“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ”
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாவதாக.
இந்தச் சிறிய பிரசாரத்தின் நோக்கம், இஸ்லாத்தைத் தம் மார்க்கமாக – வாழ்க்கை வழியாக-ஏற்றுக் கொள்ள விழையும் நண்பர்களிடையே நிலவும் சில தப்பெண்ணங்களை நீக்குவதேயாகும்.
இஸ்லாத்தில் நுழைவதற்கு யாரேனும் பெரிய இஸ்லாமிய அறிஞரிடமிருந்து பிரகடனம் வரவேண்டும் என்றோ, ஓர் அதிகாரியிடம் அல்லது கோர்ட்டுக்குச் சென்று அறிவிப்புச் செய்ய வேண்டுமென்றோ சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக ஓர் அத்தாட்சிப் பத்திரத்தை அதற்குரிய அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
எவரேனும் ஒருவர் உண்மையாகவே தமது முந்திய மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தில் நுழைய விரும்பினால், இஸ்லாம் தான் இறைவனால் மனித குலத்திற்கு வழங்கப் பெற்ற உண்மையான மார்க்கம் என்பதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டால் அவர் தமது நம்பிக்கையின் அத்தாட்சியாக ஷகாதா கலிமாவை (ஷகாதா கலிமா என்றால் “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று கூறுவதாகும்) உடனடியாக மொழிய வேண்டும். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆன் இதை மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளத் தக்க மார்க்கம் இஸ்லாம்தான்” (அல்குர்ஆன் அத்தியாயம் : 3 வசனம் : 19). மேலும் அல்லாஹ் கூறுகிறான்;
”இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவரிடமிருந்து அது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தவர்களுள் ஒருவராகவே இருப்பார்” (அல்குர் ஆன் 3:85).
மேலும் இஸ்லாம்தான் இதர மார்க்கங்களை விட அதன் முழுமையான மூலத்தன்மையில் நிலைத்திருக்கும் மார்க்கமாகும். அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:
”(நபியே) சத்தியத்தைத் தாங்கி உம்மளவில் வந்திருக்கும் இவ்வேதம் தனக்கு முன்பிருந்த வேதங்களை உண்மைப் படுத்தி உறுதி ஆக்குவதாக இருக்கிறது” (அல்குர் ஆன் 5:48).
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: இஸ்லாம் (என்னும் மாளிகை) ஐந்துத் தூண்களைக் கொண்டு நிலை நிறுத்தப் பெற்றிருக்கிறது.
1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுப்பது.
2) தொழுகையைக் கடைபிடிப்பது.
3) ஜக்காத் எனும் பொருள்வரி கொடுப்பது.
4) ரமழான் மாத நோன்பு நோற்பது.
5) ஹஜ் செய்வது.
முதற்கடமையாகிய ஷஹாதத் கலிமாவை வெறுமனே தனியாகவோ, பிறர் முன்னிலையிலோ வாயால் மொழிவது மட்டும் போதாது. அசைக்க முடியாத, உள்ளத்தின் உறுதியான நம்பிக்கையுடன் இதனை வெளிப்படுத்த வேண்டும். ஒருவன் நேர்மையான மனப் பக்குவத்துடன், தனது எஞ்சிய வாழ்க்கை முழுவதிலும் இஸ்லாத்தின் போதனைகளை ஏற்று நடக்க உறுதி கொண்டால், அவன் தன்னை அன்று பிறந்தக் குழந்தையைப் போன்று பாவமற்றவனாக ஆக்கிக் கொள்கிறான். உயிரூட்டமுள்ள நம்பிக்கை என்னும் ஒளி இவன் உள்ளத்தை வெளிச்சமுடையதாக்கி, அந்த நம்பிக்கையின் மறு உருவமாகவே அவனை ஆக்கிவிடும்.
தன்னை முஸ்லிம் என்று அறிவித்த பிறகு ஒருவன் அடுத்ததாக ஆற்ற வேண்டிய பணி யாது?
இதன் பிறகு தான் அல்லாஹ்வின் (தவ்ஹீது எனும்) ஒருமைத்தன்மையில் அடங்கியிருக்கும் உண்மையான விளக்கத்தையும் அதன் தேவைகளை நிறைவேற்றும் அவசியத்தையும் ஒருவன் உணரத் தொடங்க வேண்டும். அவன் இந்த உண்மையான நம்பிக்கையைத் தன் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தி, அதன் படியே நடக்கத் தொடங்க வேண்டும்.
ஷஹாதத் கலிமாவின் உட்பொருள் யாது?
இதில் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய ஒரு விளக்கம் உண்டு. அதாவது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும் வல்லமைமிக்க அவன் ஒருவனே உண்மையான இறைவன் என்றும், வணக்கங்கள் யாவும் அவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்றும், மனித குலம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் குறைவற்ற தன் பொக்கிஷத்திலிருந்து உணவளித்து பாதுகாப்பவன் அவனே என்றும், எனவே அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்றும் இந்த ஷஹாத்த் கலிமாவின் முதற்பகுதி உணர்த்தி நிற்கிறது.
”அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்ற இதன் இரண்டாம் பகுதி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப் பெற்ற தூதரும் அடியாரும் ஆவார்கள் என்பதை உணர்த்துகிறது. இதிலே எவருக்கும் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. முஸ்லிம் என்பவர் அந்தத் தூதரின் போதனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டவராவார். அந்த நபியின் போதனைகளை நம்பி, அவற்றை தன் வாழ்க்கையில் கடைபிடித்து, அவர் தடுத்தவற்றை விட்டு ஒதுங்கி, அவருக்கு அல்லாஹ்வால் அருளப்பெற்ற தூதுச் செய்தியின் அடிப்படையிலேயே இறைவனை வணங்கி, வாழ்வதுதான் முஹம்மத் நபியைத் தூதர் என்று ஏற்றுக் கொண்டதன் உண்மையான அடையாளமாகும்.
இஸ்லாமிய அடிப்படையில் வணக்கம் என்பது யாது?
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வல்லமையை மனதில் கொண்டு, மனப்பூர்வமான சேவை புரிவதே இதன் வெளிப்படையான பொருள். இதனை ஆழ்ந்த நோக்கில் சிந்திக்கும் போது இஸ்லாமிய வணக்க அமைப்பில் மனிதனின் இரு நிலைகள் இணைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.
(1) ஷஹாதா கலிமாவை வாயால் மொழிவது, தொழுகையை அதன் பல்வேறு நிலைகளோடு நிறைவேற்றுவது, ஜக்காத் கொடுப்பது, குர்ஆனைப் படிப்பது, அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பது, தொழுகைக்கு முன் தன் உடல் உறுப்புகளைத் தூய்மைப் படுத்திக் கொள்வது முதலான செயல்பாடுகள், வெளிப்படையன வணக்கங்கள். உடலுறுப்புக்களை இயக்குவதால் நம்மில் வெளியாகும் வணக்கங்களாகும்.
(2) அல்லாஹ்வை மனதால் நம்புவது, இறுதித் தீர்ப்பு நாள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வது, இறைக் கட்டளைகளை ஏற்று மறைவாகச் செயல்படும் அமரர்களை நம்புவது, மனித குலத்திற்கு வழிகாட்ட இறைவனால் வழங்கப் பெற்ற புனித வேதங்களை நம்புவது, அவ்வேதங்களைப் போதனை செய்து மக்களை நேர்வழிப்படுத்த வந்த இறைதூதர்களை நம்புவது, நன்மை தீமைகளை நிர்ணயிப்பது அல்லாஹ்வே என்பதை நம்பிக்கை கொள்வது முதலானவை அந்தரங்க வணக்கங்கள் என்ற வகையைச் சார்ந்தவை. இவ்வகை வணக்கங்கள் உடலுறுப்புகளை இயக்குவதால் வெளிப்படாவிட்டாலும் இதயத்தோடு தொடர்புடையவையாக இருப்பதால் மனித வாழ்வில் – அவனது வெளிப்படையான வணக்கங்களில் – மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
மனதுள் ஆழமாகப் பதிய வைக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று உண்டு. அதாவது அல்லாஹ்வுக்காக மட்டுமே என்று இதயத்தில் உறுதி செய்யப்படாத எந்த வணக்கமும் – வெளிப்படையானதும் அந்தரங்கமானதும் – பயனற்றதாகி அல்லாஹ்வால் மறுக்கப் பட்டதாகிவிடும். இணைவைத்தல் என்பது இதுதான். இஸ்லாமிய சமூக அமைப்பிலிருந்து அவனை இது அப்புறப்படுத்திவிடும்.
புதிதாக இஸ்லாத்தை தன் மார்க்கமாக ஏற்றுக் கொண்டு அதனைப் பிரகடனப்படுத்தி, அதன் வணக்கங்களின் சரியான விளக்கங்களைத் தெரிந்து கொண்ட பின்னர் முதலாவதாகச் செய்யவேண்டியது – குளித்துத் தூய்மைப் படுத்தி கொள்வதாகும். பிறகு இஸ்லாத்தை அதன் தூயவடிவில் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இணைவைப்பின் எல்லா வழிகளையும் அடைத்துவிட்டுத் தவறான நம்பிக்கைகளை களைந்து விடவேண்டும். பாவச் செயல்களை வெறுத்துவிட்டு, நம்பிக்கைகளின் பக்கம் விரைந்து செயல்படவேண்டும். இது “லாயிலாஹ இல்லல்லாஹ்” எனும் கலிமாவின் நோக்கங்களுள் ஒன்றாகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் : ”இறை வரம்பு மீறலை வெறுத்து அல்லாஹ்வின் மீது எவர் முழுமையாக நம்பிக்கை கொள்கிறாரோ திண்ணாமாக அவர் மிக உறுதியான – அறுபடாத – பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார்.” (அல்குர்ஆன் 2:256)
வணங்கப்படத் தகுந்தவன் அல்லாஹ் ஒருவனே என்று நம் இதயத்தில் உணர்ந்து பிரகடனப்படுத்திக் கொள்ளும் போது, இறையன்பு, இறைபக்தி, இறை நம்பிக்கை இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் நம் வாழ்க்கை அமையவேண்டும் என்பதை நம் கருத்தில் கொள்ளவேண்டும். இது முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானது தான் என்றாலும் இஸ்லாத்தில் புதிதாக நுழையும்போது இந்நோக்கங்களை இதயத்தில் பதிய வைத்தால் அவரது எதிர்கால இஸ்லாமிய வாழ்க்கை மிகத் தூய்மையானதாக அமையும்.
அல்லாஹ்வுக்காகவே ஒன்றை – ஒருவரை நேசிப்பதும், அல்லாஹ்வுக்காகவே வெறுப்பதும் கலிமாவின் கோட்பாடுகளுள் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிம்களின் மீது அன்பு செலுத்தி, அவர்களுடைய நம்பிக்கைக்குரியவராக இருக்கவேண்டும். தன் அன்றாட வாழ்க்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் இறை மறுப்பாளர்களை விட்டும் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களால் கவரப்படாதவாறு இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவே அன்பு செலுத்துவதும், அல்லாஹ்வுக்காகவே வெறுப்பதும் என்ற நம்பிக்கையின் பலமான நங்கூரமும் அதன் சரியான பொருளும் இதுவேயாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை நாடி, உண்மையைத் தேடுவோரின் இதயங்களையும், ஆன்மாக்களையும் தூய்மைப்படுத்துவானாக! இறை நம்பிக்கையாளர்களான சமுதாயத்தினரின் மீது இன்னருள் புரிவானாக! ஆமீன்!
நன்றி: தொகுத்து வழங்கியவர் : மு.சாதிக்.