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எடுத்துச் செல்லும் அழிவுச்சாதனமாக மாற்றி விட்டார்கள்.
அநியாயக்காரன் முன்னிலையில் நீதியை எடுத்துச் சொல்வது தான் போராட்டத்தில் உயர்ந்த போராட்டமாக எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
“போராட்டம் – அழைப்புப் பணி” ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு உதவும் அருமையான இந்த ஊடகத்துறைக்கு முஸ்லிம்கள் அதிகமதிகம் வரவேண்டும்.
உலக அளவில் ஒரு காலத்தில் மக்களிடையே கோலோச்சிய BBC, CNN தொலைக்காட்சிகளுக்கு இணையாக இன்று அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைக்காட்சிகள் முஸ்லிம்களிடமிருந்து எழுந்து வந்துள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக “BBC யின் ஸ்டுடியோக்களில்” உருவாக்கப்பட்டப் பொய் செய்திகள் உலகை வலம் வந்த நிலை மாறி, இன்று அவர்களே உண்மையான நடப்பு நிகழ்வுகளைக் கூற வேண்டிய கட்டாயத்துக்கு அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைக்காட்சிகளின் தைரியமான–உறுதியான நிலைபாடுகள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.
இந்த நிலைமை இந்தியாவிலும் வர வேண்டும்.
இன்று இந்தியாவில் இயங்கும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ அலைவரிசைகளில் எத்தனை முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன என்ற கேள்வியை முன்வைத்தால் ஒன்றைக் கூட எடுத்துக் காட்ட முடியாத பரிதாப நிலை தான் உள்ளது.
இதற்கு, ஊடகத்துறையின் வலிமையினை இந்த முஸ்லிம் சமுதாயம் இன்னமும் புரிந்து கொள்ளாமையே காரணம். அதன் வலிமையைப் புரிந்து கொண்டக் காரணத்தினாலேயே தொலைக்காட்சி, பத்திரிக்கை என அனைத்தின் எடிட்டோரியல் இடத்திலிருந்து அனைத்து பகுதிகளிலும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்.
“படைத்தவனுக்குப் பயந்தவன்” மட்டும் தான் நீதியாக நடந்து கொள்வான். பெரும்பாலும் படைத்தவனுக்குப் பயமில்லா வேடதாரிகள் தான் இன்று அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் தலைமை இடங்களில் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் செய்திகள் எத்தனை சதவீதம் உண்மையாக இருக்கும்?
அதிலும் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் கொடுக்கும் கவனத்தில் 100 ல் 1 பகுதியைக் கூட உண்மை வெளியாகும் போது அதற்குக் கொடுப்பதில்லை.
ஒரு சிறு உதாரணம்: டெல்லியில் நடந்த பாட்லா என்கவுண்டர் சம்பவம்.
இந்தச் செய்தி வந்த நாளிலிருந்தே அது ஒரு போலி என்கவுண்டர் என்றும் அதில் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்களும் அப்பாவிகள் என்றும் பலமுறை கூக்குரல்கள் எழுந்தன. இருப்பினும் அதனைக் கண்டு கொள்ளாமல், “இந்தியன் முஜாஹிதீன்” தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப ஊளையிட்ட இந்தப் பத்திரிக்கை உலகம், இன்று அந்த என்கவுண்டர் போலி தான் என உறுதிபடுத்திப்ப்பட்ட செய்தி வெளியானப் பின் அதனைக் குறித்து எந்த ஒரு தமிழ் பத்திரிக்கையிலும் ஒரு வரி செய்தியைக் கூட காண இயலவில்லை.
“முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் இல்லை“. அவர்கள் மீது அரசும் ஃபாஸிஸமும் இணைந்து திட்டமிட்டு பழி சுமத்துகிறது என்று இது போன்று அவ்வபோதாவது உண்மை வெளியாகும் போது கூட அதனை எடுத்துக் கூற இந்த ஊடகங்கள் முன்வராமைக்கான காரணம் என்ன என்பது மிகத் தெளிவு! ஆம், “படைத்தவனுக்குப் பயமில்லா வேடதாரிகள்“ ஊடகங்களில் கோலோச்சுவதால் தான்!
நீதி அனைவருக்கும் நடப்பாக வேண்டும் எனில், “அநியாயத்துக்கு எதிராக துணிந்து போராட்டத்தை முன்னெடுக்க வசதியாக நிற்கும் இந்த ஊடகத்துறையினுள் முஸ்லிம்கள் அதிகமதிகம் நுழைய வேண்டும்“.
எதிர்காலத்தில், “மருத்துவம், வழக்கறிஞர், சிவில் சர்வீஸஸ்” படிப்புகளுக்கு முஸ்லிம்களைத் தயாராக்க விழிப்புணர்வு கொடுக்கும் அதே நேரத்தில், ஒவ்வொரு முஸ்லிமும் “ஜெர்னலிஸ்டாக” இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் நம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அமைய வேண்டும்.
அதற்கு தூபம் போட்டு, குத்பா மேடையினைப் பயன்படுத்த முன்வந்துள்ள சகோதரர் ஷம்சுதீன் காஸிமி அவர்களுக்கு அல்லாஹ் எல்லா அருளையும் உதவியையும் ஈருலகிலும் வழங்கட்டுமாக.