அபூ ஃபாத்திமா
பகுத்தறிவுக்கு பரிசளிக்கும் கட்டுரை
இரு பிரிவினர்…
இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம் அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம் தம் மனம் சரியென்று கருதுவதையே-காண்பதையே வாழ்க்கையாகக் கருதி. வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகி விடுவோம் அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை. என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்.
இந்த நாஸ்திக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்களின் வாதத்தில் உண்மையிருக்கிறதா? அவர்கள் வாழ்வில் வெற்றியடையக் கூடியவர்களா? என்பனவற்றை அவர்கள் மதித்துப்போற்றும் பகுத்தறிவு கொண்டே ஆய்வு செய்வோம்.
இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அதாவது தங்கள் சிந்தனையில் வராதவற்றை எல்லாம்.புலன்களுக்கு எட்டாதவற்றையெல்லாம். மறுத்து விடுவது என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதமாகும். அந்த அடிப்படையில் இறைவனை இவர்களின் அறிவுத் திறமையால் ஆராய்ந்தறிய முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே இறைவனும் இல்லை. மறுமையும் இல்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள்.
பகுத்தறிவின் நிலை…
நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவும். புலன்களும். எந்த அளவு நம்பிக்கைக்கு உரியன என்பதை முதலில் பார்ப்போம். ஏனென்றால் அளப்பதற்கு முன் அளக்கும் கருவி யையும். நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும். கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் அளவையிலும் நிறுவையிலும் தவறுகள் ஏற்ப்பட்டு விடும் என்பதை நாஸ்திக நண்பர்களும் மறுக்க மாட்டார்கள்!
பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய விஷயமான இறைவனையும் இன்னொரு பெரிய விஷய மான மறுமையையும் ஆராயப் புகுமுன். அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான நமக்கு நெருக்கமான தாயையும். தந்தையையும் முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன?
தலை முடியை பிய்த்துக் கொண்டாலும் சுயமாகத் தம் பகுத்தறிவைக் கொண்டு இவர்கள் தம்மைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. உடனே இவர்கள் எனக்கு தாயும். தகப்பனும் இல்லை. நான் வானத்திலிருந்து குதித்து விட்டேன் என்று சொல்வார்கள்?
இங்கு தன்னைப் பெற்றெடுத்தவர்களை அறிந்து கொள்ள இவர்களின் பகுத்தறிவும் புலன்களும் உதவுவதாக இல்லை. ஊரை நம்பி தாயையும். தாயை நம்பி தந்தையையும் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தனக்கு மிகவும் நெருக்கமான பெற்றோரைத் தனது பகுத்தறிவு கொண்டு அறிந்து கொள்ள முடியாதவனா அந்த பகுத்தறிவின் துணை கொண்டு தன்னையும் தன் பெற்றோரையும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கக் கூடிய சர்வ வல்லைமைமிக்க இறைவனை அறிந்து கொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது!
தங்கள் பகுத்தறிவையும் சிந்தனா சக்தியையும் பெரிதாக நம்பும் இந்த நாஸ்திகர்கள் தாங்கள். தங்கள் தாயின் கர்ப்பப்பையில் 10 மாதம் இருந்து வந்ததை தமது சிறு பிராயத்தில் நடந்த சம்பவங்களை சிந்தித்து விளங்கிக் கொள்ள முடிகின்றதா?
கண் முன்னால் பல குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதைப் பார்த்து விளங்குகிறோம் என்று சொல்வது தவறு! அப்படியொரு வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்க விட்டால் தாங்கள் கர்ப்பப்பையிலிருந்து வந்ததை மறுப்பார்களா?
நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன். நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை.அதுவும் மரணத்திற்குப் பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா? என்று சிந்திப்பார்களாக!
அ…ப்…பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2 ம் 2 ம் 4 என்பதைத் தெரியாதவன் 2 ம் 93 ம் எவ்வளவு? என்பதை நிச்சயமாக அறியமாட்டான். என்பதை எவ்வளவு நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறோமோ. அதே போல் பெற்றெடுத்தவர்களை பகுத்தறிவால் அறிய முடியாதவரை இறைவனையும். மறுமையையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும்
ஒன்றுமே இல்லாமல் இருந்து இன்று மனிதனாக உலா வருகிறோமே. இதை முறையாகச் சிந்தித்தால் நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர முடியும்!
உலகில் பார்க்க முடியாதவை பல…
அடுத்து எத்தனையோ காரியங்களை கண்ணால் பார்க்க முடியாமல் அவற்றின் விளைவுகளை வைத்து நாஸ்திகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். உயிர்.காற்று.வலி.மின்சாரம் இவற்றைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் விளைவுகளை வைத்து ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள் சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? என்று எந்த டாக்டரும் சுவைத்துப் பார்த்துச் சொல்வதில்லை அப்படி எந்த நாஸ்திக நண்பரும் எதிர் பார்க்கவும் மாட்டார்.
சிறு நீரில் சர்க்கரையிருந்தால் அதன் விளைவு என்ன என்பதை வைத்தே ஒப்புக்கொள்கிறார்கள். இதேபோல் உடம்பிலுள்ள எத்தனையோ வியாதிகளைக் கண்ணால் பார்த்தோ. புலன்களால் நேரடியாக உய்த்துணர்ந்தோ வைத்தியம் செய்யப் படுவதில்லை வியாதி களின் விளைவுகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை. இவ்வளவுதான் மனிதனின் பகுத்தறிவின் புலன்களின் நிலைகள்.
இந்த நிலையில் இவற்றை வைத்துக் கொண்டு இறைவனையும் மறுமையையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை பகுத்தறிவு கொண்டு புலன் கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவனையும் மறுமையையும் நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக்கொள்வோம் இல்லையென்றால் ஏற்றுக்கொள்;ளமாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது இவர்களின் பகுத்தறிவு வாதத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவத்தை- ஓர்அறஞருக்கும். நாஸ்திகருக்கும் நடந்து முடிந்த போட்டி விபரங்களை அறயத்தருகிறோம்.
அழகிய படிப்பினை…
ஓர் அறிஞர் இறைவன் இருக்கிறான் என்று சொன்னார்;.நாஸ்திகர் ‘உங்களால் அப்படி நிரூபிக்கவே முடியாது பகிரங்கமாக நமது போட்டியை வைத்துக் கொள்வோம் மக்களெல்லாம் பார்வையாளர்களாக இருக்கட்டும்” என்றார். இருவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் நிர்ணயித்த நேரத்திற்கு சரியாக நாஸ்திகர் போட்டி நடை பெரும் இடத்திற்கு வந்து விட்டார் மக்கள் நிரம்பி வழிகிறார்கள் அறிஞரையோ காணவில்லை நாஸ்திகர் முகத்தில் மகிழ்ச்சி களை கட்டியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க முடியாது என்று அஞ்சி அறிஞர் வீட்டிலேயே இருந்து விட்டார் என்று அங்கு பேசிக்கொள்ளப்படுகிறது இந்த நிலையில் தூரத்தில் அந்த அறிஞர் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது வேகமாக வந்த அறிஞர் மேடையில் ஏறினார்!
முதலில் நான் காலதாமதமாக வந்ததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கோள்கிறேன். உரிய நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன்.இங்கு வந்து சேர நான் ஒரு ஆற்றைக் கடந்து வர வேண்டும். வழக்கமாக தோணிக்காரன் இருப்பான் இன்று தோணிக்காரனும் இல்லை தோணியும் இல்லை.
எனக்கு மிகவும் கவலையாகி விட்டது போட்டிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறோமே உரிய நேரத்தில் போகாவிட்டால் அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று என் மனம் மிகவும் வேதனைப்பட்டது திடீரென்று ஒரு அதிசயம் நடந்துது!
அங்கே தானாகவே ஒரு மரம் வந்தது அது தானாகவே தோணியாகத் தயாராகி விட்டது உடனே மகிழ்ச்சியோடு நான் அதில் ஏறி இக்கரை வந்து ஓடோடிவருகிறேன். என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்: நாஸ்திகர் ”என்ன கதை விடுகிறீரா? தானாக மரம் வருமா? தானாத் தோணி தயாராகுமா?’ இதை எந்த முட்டாளும் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அறிஞர், ஆத்திரப்படாமல் நிதானமாக ”சூரியன் தானாக சுழல்கிறது. பூமி தானாக சூழல்கிறது பூமியிலுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால். இவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியமென்றால். சின்னஞ் சிறு காரியமான ஒரு மரம் தானாக வந்து தானாக தோணி உணடாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக்கூடாதோ?” என்று கேட்டார.
இப்போது நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது தனது தவறை உணர்ந்தார் நாஸ்திகப்போக்கை மாற்றிக் கொண்டார். நண்பர்கள் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்களா!
குற்றவாளி தப்பமுடியுமா…?
பகுத்தறிவால் பெறப்படும் முடிவுகள் சரியாக இருக்குமானால் எந்த உண்மையான குற்றவாளி யையும் நீதிபதி குற்றவாளி இல்லையென்று தீர்ப்புக் கூறக் கூடாது நாட்டில் இவ்வாறு நடப்பதில்லை உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப் படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள. நாஸ்திக நண்பர்களே! பகுத்தறிவை மட்டும் நம்பினால் மோசம் போய் விடுவோம் சிந்தித்து திருந்த வாருங்கள். அடுத்து இறைவனையும். மறுமையையும் பகுத்தறிவாலும் புலன்களாலும் மட்டும் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
இறைவனைப் பார்க்க முடியுமா…?
நாஸ்திக நண்பர்கள் ‘ இறைவனைக் காட்டுங்கள் கண்ணால் பார்த்து ஏற்றுக்கொள்கிறோம்” என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர் அதிசயமானஒரு காட்சியையோ. ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன் அதனையே தெய்வமாகவோ. தெய்வாம்சம் பெற்றதாகவோ. ஏற்றுக் கொள்ளும் மன நிலையைப் பெற்று விடுகின்றனர்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? உண்மையான இறைவன் எந்த மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயாமாக இறைவனாக இருக்கமுடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரக் கூடிய ஒன்று நிச்சயமாக சிலக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கடடுபாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?
உதாரணமாக நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும். அப்படியானால் தான் அந்தப் பொருளைப் பார்க்க முடியும்; அந்தப் பொருளுக்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அந்தப் பொருளில் வெளிச்சம் பட வேண்டும் அந்தப் பொருளுக்கும் கண்ணுக்கும் இடையில் திரை இருக்கக் கூடாது. இவை பார்ப்பதற்குறிய நிபந்தனைகளாகும். அந்தப் பொருளுக்கு உருவம் இல்லையென்றால் நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளில் வெளிச்சம் பட வில்லையென்றால்- இருட்டில் இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளுக்கும் கண்ணுக்குமிடையில் சாதாரண ஒரு திரை இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது.
ஆக இவையெல்லாம் சரியாக இருந்து. அந்தப் பொருளிலிருந்து வெளிச்சம் வெளியாகி. அது நம் கண்களின் ஒளித் திரையை (சுயவiயெ) அடைந்திருந்தால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்தப் பொருள் நமது கண்களின் கட்டுப்பாட்டில் வந்தால்மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது மிகவும் சிறிய பொருளாக இருந்தால் அதைப் பெரிதாகிக் காட்டும் ஒரு கருவியின் உதவி கொண்டே பார்க்க முடிகின்றது.
இப்படிப்பட்ட கட்டுப்பாட்டிற்குள்- நிபந்தனைக்குள் வரும் ஒன்று இறைவனாக இருக்க முடியுமா? இப்போது நன்கு சிந்தனை செய்து சொல்லுங்கள். எனவே இறைவனை ஒரு போதும் மனிதர்கள் கண்களால் பார்க்க முடியாது. இப்போது இறைவனைக்காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றக்கொள் கிறோம். என்று சொல்வதே அறிவார்த்தமான வாதமல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் அறிவில் குறைந்தவர்களின் பேச்சாகவே இது இருக்க முடியும்;.
இதர புலன்கள் சம்பந்தப்பட்ட நிலைகளும் இதைப்போன்றுதான் இருக்கும். மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலனின் சக்தியும் வரையறைக்குள் உட்பட்டிருப்பதையே பார்க்க முடியும் ஒரு புலனின் செயலை மற்றொரு புலன் செய்ய முடியாது கண்ணால் தான் பார்க்க முடியும் காதால் பார்க்க முடியாது. காதால் ஒலிகளைக் கேட்க முடியும் கண்ணால் கேட்க முடியாது.
பார்ப்பதற்கு இருப்பதுபோல் கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் நிறைவு பெற்றால் மட்டுமே கேட்க முடியும் ஆக மனிதனுக்குக் கொடுக்கப் பட்டுள்ள புலன்களைக் கொண்டு. ஒரு பொருளை அறிந்து கொள் வதாக இருந்தால் அதற்குறிய நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும் இல்லையென்றால் அறிந்து கொள்ள முடியாது.
பெற்ற தாயையும் தந்தையையும் மனிதன் தனது புலன்களைக் கொண்டு அறிந்து முடியாமல் போனதறகுக் காரணம். அந்தச் சம்பவம் இடம்பெறும்போது இவனது புலன்கள் இருக்கவில்லை. இவனே இருக்கவில்லையே. இவனது புலன்கள் எப்படி இருந்திருக்க முடியும்? ஊரை நம்பித் தாயையும் தாயை நம்பித் தந்தையையும் அறிந்து கொள்ளும் நிர்பந்தமான ஒரு நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். இது மனிதனுடைய பலகீனமான நிலை!
இந்த நிலையுடைய மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். தாயை நம்பித் தந்தையை ஏற்றுக்கொண்டது போல். இறைத் தூதர்களை நம்பி இறைவனை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாதா? இதுவே நமது கேள்வி. சம்பவத்தோடு சம்பந்தப் பட்டிருப்பதால் தந்தையைப் பற்றித் தாய்க்குத் தெரிந்திருக்கிறது. இதேபோல் இறைவனுடன் வஹி என்கிற இறைச் செய்தி மூலமாக தொடர்புடைய இறைத் தூதர்கள் இறைவைனைப் பற்றி அறிந்திருப்பதில் நாம் வியப்படைய என்ன இருக்கிறது? சிந்தனையுடையோர் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்