[ இவ்வுலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதால், அற்பமான இவ்வுலக சுகத்தைத் தான் இழக்க நேரிடும். ஆனால் மறு உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அழியாத பெரு வாழ்வை, முடிவே இல்லாத பேரின்பத்தை அல்லவா இழக்க நேரிடும்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)
இந்த உலகப் பிரச்சனைகளில் கவனக் குறைவாக இருந்து விட்டாலும், மறு உலகப் பிரச்சனைகளில் அல்லவா அதிக கவனம் இருக்க வேண்டும். ஆனால் நாமோ தலைகீழாக பிரச்சனையை மாற்றி விட்டோம்!
“இஸ்லாம் எளிமையானது; பின்பற்றத் தகுதி வாய்ந்தது” – இத்தகைய எளிய இஸ்லாத்தை, கர்ண கடூரமாக்கி, பாமரர்களின் மூளைகளைச் சலவை செய்து தங்களின் போதனைகளின் மூலம் புதுப்புது விளக்கங்கள் கொடுத்து மக்களைக் குழப்பும் மகான்கள் திருந்த வேண்டும்.
எடுத்ததற்கெல்லாம் ஆலிம்களிடம் ஓடுவதை விட்டு நாமும் ஒரு நாளில் சில மணி நேரமாவது ஒதுக்கி தர்ஜுமத்துல் குர்ஆன், அல்ஹதீஸ் தமிழாக்கம் படித்து இறைவனும், இறைதூதரும் நம்மிடம் எப்படியான வாழ்க்கையை எதிர் பார்க்கின்றனர் என்பதைத் தெரிந்து அதன்படி வாழ முயற்சிக்க வேண்டும்.]
உலமாக்கள் முரண்பட்டால்…?
தொண்டி ஜே. கலந்தர்
“கூடாது” என்கின்றனர் சிலர். “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பாஸ. மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கேஸ.” என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் – இக் குழப்பத்திலேயே கிடந்து உழன்று கொண்டிராமல் – சரியான வழியை தெரிவு செய்து அதன்படி நடக்க வேண்டியது அவசியமாகிறது.
இரு தரப்பினருமே “தாங்களே சரியான வழிகாட்டிகள்” எனக் கூறிக் கொள்வதால், சரியான வழி காட்டிகள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கே வந்து விடுகிறது. எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ ஒரு முன்னுதாரணம். மாண்புக்குரிய இமாம்கள் ஹதீஸ்களைத் திரட்டும்போது – கூறுபவரின் தன்மைகளை ஆராய்ந்தே (அவர் உண்மையாளரா, ஞாபக சக்தி உள்ளவரா… என்பன போன்றவை) சிலர் சொன்னதை ஏற்றனர்; சிலர் சொன்னதைத் தள்ளிவிட்டனர்.
அதே போல நாமும் இரண்டு தரப்பாரையும் கொஞ்சம் கவனித்தால் இருவருக்கும் சில வேறுபாடுகள் தெரியும். அந்த வேறுபாடுகளிலிருந்து எது சரியான கூட்டம்? இறைவனும், நபிகளாரும் காட்டிய வழியைப் பின்பற்றுபவர்கள் யார்? எனத் தெரிந்துவிடும். இப்போது இரு கூட்டத்தினரின் கூற்றுக்களையும் நோக்கி வித்தியாசங்களை விதப்படுத்துவோம்.
ஒரு தரப்பினர், ‘இறைவன் தந்த குர்ஆனும், நபிகளாரின் ஹதீஸ்களும் தடுக்கின்றவற்றைச் செய்யாதீர்கள்’ என்கின்றனர். மறு தரப்பினர், ‘இங்கு வாழ்ந்த பெரிய மகான்கள், ஆலிம்கள் எல்லாம் இதைத் தடுக்கவில்லையே! அவர்களுக்குத் தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது’ என மறுமொழி பகர்கின்றனர்.
முதல் சாரார், அவ்லியாக்களின் அடக்க ஸ்தலங்களை, இஸ்லாம் வெறுக்கும் அனாச்சாரங்களின் கூடாரங்களாக்காதீர்; அந்தப் புனிதர்கள் எவற்றை வெறுத்தார்களோ அவற்றையெல்லாம் அவர்களின் பெர்களிலேயே செய்யாதீர்’ என்கின்றனர். மறுசாராரோ, இவர்கள் அவ்லியாக்களே இல்லை என்கிறார்களே. இவர்களை விடலாமா! இன்னும் சில நாட்களில் அல்லாஹ்வையும், ரஸுலையும் இல்லை எனச் சொல்வார்கள்!” என்கின்றனர்; இதில் சிலர் முந்திய சாரார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்காமலேயே கூறுவர்.
சிலர் விளங்கினாலும் முந்திய சாராரின் மீது பாமரர்களின் கோபத்தை உண்டாக்கி விட வேண்டும் எனத் தங்களின் கற்பனை மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
முதல் பிரிவினர் “தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இறைமறை வசனங்களையும், இறுதி நபியின்் போதனைகளையும்” தருகின்றனர். இரண்டாம் பிரிவினரோ ஏதாவது மலையாளம், உர்து மொழிகளில் ஏழுதிய கிதாபுகளை, மஸ்தான்கள் அல்லது அப்பாக்கள் எழுதியதாகக் கூறப்படுவற்றைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஒரு கூட்டம் மார்க்கப் பணியையே குறிகோளாய்க் கொண்டு செயல்படுகின்றது. எனவே இவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கலங்காது தொடர்ந்து தங்களின் கொள்கைகளை முழங்குகின்றனர். மற்றொரு கூட்டமோ காசையே குறிக்கோளாய்க் கொண்டு மார்க்கப் பணி செய்கின்றது. எனவே இவர்கள், “முந்திய தரப்பினர் சொல்வது சரிதான். என்றாலும்ஸ.என்றாலும் (என இழுத்து) இப்போது உள்ள மக்களிடம் இதெல்லாம் எடுபட மாட்டேன் என்கிறதே; மெல்ல மெல்லத்தான் சொல்ல வேண்டும்” என்கின்றனர். (இது வரை மெல்ல, மெல்ல சொல்லி உள்ளனரா?) நாயகம், அன்றைய அறியாமைக் கால அரபிகளிடம் தெளிவாகவும், நேரிடையாகவும், சொன்னவற்றை இன்றைய முஸ்லிம்களிடம் கூடச் சொல்லப் பயப்படுகின்றனர் இவர்கள்.
முதல் சாரார்’ ‘எல்லோரது கருத்தையும் கேளுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள். அனைத்துக்கும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் கேளுங்கள். ஆதாரபூர்வமானவற்றை நாமும் ஏற்றுக் கொள்வோம்; ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் கூறித் தங்களின் கூற்றுகளுக்கு, இதோ இறைவசனம்! இதோ இறைதூதர் மொழி! என விஷயங்களைத் தந்து கொண்டேயுள்ளனர். இரண்டாம் சாரார்களோ இதைப் படிகாகதீர்கள், ஈமான் பறிபோய்விடும். இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்! இந்த வாதத்திலேயே இவர்களின் பலவீனம் பல்லிளிக்கிறது!
இப்போது நாம் தெரிந்து கொள்ளலாமே! எவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தை அணுகுபவர்கள் என்பதை! தெரிந்த பின்னர் அதன் வழி நடந்து, நாமும் ஈடேற்றம் (நஜாத்) பெற வேண்டும்.
இறுதியாக ஒரு வேண்டுகோள்! எடுத்ததற்கெல்லாம் ஆலிம்களிடம் ஓடுவதை விட்டு நாமும் ஒரு நாளில் சில மணி நேரமாவது ஒதுக்கி தர்ஜுமத்துல் குர்ஆன், அல்ஹதீஸ் தமிழாக்கம் படித்து இறைவனும், இறைதூதரும் நம்மிடம் எப்படியான வாழ்க்கையை எதிர் பார்க்கின்றனர் என்பதைத் தெரிந்து அதன்படி வாழ முயற்சிக்க வேண்டும்.
தலை கீழ் மாற்றம்!
இவ்வுலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதால், அற்பமான இவ்வுலக சுகத்தைத் தான் இழக்க நேரிடும். ஆனால் மறு உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அழியாத பெரு வாழ்வை, முடிவே இல்லாத பேரின்பத்தை அல்லவா இழக்க நேரிடும்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)
இந்த உலகப் பிரச்சனைகளில் கவனக் குறைவாக இருந்து விட்டாலும், மறு உலகப் பிரச்சனைகளில் அல்லவா அதிக கவனம் இருக்க வேண்டும். ஆனால் நாமோ தலைகீழாக பிரச்சனையை மாற்றி விட்டோம்!
இவ்வுலகக் காரியங்களின் விளைவுகள் இவ்வுலகிலேயே உடனுக்குடன் தெரிந்து விடுவதால், தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. உதாரணமாக நாம் முன்னோர்களைப் பின்பற்றி மண்ணென்ணெய் விளக்கைப் பயன்படுத்திப் பாாக்கிறோம். அதில் அதிக சிரமமும், குறைந்த ஒளியும் உள்ளதால், உடனே மின்சாரத்திற்கு மாறிக் கொள்ள இயலும்!
ஆனால் மறு உலக நன்மையை நாடி நாம் செய்கின்ற அமல்களின் விளைவுகள் இங்கே தெரியாது. மறுமையில் நம்மை எழுப்பி, விசாரணை செய்து, தீாப்பு வழங்கப் படும் போது தான் விளைவுகளைக் காண முடியும். திரும்பவும் இந்த உலகுக்கு வந்து, “நான் எனது செயல்களைத் திருத்தி கொண்டு வருகிறேன், என்று கேட்கவும் முடியாது, கேட்டாலும் அந்த வாய்ப்பு நமக்குத் தரப்படவும் மாட்டாது.
எனவே உலகக் காரியங்களை விடப் பல மடங்கு, மறு உலக நன்மைக்காகச் செய்கின்ற காரியங்களில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். இந்த உலகப் பிரச்சனைகளில் குருட்டுத்தனமாக எவரையும் பின்பற்றிவிட்டாலும், மறு உலகப் பிரச்சனைகளில் அவ்வாறு பின்பற்றக் கூடாது என்பதை, நாம் உணர முடிகின்றது.
குஆன், ஹதீஸ் என்ற இரு பேரொளிகள் வெளிச்சத்தில் ஆராய்ந்து, சரியானவை என்று தெரிந்தால் மட்டுமே எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். மறுமையில் அல்லாஹ்வின் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறுவழி கிடையாது.
முன்னோர்கள் யார்?
“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
“முன்னோர்கள், பெரியார்கள்” என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட “மிகச் சிறந்த சமுதாயம்” என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களால் பாராட்டப் பெற்ற “ஸஹாபாக்கள்” இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த “நாற்பெரும் கலீபாக்கள்” இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர்.
‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை “முன்னோர் பெரியோர்” என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற “பித்அத்”களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?
இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்! -வளரும்.
நன்மைகளைத் தடுத்துதீமைகளை ஏவுகின்றவர்கள்
மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்து, அல்குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் புது விளக்கங்களையும் புகுத்தி வருகின்றனர்.
இத்தகைய கெடுமதியாளர்களை நோக்கித்தான் வல்ல இறைவனான அல்லாஹ்(ஜல்) வினவுகிறான், “நீங்கள் இரு வகுப்பாரும் (மனு,ஜின் கூட்டத்தார்) உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” அல்குர்ஆன் “அர்ரஹ்மான்” அத்தியாயத்தில் முப்பத்தோரு இடங்களிலே இவ்வாறு திரும்பத் திரும்ப வினவுகிறான்.
மனிதனைப் படைத்து, அவனுக்குப் பேசக் கற்பித்து, கதிரவனையும், நிலவையும் இயங்கச் செய்து, செடிகள் கொடிகள் மரங்கள் முதலிய யாவும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு சிரம் பணியச்செய்து, வானை உயர்த்தி, துலாக்கோலை நிலைநாட்டி, வசிக்கத் தக்க இடமாக பூமியை அமைத்து, பலவகைக் கனிகளை உற்பத்தியாக்கி, தானியம், புற்பூண்டுகளை முளைக்கச் செய்து தன் வல்ல ஆற்றலை மக்கள் முன் காண்பித்தான். “ஆகவே, (மனு, ஜின்களாகிய) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” (அல்குர்ஆன் 55:13)
“மனிதனின் மூலம், களிமண்”
“‘ஜின்’னின் மூலம் நெருப்பு”
என்பதையும் அடுத்தடுத்த வசனங்களிலே இறைவன் சுட்டிக் காட்டி, “ஆகவே நீங்கள் இரு வகுப்பாரும் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” என வினவுகிறான். (அல்குர்ஆன் 55:14,15,16)
இவ்வாறு அந்த அத்தியாயம் முழுவதும் தன் மாபெரும் அருட்கொடைகளைத் தெளிவாக உரைத்து, கேள்விமேல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
இறை நம்பிக்கையும் இறையச்சமும் உடைய சான்றோர்களே வல்ல அல்லாஹ்வின் மாபெரும் ஆற்றல் – கருணையினாலேயே இவ்வுலகம் இயக்கம் பெறுகின்றது என்பதைக் கண் கூடாகக் கண்ட பின்பும் இறைவனுக்கு இணை வைக்க எவராவது எண்ணுவாரா? அப்படி கண்மூடித்தனமாக, இறையடியார்களை, இறைவனுக்கு ஒப்பாக உயர்த்தும் செயலைப் புரிபவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நாம் உணர வேண்டும். வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளைப் பொய்யாக்கிய மாபெரும் குற்றத்துக்கு இவர் ஆளாவார் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளை மறந்து மறுத்து – தன்மனம் போன செயல்களுக்கெல்லாம் புதுவடிவம் கொடுத்து – முஸ்லீம் பெயர் தாங்கிகளாகப் பவனிவருபவர்களின் மனம் திருந்துமா?
“இஸ்லாம் எளிமையானது; பின்பற்றத் தகுதி வாய்ந்தது” – இத்தகைய எளிய இஸ்லாத்தை, கர்ண கடூரமாக்கி, பாமரர்களின் மூளைகளைச் சலவை செய்து தங்களின் போதனைகளின் மூலம் புதுப்புது விளக்கங்கள் கொடுத்து மக்களைக் குழப்பும் மகான்கள் என்று திருந்துவர்.
இவர்களெல்லாம் இறைவனுடைய அருட்கொடைகளை மட்டுமா பொய்யாக்குகின்றார்கள்? இறைவனையே மறுக்கும் நாத்திகர்கள் அல்லவா? தெளிவான எண்ணங்களின் சரியான வெளிப்பாடுகள் இவர்களின் உள்ளங்களிலிருந்து புறப்பட வல்ல நாயன் அருள்புரிவானாக!
source: www.annajaath.com