அபூயாகூப் உம்ரீ, பரங்கிப்பேட்டை
“அல்லாஹ் போதுமானவன்” என்ற சொற்றொடரை அடிக்கடி நம்மவர்கள் பயன்படுத்துவதை நாம் செவியுறுகிறோம். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற தர்ஹாக்களில் தவம் கிடப்பதைக் காணும் போது, “அல்லாஹ் இவர்களுக்குப் போதவில்லை” என்றுதான் கருத வேண்டியுள்ளது.
ஏதோ சம்பிரதாயத்திற்காக இந்த சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்களேயன்றி அதன் பொருளை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
திருக்குர்ஆனின் போதனைகளை அவர்கள் உணர்ந்திரந்தால் இந்த நிலைமைக்குத் தங்களை ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். ‘அல்லாஹ் போதுமானவன் அல்ல’ என்ற நம்பிக்கயில் வாழ்பவர்களைப் பற்றித் திருக்குர்ஆனின் சில வசனங்களைப் பார்ப்போம்!
“அல்லாஹ்வை விடுத்து, உங்களுக்கு எந்த நன்மையோ தீமையோ செய்ய இயலாதவர்களை நீங்கள் வணங்குகிறீர்களா? (அல்குர்ஆன் 5:76)
உமக்கு எவ்வித நன்மையையும், தீமையையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவர்களை நீர் பிரார்த்திக்கக் கூடாது! நீர் அவ்வாறு செய்தால், அப்போது அக்கிரமக்காரர்களில் ஒருவராக நீர் ஆகி விடூவீர்! (அல்குர்ஆன் 10:106)
“அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமை செய்ய நாடினாலும் அல்லது, அவன் உங்களுக்கு யாதொரு நன்மை செய்ய நாடினாலும் (அதில்) எதையும் உங்களுக்கு தடுத்து நிறுத்துபவன் யார்?” (அல்குர்ஆன் 48:11)
(நபியே!) அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால் அதனை நீக்குவோர், அவனையன்றி வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனுமில்லை) (அல்குர்ஆன் 6:17)
“அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன; என்று நான் கூற மாட்டேன். மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். “நிச்சயமாக நான் ஒரு மலக்கு” என்று உங்களிடம் நான் சொல்லவும் மாட்டேன்” என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 6:50) “உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய நிச்சயமாக நான் ஒரு சிறிதும் சக்தியற்றவன்” என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
“நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை இரட்சித்துக் கொள்ள மாட்டான். அவனையன்றி அண்டும் இடத்தை நான் பெற முடியாது” (என்று) நபியே! கூறுவீராக! (அல்குர்ஆன் 72:22)