பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.
இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது.
இதில் வெளியான தகவல்கள் வருமாறு:
மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.
இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.
இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.
தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.
இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால், அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.
பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
பல் துலக்குவது (மிஸ்வாக்கு) குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்‘ என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் ‘குளிப்பது அவசியம்‘ என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது‘ என்று குறிப்பிட்டார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.”
என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”பல்துலக்குவது பற்றி நான் உஙகளிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.” இதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். ”(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) ‘அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (புகாரி: 880,887,888,889,890)
posted by: A.M.ISMAIL,K.S.A.